(Reading time: 16 - 32 minutes)

13. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

ராமமூர்த்தி, "வாங்கோ... வரணும், வரணும்"  என்று சம்பிரதாயமாக வரவேற்று,  "வீடு ஈசியாக கண்டு பிடிக்க முடிந்ததா?"  என விசாரித்தார்.

பையனின் தாயார், "நாங்க இரண்டரை மணிக்கே கிளம்பி விட்டோம்.. ஞாயிற்று கிழமை கூட டிராபிக் போங்கோ.. உங்காம் வேறே ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்கு"

மாம்பலம் இவாளுக்கு ஒதுக்கு புறமாம்.. இவா இருக்கிற அம்பத்தூர் தான் ஊருக்கு ஒதுக்கு புறம்.. என்ன செய்வது, நினைப்பதை வெளியில் சொல்ல முடியுமா என்ன, பெண்ணை பெற்றவர் ஆயிற்றே?..

vasantha bairavi

"ஹீ .. ஹீ .."  என இளித்து வைத்தார்.

அதற்குள் சாரதா, "வாங்கோ மாமி, வாங்கோ" என பொதுவாக வரவேற்று அவரை காப்பாற்றினார்.

மாப்பிள்ளை பையனும், அவன் தந்தையும் எதுவும் பேசாமல் தலையாட்டி விட்டு உள்ளே செல்ல, அவர்களை ராமமூர்த்தி உட்கார சொல்ல, அங்கே இருந்த ஒற்றை சோபாவில் ஏற்கனவே காலையாட்டியபடி உட்கார்ந்திருந்த சிவகுமாரை பார்த்து விட்டு, புன்னகைத்தபடி, மூன்று பேர் அமரக் கூடிய சோபாவில் டாக்டர் குடும்பம் அமர்ந்தது.

ராமமூர்த்தி, கார்த்திகேயனை பார்க்க, மீதம் இருந்த ஒற்றை சோபாவில் அவரை அமரச் சொன்னவன், ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான். வீட்டு பெண்கள் தரையில் ஒரு பக்கமாக விரித்திருந்த பாயில் அமர்ந்து கொண்டனர்.

சம்பிரதாய அறிமுகப் படலம் ஒரு வழியாக முடிய,

மாப்பிள்ளை விஜய்யின் தாயார் "உஸ்..  உஸ்.. " என மேலே ஓடிய ஃபேனை பார்த்தபடி பெருமூச்சை விட்டுக் கொண்டிருந்தார்.

அதை கண்ட ராமமூர்த்தி, "வசந்த் அந்த ஃபேனை கொஞ்சம் பெரிசா சுத்த விடு.. சாரதா, மாமிக்கு ஜுஸ் ஏதாவது எடுத்துண்டு வா"  என ஏவ,

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நாங்க நிச்சயம் பண்ணாம எதையும் கை நனைக்க மாட்டோம்.. ஒரு சொம்பு தேர்த்தம் மாத்திரம் தாங்கோ"  என்று அலட்டியபடி,  "ஒரே வெய்யில்.. புழுங்கறது.. காத்தே இல்லை.. ஆமாம் உங்காத்துல சென்ட்ரலைஸ் ஏ.சி பிக்ஸ் பண்ணலேயா?"  நாங்க  எங்க வீடு முழுசுக்கும் ஏசி பண்ணிட்டோம்.. இல்லைன்னா யார் இந்த மெட்ராஸ் வெய்யிலுக்கு இருக்கிறதாம்.. தனியா என் புள்ளை ஜெனரேட்டர் கூட வைச்சிருக்கான்". என்று பீற்றிக் கொண்டாள்.

"அதெல்லாம் இந்தாத்துல இல்ல மாமி.. எங்க மாமனார் ஏதோ குமாஸ்தா உத்யோகத்துல இருந்து ரிடையர் ஆனவர்.. சொல்ப சம்பளம்.. இரண்டு பொண்ணை கரை சேர்த்துட்டார்.. அரசாங்க உத்யோகம்னால பென்ஷன் ஏதோ அவருக்கு வரது.. மாமி எதோ பாட்டு சொல்லி தரேன்னு கொஞ்சம் சம்பாதிக்கறா.. பையனுக்கு சரியான உத்யோகம் எதுவும் இல்லை.. என் கடைசி மச்சினி மஹதி சம்பாதிக்கறதுல இவா காலம் ஓடிண்டு இருக்கு.. இந்த லட்சணத்துல பேன் வாங்கி போடறதே பெரிய விஷயம்.. ஏசிக்கெல்லாம் எங்கே போறதாம்!"   என்று சிவகுமார் தேவையில்லாமல் பேச,

You might also like - Moongil kuzhalanathe... A family drama...

அவனை வெட்டவா, குத்தவா என வசந்த் முறைத்தான்.. இவர் அப்பிராயத்தை யாரவது இப்போ கேட்டார்களா என்ன..

சாரதா பயந்து போய் வசந்தை கண்ணாலேயே அடக்க, அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்..

சாரதாவுக்கு, மாப்பிள்ளையின் தாயாரை பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது, மனிதர்களை விட பணத்தை பார்ப்பவர் என்று.. வீட்டுக்குள் நுழையும் பொழுதே, ஏதோ அந்த வீட்டில் நுழைந்து அங்கே கால் வைப்பதே அருவருக்க தக்கது போல முகத்தை அஷ்ட கோணலாக்கியபடி வந்தவரை பார்த்தவள், இந்த வரன் மஹதிக்கு தகையுமா என்றே இருந்தது..

இரட்டை நாடி உடம்பில் நல்ல அகல கரையிட்ட ஜரிகையுடன் காஞ்சீவரம் பட்டில், நெற்றில் பெரிய பொட்டும், காதுகளில் பெரிய அந்த கால ப்ளூ ஜாகர் வைரத் தோடும், மூக்கில் இரண்டு பக்கமும் வைர பேசரியும், கழுத்து நிறைய தடிமனான தாலி கொடியுடன், சிகப்பு கல் அட்டிகையும், பெரிய ஹாரமும், போதாதற்கு இரட்டை வட சங்கலியும், இரண்டு கைகளில் சிகப்பு கல் வளையலுடன், ஆறு ஆறு தங்க வளையல்களுடன் தோரணையாக வந்து அமர்ந்தவரை பார்த்ததுமே , சாரதாவிற்கு புரிந்து விட்டது, அவர் பணத்தை மதிப்பவர் என்று..

இப்பொழுது போதாதற்கு ஏசி இல்லையா என்று அலட்டி கொண்டதும், இனி நடப்பது நடக்கட்டும் என்று அந்த ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு விட்டு பேசாமல் உட்கார்ந்து விட்டார்.

"அப்ப மாமி, என் தங்கையை அழைத்து வரலாமா.. அப்புறம் பொண்ணை பார்த்துட்டு பஜ்ஜி, ஜொஜ்ஜீ, காப்பி சாப்பிடுங்கள்"  என ரஞ்சனி சொல்ல,

"அதுக்கு தானே நாங்க வந்திருக்கோம்??.. முதல்ல பொண்ணு பார்த்து பிடிக்கட்டும்.. காப்பி, டிபன் எங்கே போக போறது.. நான் இந்த ஆயில் அயிட்டம் எல்லாம் அவ்வளவா விரும்பி சாப்பிட மாட்டேன்.. ரொம்ப ஹெல்த் கான்ஷீயஸ்.. இப்பல்லாம், ஆலீவ் ஆயிலில் தான் பொரிச்சி சாப்பிடறது.. கொலஸ்ட்ராலை குறைக்குமாம்"  என பந்தா செய்தார்.

'ஹான்'  என முழித்தாள் ரஞ்சனி.. 'என்னடா இந்த மாமி ஓவரா அலட்டறா.. குண்டச்சி, எங்க மாமியாருக்கு மேலே இருப்பாள் போல.. இவாளுக்கு எல்லாம் அவா தான் சரி.. பையன் கண்ணுக்கு லட்சணமாக இருக்கிறான்.. அதான் இந்த மாமிக்கு கொழுப்பு' என்று நினைத்தாள்.

"பொண்ணை பார்க்கலாமா?..  சீக்கிரம் பார்த்துட்டு கிளம்பனும்" 

கல்யாணி தன் தங்கை மஹதியை அழைத்து வர உள்ளே சென்றாள்..  கல்யாணிக்கும் உள்ளுக்குள் காந்தி கொண்டிருந்தது.. 'டாக்டர் மாப்பிள்ளை மஹதிக்கா, இந்த சின்ன குட்டிக்கு எப்பவும் நல்ல யோகம் தான்.. ஆளும் பார்க்க நன்றாக தான் இருக்கிறான்' என்று பெருமூச்சு விட்டபடியே சென்றாள்.

டாக்டர் விஜய், பொதுவாக ராமமூர்த்தி எதையோ அவனது தொழில் பற்றி கேட்க அதை பற்றி சொல்லிக் கொண்டிருந்தான்.

ராமமூர்த்திக்கும், சாரதாவுக்கும் பையனை மிகவும் பிடித்துவிட்டது.. பார்ப்பதற்கு, வாட்ட சாட்டமாக, கம்பீரமாக இருந்தவனை பார்த்தவர்கள், மஹதிக்கு பொருத்தமாக இருக்கிறான்.. இந்த வரன் அமைந்தால் மஹதியின் அதிர்ஷடமே என நினைத்து கொண்டனர்.

அந்த சமயத்தில் மஹதி வர, அவளை பார்த்த டாக்டர் விஜய், பேசுவதை பாதியில் நிறுத்தி, நிமிர்ந்து உட்கார்ந்து தன்னை மறந்து அவளையே வாயை பிளந்து பார்த்தான்..

அவனது பார்வையிலேயே அவனது மனதை படித்த அவனது தாயார், பெண்ணை திரும்பி பார்க்க, ‘எது எப்படியிருந்தாலும், பொண்ணு கண்ணுக்கு குளிர்ச்சியாதான் இருக்கா.. இந்த சாரதா மாமி அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும்.. மூத்த பொண்ணு கொஞ்சம் ஏப்ப சாப்பையாய் இருந்தாலும், மத்த இரண்டும் அழகாதான் இருக்குங்க.. அதிலும் இந்த குட்டி பொண்ணு, அழகு கொஞ்சறது.. பையன் சொன்னது சரிதான்.. எப்படி வெக்கமில்லாமல் வாயிலே ஈ புகுந்தது கூட தெரியாமல் வெறிச்சி பார்க்கிறான்.. விட்டா இப்பவே தாலி கட்டிடுவான் போல இருக்கே.. இது நல்லதுக்கே இல்லையே.. அப்போ, நூறு பவுன் நகை, தனி பங்களா, காரோட கொடுக்க தயாரா இருக்கற என் பிரண்டோட பொண்ணுக்கு என்ன பதில் சொல்லறது.. ஏதோ பையனுக்கோசரம் அவன் நச்சை தாங்காமல் வந்தோம்’  என தீவிர ஆலோசனை செய்ய,

அது வரை எதுவும் பேசாமல் இருந்த விஜய்யின் தந்தை முதன் முறையாக, "வாம்மா.. மஹதி.. மஹாலட்சுமியாட்டம் இருக்கே..உட்காரும்மா" என

'இவர் மஹா லக்ஷ்மியை போய் பார்த்துட்டு வந்தார்.. ஏற்கனவே இவர் பையன் விடற ஜொல்லுலே, இந்த மெட்ராஸ் வாட்டர் ப்ராப்ளமே தீரும் போல இருக்கு.. சமயம் தெரியாமல் எதையாவது சொல்லி வைக்கும்.. வாயை திறக்காதேன்னு சொல்லித்தானே அழைச்சிண்டு வந்தோம்..வீட்டுக்கு போய் கவனிக்கனும்' என்று நினைத்தபடி,

"ஓ.. நீ தான் மஹதியா.. உட்காரும்மா" என சம்பிரதாயமாக அமிர்தா சொல்ல, மஹதியும் பெரியவர்களை நமஸ்கரித்து விட்டு, தன் பெரிய அக்கா ரஞ்சனி அருகில் அமர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.