(Reading time: 16 - 32 minutes)

"விஜய் சொல்லி இருக்கான்.. நீ நன்னா பாடுவியாம்.. ஒரு பாட்டு பாடறயா?"  என விஜய்யின் தந்தை சாம்பசிவம் கேட்க,

'இந்த மனுஷனை.. ஏற்கனவே இந்த பையன் தன்னை மறந்து உட்கார்திருக்கான்.. இன்னும் இவ வேற பாட்டு பாடனுமா.. பாட்டு பாடி மயக்கனுமா என்ன?'

ராமமூர்த்தி, "அம்மாடி, மஹி ஒரு பாட்டு பாடும்மா" என,

தலையாட்டியவள், தன் தாயை பார்க்க, அவரும் தலையாட்ட,

பின்னர் ஒரு நிமிடம் டாக்டர் விஜய்யை பார்க்க, அவன் அவளை தான் அப்பொழுது பார்த்து கொண்டிருந்தான். மஹதி அவனை நிமிர்ந்து பார்த்ததும் லேசாக கண்ணடித்து புன்னகைக்க,

வெட்கத்துடன் சட்டென்று தலை குனிந்தாள் மஹதி.

You might also like - Puthir podum nenjam... A romantic story...

"பாடும்மா மஹி " என சாரதா உற்சாக படுத்த, தம்பூராவை எடுத்து வந்து வசந்த் கொடுக்க, மெல்ல,

'அலை பாயுதே கண்ணா

என் மனம் அலை பாயுதே-

உன் ஆனந்த மோகன வேணு கானமதில்- அலைபாயுதே கண்ணா

என்று கானடா ராகத்தில் தலை குனிந்து பாடி முடித்தவள், 

மெதுவாக நிமிர்ந்து விஜய்யை பார்க்க,  அவன் மெய்மறந்து அவளையே ரசித்து கொண்டிருந்தான்.. 'உன் கண்ணன் நான்தானே' என பார்வையால் கேட்க வேறு செய்தான்.

"அப்பா, அம்மா, நான் தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே.. எனக்கு மஹதியை ரொம்ப பிடிச்சிருக்கு.. சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு செயுங்கோ" என பட்டென சொல்லி விட்டான்.

அவனது அன்னைக்கோ, என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. 'அவசரக் கொடுக்கை, எல்லாம் பேசி விட்டு, வீட்டுக்கு போய் சொல்லலாம்ன்னு பார்த்தால், முந்திரி கொட்டை மாதிரி என்ன அவசரம்.. அப்பனுக்கு தப்பாம புள்ளை பிறந்திருக்கான்'.. இப்ப என்ன செய்யறது.. நேரே பேச வேண்டியது தான்.. யார் நம்மாத்து மாட்டு பொண்ணா வந்தா என்ன, நமக்கு நிறைக்க செஞ்சா வேண்டாம்னா சொல்லப் போறோம்' என நினைத்தார்.

"அதான் , பையனே பிடிச்சாச்சுன்னு பட்டுன்னு தேங்காய் உடைக்கிற மாதிரி சொல்லி விட்டானே.. அம்மாடி, குழந்தை, போம்மா, உன் கையால பஜ்ஜி, ஜொஜ்ஜி, ஸ்டாராங் பில்டர் காபி எல்லாம் கொண்டா பார்க்கலாம்" என விஜய்யின் தந்தை சொல்ல, வெட்கத்துடன் தம்பூராவை கிழே வைத்து விட்டு உள்ளே ஓடினாள் மஹதி.

பெரிதாக சிரித்தான் விஜய்.

சற்று நேரத்தில் ரஞ்சனியும், கல்யாணியும் டிபனை அனைவருக்கும் எடுத்து வந்து கொடுக்க, சுடசுட காப்பியை எடுத்து வந்தாள் மஹதி..

ஒரு வழியாக காப்பி, டிபனை ஒரு பிடி பிடித்தனர்.. விஜய்யின் தாயார் மாத்திரம் தனக்கு ஆலிவ் ஆயிலில் செய்யாத டிபன் வகைகள் ஒத்துக் கொள்ளாது என்று வெற்று பந்தா செய்து விட்டு, சர்க்கரை கம்மியாக பில்டர் காப்பியை மட்டும் குடித்து வைத்தார்.

ராமமூர்த்தி "அப்போ, மேலே பேசலாமா? .. நிச்சயதார்த்தம் வைத்து கொள்வது உங்களுக்கு வழக்கமுண்டா.. இல்லை நேரடியாக கல்யாணமா?"  என கேட்க,

"இப்போ தட்டை மாத்திரம் மாற்றி கொள்வோம்.. பையன் அவசரப் படரான்.. அதனாலே நேரே ஒரே மாசத்தில் கல்யாணம், அதுக்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தம் என்று வைத்து கொள்வோம்.. என்ன உங்களுக்கு ஓ.கே வா" என விஜய்யின் தந்தை சதாசிவம் கேட்க,

ராமமூர்த்தி சாரதாவை பார்க்க, எங்களுக்கு சம்மந்தம் தான் என தலையாட்டினர். 

'மேற் கொண்டு என்ன என்ன சீர் சினத்தி, அதெல்லாம் சொல்லிட்டா பரவாயில்லை"  என சாரதா இழுக்க,

"அப்போ, நீங்க கல்யாணத்தை நன்னா கிராண்டா நடத்திடுங்கோ.. எங்களுக்கு இருப்பது ஒரே பையன்.. டாக்டர் வேறே.. அவனுக்கு நிறைய சம்மந்தம் வந்துண்டு இருக்கு.. ஆனா அவன் இப்ப உங்க பெண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒத்தை கால்ல நிக்கிறான்.. அதான் நாங்க இங்கே வந்தோம்.. நாங்க ஒன்னும் பெரிசா எதிர் பார்க்கலை.. நல்லா கிரண்டா பெரிய சத்தரத்தில் கல்யாணத்தை வைச்சிடுங்கோ.. எங்க பக்கம் மனுஷா ஜாஸ்தி.. கௌரவபட்ட மனுஷாளா வருவா.. அதுக்குத்தான் சொன்னேன்" என்றவள்,

"மற்றபடி, ஒருத்தர், இவனுக்கு வீடு கட்டி கொடுத்து கார் வாங்கி தரேன்னா.. அவாளே, தனி கிளினிக்கும் வைச்சு தரதா சொல்லியிருக்கா.. நூறு பவுன் நகை போடறாளாம்"..

"அதெல்லாம் நான் உங்களை கேட்டு தொந்தரவு கொடுக்கப் போறதில்லை.. பையனுக்கு பொண்ணை பிடிச்சிருக்கு.. நீங்க உங்க பொண்ணுக்கு தானே செய்ய போறேள்.. அவ தானே ஆண்டு அனுபவிக்க போறா.. ஏதோ உங்களாலே முடிஞ்ச ஐம்பது சவரன் நகை போடுங்கோ.. கிளினிக் என் பையன் தனியா வைக்கறப்போ கொஞ்சம் பணம் கொடுத்தா அவனுக்கு உதவினா மாதிரி இருக்கும்.. அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்.. அப்புறம் ஒரு கார் மாத்திரம் கட்டாயம் போக வர வேணும்.. ஆத்துல மூணு கார் பெரிசா தனித்தனியா இருந்தாலும், வரவளுக்குனு கார் தனியா இருந்தா வெளியிலே சொல்லறதுக்கு எங்களுக்கும் பெருமையாக இருக்கும்.. எனக்கு லேடீஸ் கிளப்பில இல்லைன்னா அசிங்கமா போயிடும்.. அமிர்தா என்ன ஒன்னும் இல்லாதவ ஆத்துலே பொண்ணை எடுத்திருக்கா.. பையனுக்கு என்ன குறையோ அப்படின்னு பேச்சு வரும்"..

"என் பையனுக்கு என்ன ராஜாவாட்டம் இருக்கான்.. நான் , நீ ன்னு போட்டி போட்டுண்டு வரா.. பையன் உங்க பொண்ணை ஆசை பட்டுட்டான்.. அதான்.. வீடு வாங்கி தரலைன்னாலும், கார் கட்டாயம் வேணும்.. மத்தபடி இந்த வெள்ளி பாத்திரம், இதெல்லாம் உங்க இஷ்டம்.. நான் வேனாம்னாலும் நீங்க விட்டு விடுவிங்களா என்ன, எல்லாம் உங்க பொண்ணு தானே அனுபவிப்பா.. அப்ப தட்டை மாத்திப்போமா" என கேட்க, அங்கே ஒரு நிமிடம் நிசப்தமாக இருந்தது.

"அம்மா, என்னம்மா இது, உனக்கு அவாத்து நிலமையை சொல்லி தானே கூப்பிட்டு வந்தேன்.. இப்ப எதுக்கு இப்படி பேசரே.. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை" என விஜய் ஆரம்பிக்க,

அமிர்தாவோ, "ராஜா, உனக்கு ஒன்னும் தெரியாது.. முதல்ல பெரியவா பேசறப்ப குறுக்கே பேசாதே" என கண்டிக்க, வாயை மூடிக் கொண்ட விஜய், பிறகு மஹதியிடம் பேசி எப்படியாவது அவளுக்கு உதவலாம்' என நினைத்தான் விஜய்.

முதலில் சுதாரித்த ராமமூர்த்தி, "எங்களால முடிஞ்சதை கட்டாயம் செய்யறோம்.. கடைசி பொண்ணு.. நல்லபடியா கல்யாணம் பண்ணனும்.. எல்லாம் அந்த ஈஸ்வரன் தயவுல செய்வோம்.. வாங்கோ தட்டை மாற்றுவோம் ".. "சாரதா வாம்மா" என,

இவர் என்ன இந்தம்மா சொன்னதுக்கு சரின்னு சொல்லிட்டா மாதிரி தட்டை மாற்ற கூப்பிடுகிறார், என அவரை ஏறிட்டு பார்க்க, 'எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்' என கண்ணாலேயே செய்தி சொல்ல,

வேறு வழியில்லாமல் அவருடன் இணைந்து நின்ற சாரதா விஜய்யின் பெற்றோரிடம் தட்டை மாற்றி கொண்டு தங்கள் சம்மதத்தை சொன்னார்கள்.

ஒரு வழியாக, வெற்றிலை பாக்கை வாங்கி கொண்டு மேற் கொண்டு பிறகு அடுத்த வாரம் நல்ல நாள் பார்த்து அவர்கள் வீட்டுக்கு சாரதா தம்பதியரை வரச் சொல்லி விட்டு,  "ராஜப்பா, அந்த கார் ஏசியை ஆன் பண்ணுப்பா.. வெய்யில் தாங்கலை"  என்று சொல்லியபடியே,  மொத்ததில் அனைவரையும் ஒரு வழியாக்கிவிட்டு , அங்கிருந்து விடை பெற்று சென்றனர் அமிர்தா-சதாசிவம் குடும்பத்தினர்.

வீடு புயலடித்து ஓய்தாற் போல இருந்தது.

சற்று நேரம் யாரும் எதுவும் பேசவில்லை.

குழந்தைகள், பாட்டியிடம் பசிப்பதாக சொல்ல, அமைதியாக சாரதா அவர்களுக்கு டிபனை எடுத்து கொடுத்துவிட்டு, பின்னர் அனைவருக்கும் எடுத்துக் கொடுத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.