(Reading time: 17 - 33 minutes)

வீட்டை சுற்றி பார்த்தபடி அவரை பின் தொடர்ந்தவள், அவர் உள்ளே சங்கீதம் எடுக்கும் தன்னறைக்கு அழைத்து சென்றார். தரையில் ஏற்கனவே பாட்டு கிளாஸ்காக பாய் விரிக்கபட்டு, தம்பூரா மூலையில் சாற்றி வைக்க பட்டிருக்க, பைரவிக்கு ஏதோ தெய்வ சன்னிதானத்தில் இருப்பது போல தோன்றியது.

அவளையே பார்த்து கொண்டிருந்த சாரதா, இந்த பெண் ஏன் இப்படி பார்க்கிறது..

"உட்காரும்மா.. தரையில் உட்காருவியோ?" என்றபடி அவர் பாயில் அமர, கலாவும் அவர் எதிரில் அமர்ந்து கொண்டாள்.

'உம். " என்றவள் அவளுமே அங்கே விரிக்க பட்டிருந்த பாயில் அமர்ந்தாள்.

"ஒரு நிமிஷம் " என்றவர், சமையலறைக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து அவளுக்கு கொடுத்தார். "காப்பி சாப்பிடுகிறாயா.. இல்லை ஏதாவது ஜூஸ் கலக்கட்டுமா" என கேட்டவரை,

"சாரதா ஆண்,.. மாமி " என பைரவி இழுக்க,

"மாமின்னே மத்தவா மாதிரி நீயும் கூப்பிடும்மா" என்றவரை பார்த்த பைரவி,

You might also like - Puthir podum nenjam... A new romantic story...

 

"சரி மாமி.. இப்பொழுது எதுவும் வேண்டாம்.. இந்த தண்ணீரே போதும்"

"சரி, சொல்லும்மா .. பைரவி நான் உனக்கு எந்த விதத்தில் உதவ முடியும்.. நீ ஏற்கனவே நன்னா கர்னாடக சங்கீதம் பாடுவேன்னு கலா சொல்லியிருக்கா.. நீ ஏதாவது இவாளை மாதிரி ஸ்பெஷலைஸ் பண்ணறியா? .. இல்லை பொழுது போக்குக்காக பாட்டு கத்துக்கறயா?.. நீ நிறைய கச்சேரி கூட அமெரிக்காவில் பண்ணியிருக்கியாம்?.. கலாதான் சொன்னா.. உன் குரு வேதவல்லி வேங்கடாச்சாரியோட கச்சேரியை நான் கேட்டிருக்கேன்.. நல்ல சங்கீத ஞானம் அவாளுக்கு" மேற் கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் சாரதா பைரவியை பார்க்க,

"மாமி, நான் ஆக்சுவலாக டாக்டருக்கு படித்திருக்கேன்.. இப்போ, பிஹெச்.டி. பண்ணறேன்.. எனக்கு என்னவோ சின்ன வயசிலிருந்தே சங்கீதத்து மேலே ரொம்ப ஆசை.. எங்கப்பா டாக்டர். அம்மா ஹோம் மேக்கர்.. அப்பாவுக்கு சங்கீதம்ன்னா கொஞ்சம் பிடிக்கும்.. எனக்கு பிடிச்சிருக்குன்னு எனக்கு பாட்டு சொல்லி தர ஏற்பாடு பண்ணா”.

“ஒரளவுக்கு எல்லாமே கத்துண்டு இருக்கேன்.. வேதா மாமி தனக்கு தெரிஞ்சதை எல்லாம் நல்லாவே சொல்லி தந்துருக்கா.. நான் இப்ப சங்கீதத்தை என் படிப்போட சம்மந்த படுத்துகிற மாதிரி, ஒவ்வொருத்தர் ஜீன்லேயும் சங்கீதம்ங்கறது பரம்பரையா வரதா, இல்லை சங்கீதம் நம்ம இரத்ததில் இல்லையென்றாலும் , ஸ்பெஷலைஸ் பண்ணா பாட்டு வருமா.. இதை பற்றி தான் நான் ஆராய்ஞ்சிண்டு இருக்கேன்.. அது சம்மந்தமா தான் நான் இந்தியாவுக்கு முதல் தடவையா வந்திருக்கேன்" என்ற பைரவிக்கு,

"வாவ் .. சுப்பராக இருக்கே உங்க ஆராய்ச்சி.. உங்கள மாதிரியே அழகாவும் இருக்கு " என்றபடி அங்கே வந்தாள் மஹதி.

யார் இது என்று ஆச்சர்யமாக பார்த்தாள் பைரவி.

அவள் பார்வையின் பொருளை உணர்ந்த சாரதா, "என்னோட மூன்றாவது பொண்ணு மஹதி.. ஒரு கிளினிக்கில் பேதாலஜிஸ்ட்டாக வேலை பார்க்கிறாள். எம்.எஸ்.சி. பயோ டெக்னாலஜி படிச்சிருக்கா" என்று பைரவிக்கு சொன்னவர், தன் மகளிடம் திரும்பி,

"மஹி.. இவா தான் அன்னிக்கு கலா சொன்னளே, அமெரிக்காவில் அவ பிரண்டு ஸ்கைப் கிளாஸ் கேட்டான்னு.. எதோ ஆராய்ச்சிக்காக இந்தியா வந்திருக்காலாம்.."

"சுப்பர்.. பைரவி.. நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க.. உங்க ஆராய்ச்சி கூட புதுமையா இருக்கு.. என் பாராட்டுக்கள்.. அது சரி பைரவி, இந்த மாதிரி எல்லாம் ஆராய்ச்சி பண்ண முடியுமா என்ன? எனக்கு ஆச்சர்யமாக இருக்கு" என்ற மஹதிக்கு,

"ஏன் முடியாது மஹதி.. சங்கீதத்துக்கும், நம்ம பரம்பரைக்கும் சம்மந்தம் இருக்கிறது.. எதோ ஒரு மூலையிலாவது தொடர்பு இருக்கும்.. அதை பற்றி தான் இந்த ஜீன் பேட்டர்னில் ஆராய்ச்சி செய்கிறேன்.. ஏற்கனவே நிறைய கண்டு பிடிச்சிருக்கேன்.. பார்க்கலாம் , இது எவ்வளவு தூரத்துக்கு முடியும்ன்னு"

"பைரவி, நீங்க நல்லா தமிழ் பேசிறீங்க"

"அமெரிக்காவில் இருந்தாலும் அம்மா ரொம்ப கண்டிப்பு.. கட்டாயம் வீட்டில் தமிழ் தான்.. அதான் பழகி போச்சு.. இன்னும் ஒன்று தமிழ் நல்ல தெரிஞ்சதுனாலே பாட்டும் அனுபவித்து பாட முடியுறது..என்ன கொஞ்சம் போல் அமெரிக்கன் ஆக்சென்ட் இருக்கும்."..

"சரிம்மா பைரவி சொல்லு, இப்ப உன்னோட ப்ரொக்ராம் என்ன.. நீ எத்தனை நாள் இங்கே இருப்பே?.. உன்னுடைய இந்த இந்தியா டிரிப், உன் ஆராய்ச்சிக்காவா இல்லை, வேறு எதாவதா.. " கேட்ட சாரதாவை,

ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் பார்த்தாள் பைரவி.

பின்னர், "மாமி, இரண்டும் சம்மந்தப்பட்டது.. எனக்கு மராட்டி அபங் பாடல்கள் கற்று கொள்ளனும்னு ஆசை..நீங்க அதிலே ஸ்பெஷலிஸ்ட்டாம்.. கலா சொன்னா.. நான் மே பீ, இன்னும் ஒரு மாசமோ, இரண்டு மாசமோ இருப்பேன்.. இருக்கறவரை கொஞ்சமாவது உங்ககிட்ட பாட்டு சொல்லிக்கனும்.. நான் அப்புறமா அமெரிக்கா போனாலும், ஸ்கைப் கிளாசஸ் வைச்சுக்கலாம்"

"சரிம்மா.. முதல்ல நான் உன்னோட குரலை கேட்கனும்.. கீர்த்தனை எதாவது பாடேன்"

சற்று நேரம் அமைதியில் கழிய,

"முதல்ல உங்களை நமஸ்காரம் செய்யறேன் மாமி" என்ற பைரவி, சாரதாவை கீழே விழுந்து நமஸ்கரிக்க, "தீர்க்காயுசா இருடி குழந்தே.. ஷேமமா இருக்கணும்" என்று ஆசிர்வத்தித்தார் சாரதா.

மெல்ல தன் தொண்டையை சரி படுத்தியபடி,

"நீ தயராதா...காதனே வாரெவரு கல்யாண ராம (நீ தய)"

வசந்த பைரவி ராகத்தில் தியாகராஜ கீருதியை கண்களை மூடி அனுபவித்து பாடினாள் பைரவி. அங்கே அமைதி சூழ்ந்தது..

மஹதி ஆச்சர்யத்துடன் பைரவியை பார்க்க, சாரதாவோ அதிர்ச்சியில் பைரவியை ஆழ்ந்து பார்த்தபடி தன்னையறியாமல் கண்களில் நீர் வழிய உட்கார்ந்திருந்தார்.

பாடல் மூடிய, பைரவி சாரதா மாமியை பார்க்க,

"அம்மா.." என மஹதி அழைக்க,

சற்று சுதாரித்து, தன் கண்களை துடைத்தவரை புரியாமல் பார்த்தாள் பைரவி.

"மாமி என்னாச்சு.. எதாவது தப்பு பண்ணிட்டேனா.."

அங்கேயிருந்த கலா என்ன சொல்லுவது என்று தெரியாமல் அவர்களை மாறி மாறி பார்க்க,

மஹதி, "ஒன்றுமில்லை பைரவி.. ரொம்ப நல்லா பாடினே.. அம்மாவுக்கு இந்த பாட்டுன்னா உயிர்.. வசந்த பைரவி ராகம் அவருக்கு பிடிச்சது.. எப்பவும் இதை யார் பாடினாலும் உணர்ச்சி வசப்படுவா?.. வேற ஒண்ணுமில்லை .. அம்மா என்னம்மா.. சொல்லு"

"சாரி பைரவி, மஹி சொல்லறா போல எனக்கு இந்த பாட்டை கேட்டாலே கண்ணில தண்ணீர் வந்துடும்.. அதை விடு.. ரொம்ப அருமையா பாடினேம்மா.. மஹி இந்த பாட்டு பாடுவா.. ஆனா இந்த அளவுக்கு இவ்வளவு நேர்த்தியா நான் யார் பாடியும் கேட்கலை.. உனக்கு என்ன சொல்லிகணுமோ எனக்கு தெரிந்தது எல்லாம் நான் சொல்லி தரேன்.. சங்கீதம்ன்றது எல்லாருக்கும் வராதும்மா.. அதை தயவு செய்து விடாதேம்மா.. உனக்கு சாட்சாத் அந்த சரஸ்வதியோட அருள் நிறைஞ்சு இருக்கு.. நீ நன்னா இருக்கனும் " என்றவர்,

"சரிம்மா .. நீ எத்தனை நாள் இந்தியாவில் இருக்கியோ நீ வந்து எங்கிட்ட கத்துக்கோ.. உனக்கு சௌகர்யபட்டா தினமே உனக்கு சொல்லி தரேன்"..

"மாமி.. உங்க பீஸ் என்னன்னு சொல்லுங்கோ.. எனக்கு தினமுமே கிளாஸ் எடுத்தா பரவாயில்லை.. எனக்கு வெளியிலே போற வேலை அப்படி ஒன்னும் இல்லை.. என் ஆராய்ச்சி சம்மந்தமா காலையிலே கொஞ்சம் போக வேண்டியிருக்கும்..சாயங்காலம் இந்த டயம் உங்களுக்கு சரிபடுமா?"

"பீஸ் .. எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலைம்மா?.. கலாகிட்ட கேட்டுக்கோ.. நீ நன்னா கத்துண்டு போனாலே எனக்கு அதுதான் ஆத்ம திருப்தி"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.