(Reading time: 20 - 39 minutes)

சில நாட்கள் முன்னால் வரை ரிஷியின் திரைப்படங்களை ஒன்று விடாமல் பார்க்கும், மிகத்தீவிர ரசிகனாகவே இருந்திருக்கிறான் திவாகர். ரிஷியின் கட் அவுட்களுக்கு பல முறை பாலபிஷேகங்கள் கூட நடத்தி இருக்கிறான் திவாகர். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அவனது தங்கை இறந்து போகும் வரை!!!! கடைசி நேரத்தில் சில உண்மைகளை உடைத்து விட்டு அவள் இறந்து போகும் வரை!!!!

அவர்கள் மூவரும் உள்ளே நுழைய, அந்த மிகப்பெரிய ஹாலில் இருந்த அத்தனை கண்களும் இவர்கள் மீதே. எல்லார் முன்னிலையிலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாமல் ரிஷியின் அம்மா , அப்பா இருந்த அறைக்குள் நுழைந்தனர்.

வைதேகி, ராமன், அருந்ததி மூவரும் அவர்களை சூழ்ந்துக்கொள்ள விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்தவனாக அறைக்குள் நுழைந்து மூச்சு வாங்க அவர்கள் அருகில் வந்து நின்றான் சஞ்சா.

அவளுக்கான ஆதங்கமும், தவிப்பும் ,நெகிழ்ச்சியுமாக எல்லார் பார்வையும் அவளை மையம் கொண்டிருக்க விழி அசைக்க கூட மறந்து சஞ்சா அவளையே பார்த்திருக்க எல்லாருக்கும் நடுவில் நிறைவான சிரிப்புடனும் தோளில் குழந்தையுடனும் நின்றிருந்தாள் அவள்!!!

You might also like - Rojavai thalattum thendral... A breezy romantic story 

அவள்!!! வேறே யாரும் இல்லை!!! நம் அகல்யா!!!

ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்தித்த உணர்விலேயே இருந்தான் ரிஷி. எல்லாரையும் விட்டு விலகி, பேசாமல் போய் ஜன்னலின் அருகில் நின்று வெளியே பரவிக்கிடந்த இருட்டை வெறிக்க துவங்கினான் அவன்.

திவாகர் அங்கே நின்றிருக்க எதையுமே பேச விரும்பவில்லை யாரும். சற்றே முன்னால் வந்து அகல்யாவின் கையை முதலில் பிடித்துக்கொண்டது அருந்ததி. அவள் கரத்தை இதமாக அழுத்திக்கொடுத்தவளுக்கு மனதில் எழுந்த உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை.

அருகே வந்து அஹல்யாவின் கன்னம் வருடின வைதேகியின் விரல்கள். வார்த்தைகள் வெளி வரவில்லை அவருக்கு. காப்பாற்றி இருக்கிறாள் இந்த பெண். அவரது கண்ணீர் வெளி வரமால் தடுத்திருக்கிறாள். இதுவரை எதற்கும் அழுததில்லை வைதேகி. ஆனால் இப்போது அவர் இருக்கும் சூழ்நிலை??? எந்த நேரத்திலும் கண்ணீர் துளிர்க்க வாய்ப்பு இருக்கிறதோ???

'ஒரு வேளை ரிஷி அங்கே பேசி இருந்தால்???? சில உண்மைகள் வெளியே வந்திருந்தால்??? அவன் துவண்டு விழுந்திருந்தால்????  கன்னம் தொட்டிருக்குமோ என் கண்ணீர்???' கிட்டதட்ட அதே மனநிலையில் அஹல்யாவின் தலையை வருடிக்கொடுத்தது ராமனின் வலக்கரம்.

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க, இமைக்க மறந்த இரு விழிகள் அவளை விட்டு அகலாமல் கிடப்பதை அவளால் நன்கு உணர முடிந்தது. தெரிந்த போதும் விழி நிமிர்த்தவில்லை, நிமிர்த்த முடியவில்லை அவளால்..பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு அவளை நோக்கி தானகவே அடி எடுத்து வைத்தான் அந்த விழிகளுக்கு சொந்தக்காரன் சஞ்சா. வந்து நின்றான் அவளருகில்

தோளில் கிடந்த குழந்தையின் முதுகை விரல்களால் வருடியபடி தரை தொட்டு கிடந்தது அவள் பார்வை. எதுவுமே பேசாமல் அவள் தோளில் கிடந்த குழந்தையை தொட்டு, தூக்கி முத்தமிட்டு தனது தோளில் சாய்த்துக்கொண்டான் சஞ்சா. தன்னாலே நிமிர்ந்தன அஹல்யாவின் விழிகள்.'

பார்வை சங்கமம். சடக்கென நீர் திரையிட்ட கண்களின் வழியே அவன் முக தரிசனம். 'இனிமே நான் உன் பக்கம் கூட திரும்ப மாட்டேன். ஞாபகம் வெச்சுக்கோ.' சில நிமிடங்களுக்கு முன்னால் எரிச்சலுடன் சொன்னவனின் முகத்தில் இப்போது நன்றியின் பாவம். 'வெறும் நன்றி எனும் வார்த்தை அவள் செய்ததற்கு ஈடாகாது என்பதை அறிந்துக்கொண்டு விட்டவனின் சின்ன புன்னகை வருடல்.

'போதும்... வாழ்க்கை முழுவதற்கும் இது போதும் என்று தோன்றியது அவளுக்கு. அவனுடன் பல நாட்கள் சேர்ந்து வாழ்ந்து விட்ட நிறைவு. மெல்ல தாழ்ந்தன அவள் இமைகள்.

திவாகர் அனைவரையும் மாறி மாறி  திகைப்புடன் பார்த்துக்கொண்டு  நின்றிருந்தான். அவன் இதுவரை திரையில் மட்டுமே பார்த்திருந்த நட்சத்திரங்கள் அவனை சுற்றி நின்றிருக்க... அடுத்து எதை சந்திக்க வேண்டி வருமோ என்ற பயத்தில் மனம் அலைப்பாய்ந்துக்கொண்டிருக்க, அதையும் மீறி அவன் பார்வை ரிஷியை அடைந்தது.

அவ்வப்போது தலையை இடம் வலமாக அசைத்துக்கொள்வதும், ஜன்னல் கம்பியின் மீது கையால் குத்துவதும், கைகளால் முகத்தை தேய்த்துக்கொள்வதுமாக சஞ்சலத்தின் பிடியில் நின்றிருந்தான் ரிஷி. அந்த நிலையிலும் எல்லாவற்றையும் தாண்டி தனது கண்கள் ரிஷியின் ஒவ்வொரு அசைவையும் ரசிப்பத்தை திவாகரால் தவிர்க்கவே முடியவில்லை.

திவாகரின் பார்வை ஓட்டங்களை முதலில் படித்தவன் சஞ்சாவாகத்தான் இருந்தான். குழந்தையை கொண்டு போய் அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்தவன், நேராக திவாகரிடம் வந்தான்.

'குழந்தையை என்ன பண்ணி வெச்சிருக்கீங்க?' என்றான் தீவிரமான முகத்துடன்.

'தூக்க மாத்திரை மட்டும் தான் கொடுத்தேன். பிரச்சனை பண்ணகூடாது அப்படிங்கிறதுக்காக' நடுங்கும் குரலில் சொன்னான் திவாகர்.

ஒரு பெருமூச்சுடன் கைப்பேசியில் டாக்டரை அழைத்து, மண்டபத்திற்கு வரச்சொல்லி விட்டு மறுபடி திவாகரை நோக்கி திரும்பினான்

'ப்ரதர் .....நான் உங்ககிட்டே கொஞ்சம் தனியா பேசணுமே வரீங்களா?'

'ச... சஞ்சீவ்.. ச... சா..ர்...' திணறினான் அவன். 'நான் ரிஷி.. ரிஷி சார் கிட்டே பேசணும்...' நான் அவர்கிட்டே எல்லா உண்மையும் சொல்லிடறேன்.' விருட்டென திரும்பினான் ரிஷி.

திவாகரை ஊடுருவி கிழிக்கும் கத்தி முனை பார்வையுடன் இடம் வலமாக தலை அசைத்தான் சஞ்சா. ' நோ... என்ன பேசணுமோ என்கிட்டே பேசுங்க...நான் ரிஷியும் ஒண்ணுதான்...'

'ரிஷி சா..ர்..' அவன் திரும்பி ரிஷியை பார்த்து ஏதோ சொல்ல வாயெடுக்க அவனை பேச விடாமல்....

'குழந்தையை பார்க்க டாக்டர் வருவார். கொஞ்சம் கவனிச்சுக்கோடா' ரிஷியை பார்த்து சொல்லிவிட்டு  திவாகரின் தோளை அணைத்து தன்னோடு தள்ளிக்கொண்டு நடந்தான் சஞ்சா.

திவாகரை பற்றிய எதையும் இப்போது தலையில் போட்டுக்கொள்ள தோன்றவில்லை ரிஷிக்கு. அவன் நகர்ந்தது தான் தாமதம் அஹல்யாவின் அருகில் வந்து

'.வொய்? வொய்? வொய் அஹல்யா? எதுக்கு இப்படி பண்ணே? என்னை காப்பாத்தவா?' 'அந்த இடத்திலேயே எல்லார் முன்னாடியும் உன்னை அறையணும் போலே இருந்தது எனக்கு .' அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆதங்கத்தில் பொங்கினான் ரிஷி.'

'நான் இதை செஞ்சது உங்களை காப்பாத்தறதுக்கு மட்டும் இல்லை ரிஷி அவங்களை திருப்பி அடிக்கறதுக்காக. நீங்க வெளியிலே போய் நின்னதும்தான் தோணிச்சு. நான் வந்து நின்னா எந்த கேள்வியும் கேட்காம அவங்க கலைஞ்சு போயிடுவாங்கன்னு புரிஞ்சது.. வேறே யாராலையும் இது முடியாது ரிஷி.' நிதானமாக பதில் சொன்னாள் அஹல்யா.

'என்னாலே ஏத்துக்கவே முடியலை அஹல்யா. என்ன தான் உன் மேலே ஆயிரம் கோபம் இருந்தாலும், நீ சஞ்சாவோட பழக ஆரம்பிச்ச காலத்திலிருந்து நான் உன்னை என் தங்கையா தான் பார்த்திருக்கேன். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உன் வாழ்க்கையை பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா? ஊருக்குள்ளே தாறு மாறா பேசுவானுங்க அகல்யா...'

'அதான் அண்ணன்ன்னு சொல்லிடீங்களே நீங்க இருக்கும் போது இனிமே என் வாழ்கையை பத்தி நான் எதுக்கு கவலை படணும்?' என்றாள் புன்னகையுடன் .'இது எனக்கு ஒண்ணும் புதுசு இல்லை ரிஷி.. இண்டஸ்ட்ரிலே மட்டும் இல்ல எல்லா இடத்திலேயும் எனக்கு எப்பவுமே கெட்ட பேர்தான். நானா இழுத்து விட்டுக்கிட்டது பாதி. அதுவா வந்தது மீதி.' என்றபடியே குழந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள் அஹல்யா.

'உங்களுக்கு சஞ்சா சொல்லி இருப்பான். ஒரு காலத்திலே என் வாழ்க்கையிலே குழந்தைகளே வரக்கூடாதுன்னு சொன்னவ நான். அவனுக்கு குழந்தைகள் பிடிக்கும் அப்படிங்கிற பயத்திலேயே நான் அவனை தூக்கி போட்டேன். அதே மாதிரி என்னை ஒருத்தன் ஒரு மாசத்திலே தூக்கி போட்டான். அதுக்கப்புறம் அப்படியே சுத்தி சுத்தி இப்போ இந்த குழந்தை கிட்டே வந்து நிக்குது என் வாழ்க்கை. ஒரு வேளை இனிமே இதுதான் என் வாழ்க்கையோ என்னவோ?' சில நொடிகள் அந்த குழந்தையின் முகத்தையே பார்த்திருந்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.