(Reading time: 21 - 41 minutes)

01. உன்னால் மகுடம் சூடினேன்...!!! - அக்தர்

சூரியன் ஒரு முடிவோடு மலையின் மறைவில் ஓய்வெடுக்க போய்விட வானத்தில் சின்ன சின்ன நட்சத்திரம் கண்ணிமைத்து நிலவை அழைக்கும் மயங்கிய மாலை நேரம் எல்லோர் மனதிலும் இதமான மனநிலையை தூவி சென்றது. மும்பை நகரம் லோவர் பேர்லலில் வீற்றிருந்த பெரிய வீட்டின் மொட்டை மாடியில் சாய்வு நாற்காலியில் கால்களை மடக்கி அமர்ந்துப்படி வானத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் இந்திரா. குளிர் காற்று தலை முடியை கலைத்து விளையாட அதை ஒதுக்கி விட்டவாறு கண் மூடியவளின் மனதில் பழைய நினைவுகள் நிழலாடியது. இந்திரா படித்து வளர்ந்தது எல்லாம் மதுரையை சார்ந்த துவரிமான் கிராமத்தில் தான். தந்தை சிவராமனிடம் அழுது புரண்டு சட்டப்படிப்பை படித்தே தீருவேன் என்ற பிடிவாதத்தோடு மதுரை சட்ட கல்லூரியில் ஐந்தாண்டு படிப்பை படித்து முடித்தாள். தாயில்லா பிள்ளையென சிவராமனும் ஆசை மகளின் விருப்பத்திர்கு எப்பொழுதும் குறுக்கே நின்றதில்லை. "எதுக்குய்யா பொட்டப்புள்ளைக்கு சட்டப்படிப்பு...சோறாக்க தெரிஞ்சா போதாதாப்பு..." என நக்கல் பேசும் சொந்தங்களிடம் "படிக்குட்டும்யா...என்ன கொறஞ்சு போயிட போகுது இப்போ.." என்று சாமார்த்தியமாக சமாளித்துவிடுவார்.

தந்தையின் தாயார் நளாயினியின் உடல் நலம் சரியில்லையென இந்திரா மருத்துவமனை சென்ற நாள் தான் விதி தன் வில்லங்கத்தனமான விளையாட்டை அவளிடம் காட்டியது. இந்திராவின் தாய் பாரதியின் அண்ணன் பிரபாகரன்  படிக்கும் காலத்தில் மும்பைவாசி நிரஞ்சனாவை காதலித்து பெற்றோரை எதிரித்து திருமணம் செய்தவர். பாரதி இறப்புக்கு வந்ததோடு சரி அதன் பின் ஊர் மண்ணை மிதித்ததே இல்லை. நளாயினியை பார்க்க வந்தவர் தன் தங்கையை உருவத்தில் உரித்து வைத்திருக்கும் இந்திராவை கண்டு உறைந்தே போனார்.  தன் கடைசி மூச்சை இன்றோ நாளையோ என இழுத்து பிடித்திருக்க ஒரு பேரப்பிள்ளையின் திருமணத்தையாவது பார்த்து விட வேண்டுமென நளாயினியும் ஆசைப்பட, பேசிப்பேசி அது கடைசியில் இந்திராவின் தலையிலும் பிரபாகரன் நிரஞ்சனாவின் மூத்த ஆண் பிள்ளை ஆர்யனின் தலையிலும் நச்சென்று விடிந்தது. தந்தையின் கண்ணீரில் உருகி இந்திரா சரியென்று கூறிவிட ஆர்யன் தான் முடியவே முடியாது என பிடித்த பிடியை தளர விடாமல் நின்றான். கடைசியில் அவனையும் சரி கட்டி ஒருவாறு பெரியவர்கள் ஒன்று கூடி இரு சண்டித்தனம் செய்த குதிரைகளையும் திருமணம் என்ற வண்டியில் இழுத்து பூட்டியே விட்டனர். இதோ இருவருக்கும் திருமணமாகி இன்னும் நான்கு நாட்கள் போனால் இரண்டு மாதங்கள் ஆகி விடும்.

Unnal magudam sudinen

"இங்க இருக்கியா டா... உன்னை கீழ தேடிட்டு இருந்தேன்.." என்ற குரல் கேட்ட நிமிர்ந்தவளின் முன் சிரித்தப்படி நின்றிருந்தார் நிரஞ்சனா. உறவினர் விசேஷத்திர்கு சென்ற கதையை கூறியப்படி கையில் வைத்திருந்த இனிப்பு பெட்டியிலிருந்து ஒரு பால் பேடாவை எடுத்து இந்திராவின் வாயில் திணித்தாள் அவளின் அன்பு மாமியார். நிரஞ்சனாவை காண ஒரு சாயலில் சினிமா நடிகை ரேவதி போலிருக்க இந்திராவிர்கு தன் அத்தை மாமாவை காணும் போதெல்லாம் ஏனோ அஞ்சலி பாப்பா திரைப்படத்தில் நடித்த ரேவதி ரகுவரன் ஜோடி தான் நியாபகத்திர்கு வரும். இரு மகன்களின் தாய் என கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படியொரு இளைமையான உடல்வாகு நிரஞ்சனாவிர்கு. "ரொம்ப லோன்லியா ஃபீல் பன்றியா டா...? நாளைக்கு காலையில வேணா அவ்டிங் போலாமா..? " என்று கனிவுடன் கேட்ட அத்தையை சிரிப்புடன் பார்த்து "இல்லைம்மா நான் நாளைக்கு பிரபாப்பா கூட லாயர் ரவீந்தர் சார் பார்க்க போறேன்... ரீசன்ட்டா அவர் தான் இப்போ இருக்க  கேசஸ் ஹேண்டில் பன்றாராம். பிரபாப்பா அவரோடு க்ளோஸ் ஃப்ரெண்ட்னால அவர் கிட்டயே ஜூனியரா கொஞ்ச நாளைக்கு போக சொன்னாரு.." என்றாள் இந்திரா  எதிர்ப்பார்ப்புடன். மருமகளின் சந்தோஷத்தை கண்டு முகம் மலர்ந்தவர் "அதுவும் சரி தான்.... அஞ்சு வருஷ படிப்பு வேஸ்டாயிட கூடாது..." என கூறியவள் ஏதோ கூற வந்து சற்று தயங்குவது போல் நிறுத்தி சில நொடி சிந்திப்பிர்கு பின் "ஆர்யன் இப்போ உன்கூட சந்தோஷமா தானடா இருக்கான்..." என்றார் பதட்டத்தை மறைத்த குரலில். நிரஞ்சனாவின் திடீர் கேள்வியில் சற்று திகைத்தாலும் மறு நொடியே தன்  முகத்தில் சிரிப்பை குடியேற்றியவள் சங்கடமாக ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினாள். அதற்காகவே காத்திருந்தது போல் இழுத்து பிடித்த ஒரு நீண்ட மூச்சை சுவாச கூட்டிலிருந்து நிம்மதியாக வெளியாக்கியதோடு "ஹப்பா...இப்போ தான் சந்தோஷமா இருக்குடா.." என இந்திராவின் தலையை அன்போடு கோதிவிட்டாள். நிரஞ்சனாவிர்கு பெண் பிள்ளைகள் இல்லாத குறையை இந்திரா தீர்த்து வைத்தாள் என்றால் பிரபாகரனுக்கு தங்கையின் மகளை காண 'தன் குடும்ப உறவு' என்ற எண்ணம் பெரிய சந்தோஷத்தை தந்தது. இந்திரா  ஆரம்பித்திலிருந்தே இருவரையும் அம்மா, பிரபாப்பா என அழைத்தே பழகிவிட்டாள்.

You might also like - Puthir podum nenjam... A new romantic story...

 பனிக்காலம் ஆரம்பித்ததால் அதிக நேரம் குளிர் காற்றில் நின்றால் உடலுக்கு கேடு என நிரஞ்சனா இந்திராவை அழைத்து கொண்டு கீேழ செல்லவும் பிரபாகரன்  மகன் ஆதித்யாவுடன் பேசியப்படி வீட்டினுள் வரவும் சரியாக இருந்தது. இந்திராவை கண்டதும் "ஹே மை டியர் இந்துமா... வாட்ஸ் அப்.." என்றார் பிரபாகரன் காலையில் எழுந்தது போன்ற புத்துணர்வான குரலில். பிரபாகரனை பார்த்து இந்திரா வியந்த முதல் விஷயம் அவரின் சுறுசுறுப்பும் நிதானமும் தான். தோழமையோடு பேசுவதிலும் பழகுவதிலும் தன் மாமனாரை அடித்துக் கொள்ள ஆளில்லை என ஒருமுறை அவரிடமே வாய் விட்டு  கூறியிருக்கிறாள். ஆதி மும்பையிலுள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறான். மருமகளும் மாமனாரும் வாயடித்து கொண்டிருக்க "அண்ணி சாப்பிட்டே கூட பேசலாமே.." என்றான் ஆதி காரியத்தில் கண்ணாக. அவனின் பேச்சில் சிரித்த இந்திரா "சாரி சாரி ஆதி... வாங்கப்பா போய் சாப்பிடலாம்.." என பிரபாகரனையும் இழுத்துக் கொண்டு நால்வரும் அமர்ந்து சித்தாராவின் கை மணத்தில் செய்த வடநாட்டு ஸ்பெஷல் ஐட்டம்களை ருசித்து சாப்பிட்டனர். சித்தாரா, ஆதி சிறு வயதாக இருக்கும் போதே சமையல்க்காரியாக வந்து இன்று இந்த குடும்பத்தில் ஒருத்தியாகவே மாறிப் போனவள். கணவனை இழந்து தன் இரண்டு பெண் பிள்ளைகளின் படிப்பு செலவை யாரிடமும் கையேந்தாது தனது உழைப்பில் அவர்களை படிக்க வைத்து கொண்டிருக்கும் நேர்மையானவளும் கூட. உண்டு முடித்து சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு அவரவர் அறையினுள் சென்று முடங்கினர். மெத்தையில் அமர்ந்தவளின் கண்முன் சுவரில் கிட்டார் வைத்து வாசித்தப்படி ஆர்யனின் ஆளுயர புகைப்படம் என்றும் போல் இன்றும் அவளை பார்த்து தன் வசீகரமான சிரிப்பை உதிர்த்தது. மும்பையில் வந்திறங்கிய முதல் நாளே இருவருக்கும் எதிலும் ஒத்துப் போகவில்லை. ஆர்யனின் முகத்தை இந்திரா அவன் தன் உரிமையை அவள் கழுத்தில் நிலைநாட்டும் போது தான் சரியாக பார்த்தாள். ஆறடி உயரமும் கூர் நாசியும் நேருக்கு நேர் பார்க்கவே தயக்கம் தரும் கூர்மையான கண்களும் அவளை ஈர்த்தாலும் தன் தடுமாற்றத்தை அவன் முன் காட்டக் கூடாது என்ற முடிவில் கவனமாக இருந்தாள். இந்த இரண்டு மாதத்தில் பெற்றவர்கள் முன் ஆஸ்கர் அவார்ட் வாங்குமளவு நடித்துக் கொண்டாலும் தனியறையினுள் 'என் விஷயத்தில தலையிடாத, மைன்ட் யுவர் வேர்ட்ஸ், உன் வேலைய மட்டும் பாரு, ஜஸ்ட் கெட் லோஸ்ட்' என்ற சில வாக்கியங்கள் மட்டுமே இருவரின் உரையாடல்களாய் போனது. அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றது தெள்ளத் தெளிவாய் தெரிந்தாலும் காரணம் என்னவென்று இவளும் யோசித்ததில்லை அவனும் கூறியதில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.