(Reading time: 4 - 8 minutes)

01. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 1

டம் : என்விஷன் சாஃப்ட் நிறுவனம், சென்னை சிப்காட் மென்பொருள் தொழிற்கூடம்

“என்னடா மப்புல இருக்கியா?”,

என்று மிரட்டும் தோரணையில் அந்த பெண்ணின் குரலோடு அந்த லிப்ட்டின் கதவும் திறந்தது..

Puthir podum nenjamதன் எதிரே நின்றவர்களை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை தான்.. அதில் இருவர் வெள்ளைக்காரர்கள்.. அனேகமாக ‘விசிட்டிங் க்ளையண்ட்ஸ்’களாக இருக்க வேண்டும் என்று கணித்தவளின் பார்வை.... அவர்களுடன் நின்று கொண்டிருந்த அந்த நிறுவன சி.டி.ஓ. ஆர்யமன் மீது தாவியது... அவளை அவன் பார்த்த பார்வையில்.... அதில் இருந்தது திகைப்பா... கண்டிப்பா என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நேற்று அவளுடன் அந்த கம்பெனியில் புதிதாக சேர்ந்த ஐம்பது பேருக்கும் சாஃப்ட் ஸ்கில்ஸ் ட்ரைனிங் கொடுக்க வந்திருந்த பொழுது தான் ஆர்யமன் அறிமுகமாகி இருந்தான்.

அந்த டிரையினிங்கில் எளிய முறையில் தெளிவான விளக்கங்கள் கொடுத்து, தன் வசீகரப் பேச்சால் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் கட்டிப் போட்டவனை பற்றி தான் புதியவர்களிடம் ஒரே பேச்சு.

அவன் ஐ. ஜ. டி. மற்றும் ஐ. ஐ. எம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவன் என்ற கல்வி தகுதி அவர்களை மேலும் வாய் பிளக்க வைத்தது என்றால்... அவன் தோற்றமும், வயதும்.. அவள் ‘batch’சில் இருந்த பெண்களிடையே ரசிகர் பட்டாளத்தையே உருவாக்க... அவனைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அரசல் புரசலாக விசாரித்ததில் அவன் திருமணமானவன் என்பதே பேரிடியை இறக்கியது அவர்களிடம்..

அது மட்டுமில்லாமல் அவன் திருமணத்தை பற்றி பல வதந்திகள் அங்கே நிலவிக் கொண்டிருந்தன...

‘ஓனரின் சொந்தக்கார பொண்ணு மேல இவனுக்கு ஒரு கண்ணு. அவ கல்யாணத்தில் கோல்மால் பண்ணி இவன் மாப்பிள்ளையாகிட்டான்..’ என்றனர் சிலர்.

‘அந்த பொண்ணை லவ் பண்ணவன் காரியம் முடிஞ்சதும் கழட்டி விட பார்த்தான்... பதவி ஆசையை காட்டி இவன் தலையில் கட்டிட்டாங்க..’ என்றனர் சிலர்..

‘இஷ்டமில்லாத கல்யாணம். மார்க்கெட்டிங்ல உள்ள பொண்ணோட சைட் ட்ராக் ஓடுது’ என்றனர் சிலர்...

You might also like - Ainthu... A horror genre story to scare you...

எல்லாமே அவன் நன்மதிப்பை கெடுப்பதாகவே இருந்தன...

‘மூன்று ஆண்டுகளில் வெறும் திறமையை வைத்து மட்டும் உயர் பதவியை எட்ட முடியுமா?‘, என்ற கேள்வியின் விளைவா இந்த வதந்திகள்.. இல்லை அதில் ஏதும் உண்மை இருக்குமோ...

அவளுக்கு தெரிந்த ஒரே உண்மை இது தான். அந்த கம்பெனியில் அவன் வைத்தது தான் சட்டம்! அது நிறுவனரின் நெருங்கிய உறவினன் என்பதாலா... இல்லை அவன் சாமர்த்தியத்தாலா என்பதா?

‘அய்யோடா... நீ அவரை பத்தி ஒரு முடிவுக்கு வர்றதுக்குள்ள அவர் உன்னை பத்தி ஒரு முடிவுக்கு வந்திருப்பார்! கிளையன்ட் முன்னாடி வேணும்னு சொல்லிட்டேன்னு! பே ஸ்லிப் வாங்குறதுக்கு முன்னாடியே பிங்க் ஸ்லிப்பா?!!’

என்று எண்ணிக் கொண்டே பீதியுடன், அவனையும் அவனுடன் நின்ற அந்த இரண்டு வெளிநாட்டு ‘க்ளையன்ட்’களை பார்த்து திரு திருவென முழித்த அந்த பெண்ணின் கைகள் தந்தியடித்த படி காதிலிருந்து போனை எடுக்க....

மிரட்டலாக பேசியவள் தன்னை கண்டதும் மிரண்டு முழிப்பதைக் கண்டதும்...

“ஊப்ப்ஸ்... “, என்று சற்றே பின்னால் நகர்ந்து கொண்டவன்...

“ஸாரி, ஃபார் ஸ்டேன்டிங் ஆன் யுவர் வே ஸ்ருதி!”,

என்றான் இயல்பான தொனியில். அவன் அப்படி ஒன்றும் இடத்தை அடைத்த படி நிற்கவில்லை தான். அவள் சற்றே சகஜமாக உணர வைக்க அவன் முயற்சி செய்ய அவளோ,

‘ஜாயின் பண்ணி இரண்டு நாள் தான் ஆகுது! ஸ்ருதி பிசகாமல், ஸ்ருதின்னு பேரை சொல்றாரே... என்ன ஆப்பு இருக்கோ!’

என்று மேலும் கலங்கி,

“நோ ப்ராப்ளம்... ஸர்.. .. ஸாரி... ஆர்யா ஸர்... ...ஸாரி.... ஆர்யா!”

என்பதை தட்டு தடுமாறி மலுப்பலாக வலிய புன்னகையுடன் சொல்லி விட்டு, விட்டால் போதுமடா சாமி என்ற ரீதியில் வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

கல்லூரி பருவம் வரை சுபீரியர்களை மேம்.. ஸார்.. என்று சொல்லிப் பழகி விட்டு, வேலைக்கு என்று வந்த பின்னர், அந்த அடை மொழிகளை கழட்டி எரிவது கஷ்டம் அதிலும்...

பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றால் கூட, பெயர் சொல்லி அழைக்காமல்.. “அண்ணா, அக்கா” என்று உறவை போட்டு அழைக்கும் கலாச்சாரத்தில் ஊறியவர்களுக்கு திடுமென பெயர் சொல்லி அழைப்பது மிக மிக கஷ்டம்! இன்றைய மென் பொருள் நிறுவனங்களில் இது போன்ற கலாச்சார வழக்கங்கள் கரைந்து போய் தான் விட்டனவே!

‘ஆர்யான்னு சொல்லவா இத்தனை திணறல்.. !’, அந்த பெண்ணின் செயலைக் கண்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டவனாக உடன் வந்தவர்களுடன் லிப்ட்டில் ஏறியவனுக்கு,

உங்க பேர்ல உள்ள அந்த மன்னை தூக்கி போட்டு ஆர்யான்னு மாத்துறீங்க! ரைட் நவ்!’,

என்று வேலைக்கு வந்த அன்றே கண்களை உருட்டி விரலை ஆட்டி ஆட்டி மிரட்டியவளின் முகம் நெஞ்சில் தோன்ற... இதே லிப்ட்டில் அவளை முதன் முதலாக பார்த்த பொழுதினை நினைவு கூர்ந்தவனாய் தன் நினைவலைகளுக்கு சுகமாய் பயணிக்க ஆரம்பித்தான்...

தொடரும்

Episode 02

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.