(Reading time: 14 - 27 minutes)

வீட்டிற்குள் வந்ததிலிருந்து ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாள் யுக்தா, சுஜாதாவும் சாவித்திரியும் சென்ற பிறகு பிரணதி அவள் அறைக்கு சென்று விட்டாள், செந்தில் வெளியே கிளம்பி போய்விட்டார், வளர்மதி இன்னும் கீழே இறங்கி வரவில்லை, சோஃபாவில் உட்கார்ந்திருந்த யுக்தாவிற்கு எரிச்சலாக வந்தது, ரெஸ்ட் ரூம் போக வேண்டும், இந்த பட்டு புடவை கச கசவென்று இருக்கிறது, அதை மாற்ற வேண்டும், யாரிடம் கேட்பது? என்ன செய்வது.... என்று புரியாமல் உட்கார்ந்திருந்தாள்.

இந்த வீட்டையே சுற்றி ஒரு பார்வை பார்த்தாள், முதலில் இந்த வீட்டில் எவ்வளவு உரிமையோடு வலம் வந்திருக்கிறாள்... ஆனால் இப்போது.... இந்த வீட்டு மருமகள் என்ற உரிமை... ஆனால் எதை செய்யவும் தயக்கம், இதற்கு தான் எதுவும் வேண்டாமென்று ஒதுங்கி இருந்தாள்... ஆனால் இன்று பிருத்வியின் மனைவி.... நினைக்கும் போது ஒரு விரக்தி சிரிப்பு அவள் உதட்டில்.

ஒரு முடிவோடு அறையை விட்டு எழுந்து வந்தாள் வளர்மதி, யுக்தா என்ன தவறு செய்திருந்தாலும்... அவள் சுஜாதாவின் மகள், பிருத்வியின் கோபத்தை பெரிது படுத்தாமல் யுக்தாவை அவள் தான் பார்த்து கொள்ள வேண்டும்.

படிகளில் இறங்கி வரும் போதே யுக்தா சோஃபாவில் அமர்ந்திருப்பது அவள் கண்ணில் பட்டது, எவ்வளவு உரிமையோடு பழகியவள்... இப்போது ஒரு விலகல் தன்மையோடு இருப்பது மதிக்கே கஷ்டமாக இருந்தது.

வளர்மதி வருவது கூட தெரியாமல் யோசனையில் அமர்ந்திருந்தாள் யுக்தா.

"யுக்தா என்னம்மா இப்படியே உட்கார்ந்துகிட்டு இருக்க... சரி எழுந்து வா, மருமகளா வீட்டுக்கு வந்திருக்க... வந்து விளக்கேத்து.."

"மதி அத்தை தன்னிடம் பேசியதில் அதிர்ச்சி பிளஸ் சந்தோஷம்!! யுக்தாவிற்கு, மதி சொன்னப்படியே விளக்கை ஏற்றினாள் அவள்.

You might also like - Kalyanam muthal kathal varai... A romantic comedy...

சாப்பாடு வாங்கி கொண்டு உள்ளே வந்த செந்திலுக்கும்... தன் தாயின் குரல் கேட்டு வந்த பிரணதிக்கும் ஆச்சர்யம்...!!  எப்படியோ... நடந்தது நடந்து விட்டது, மதி மனம் மாறியதே போதும் செந்திலுக்கு.

செந்தில் வந்துவிட்டதை பார்த்த மதி

"யுக்தா.. தோ மாமா வந்துட்டாங்க, வா நாம சாப்பிடலாம்" என்று அழைத்து விட்டு "என்னங்க மச மசன்னு நிக்கறீங்க... வாங்க எல்லோரும் சாப்பிடலாம்... பிரணதி நீயும் வா.." என்று கூப்பிட்டாள்.

யுக்தா தயக்கமாக "அத்தை எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் ரூம் போகனும்... குளிச்சு டிரஸ் மாத்தனும்..."

"என்ன யுக்தா....இனி இது உன்னோட வீடு.... எது கேக்கறதா இருந்தாலும் தயங்காம கேளு... நீ சுதந்திரமா இரு... பிரணதி ரூம்க்கு பக்கத்து ரூம்ல நீ இருந்துக்க...

பிருத்விக்கு கொஞ்சம் கோபம் தணியற வரைக்கும் நீ தனி ரூம்ல தங்கிக்கமா..."

"சரி அத்தை" என்று பதில் கூறி விட்டு அவளுக்கு கொடுத்த அறைக்கு சென்று விட்டாள்.

"மதி, என்ன மேஜிக்... நான் போய்ட்டு வருவதுகுள்ள... உன்கிட்ட இவ்வளவு மாற்றம்... எனக்கு ஒன்னும் புரியல..."

"எனக்கு ரொம்ப குழப்பமா இருந்துச்சுங்க.... பிருத்வி கிளம்பி வந்ததுக்கு பிறகு... இந்த கல்யாணத்தை பண்ணி வச்சது சரி தானா..?? எனக்குள்ளயே நானே கேட்டுக்கிட்டேன்... சுஜாதா முகத்தை பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு...

ஆனா சுஜாதா இப்போ ஃபோன் பண்ணா... என்னோட குழப்பத்தை அவ புரிஞ்சுக்கிட்டா... எது எப்படியிருந்தாலும் என் பெண்ணை நீ நல்லா பார்த்துப்பேன்னு நம்பிக்கை இருக்குன்னு சொன்னா...

அதான்.... நானே இப்படி இருந்தா எதுவும் சரியாகாது, அதான்... உடனே எழுந்து வந்துட்டேன்..

ஆனா பிருத்விய நினைச்சா தான் பயமா இருக்கு... இனி அவன் எப்படி நடந்துப்பானோ... ஏங்க அவனுக்கு

ஃபோன் பண்ணி பார்த்தீங்களா...???"

"இல்ல மதி... அவன் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான்"

"சரி விடுங்க... அவன் வீட்டுக்கு வந்துடுவான்... நம்மள கஷ்டப்படுத்துற மாதிரி அவன் நடந்துக்க மாட்டான்.... யுக்தா வந்ததும் சாப்பிடலாம் வாங்க.."

யுக்தா குளித்து விட்டு ஒரு காட்டன் சுடிதாரை அணிந்து கொண்டாள், இப்போது தான் ரிலாக்ஸாக உனர்ந்தாள், அவர்கள் விருப்பதிற்காக கொஞ்சம் சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்ததும் அசதியில் உறங்கி விட்டாள்.

இரவாகி விட்டது.. இன்னும் பிருத்வி வரவில்லை, வளர்மதி அவனுக்காக காத்திருந்தாள்.. அவனுக்கு கோபம் வந்தால் எளிதில் போகாது.. அதை ஊதி ஊதி பெரிதாக்குவான்.

அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதற்கே போராட வேண்டியிருந்தது மதிக்கு... ஏதோ திருமணம் நடக்கும் வரை பொறுமையாக இருந்தான், இப்போது என்ன செய்வான்... யுக்தாவிடம் எப்படி நடப்பான்... மதிக்கு ஒன்றுமே புரியவில்லை.

மதியம் சாப்பிட்டுவிட்டு படுத்த யுக்தா கண் விழிக்க எட்டாகிவிட்டது.. இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமே... இனி இப்படி தூங்க கூடாது என்று மனதிற்கு கடிவாளமிட்டுக் கொண்டாள், பிருத்வி வீட்டுக்கு வந்துவிட்டாரா..?? திருமணம் முடிந்ததும் சென்றவர் மதியம் வரவில்லையே..?? நான் இங்கு இருப்பதால் தான் வரவில்லையோ..?? தனக்குள்ளயே கேள்விகளை கேட்டுக் கொண்டாள்.

வாசலில் பைக் சத்தம் கேட்டது.. பிருத்வி வந்துவிட்டான்... மதி, செந்தில், பிரணதி மூவருக்கும் நிம்மதி, அவன் வந்துவிட்டான் என்று, தூக்க கலக்கமாக இருந்ததால்... ஃபிரஷ் ஆக பாத்ரூம் சென்ற யுக்தாவுக்கு அவன் வந்தது தெரியவில்லை...

"பிருத்வி காலையில் இருந்து ஃபோன் பண்றேன்... ஃபோன் சுவிட்ச் ஆஃப்னு வருது... எங்கடா போன...?? அம்மா எவ்வளவு கவலையா இருக்கா தெரியுமா..??"

"அப்பா கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்னு தோனுச்சு அதான் பீச்க்கு போனேன்"

"காலையில போனவன் இப்பத்தான் வர... இது உனக்கு கொஞ்ச நேரமா..?? நாங்க கவலப்படுவோம்னு தெரியாது..??"

பிருத்வி அமைதியாக இருந்தான்.

"என்னங்க விடுங்க அவன் தான் இப்போ வந்துட்டானே...

பிருத்வி காலையில் இருந்து எதாவது சாப்பிட்டியா...??

"இன்னும் இல்லம்மா..."

"சரி நீ ஃபிரஷ் ஆகிட்டு வா.. உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்"

"சரிம்மா" என்று சொல்லி விட்டு பிருத்வி அவன் அறைக்கு சென்றதும், யுக்தாவையும் சாப்பிட அழைத்து வரச் சொல்லி பிரணதியிடம் சொன்னாள் வளர்மதி.

பிரணதி வந்து அழைத்ததும் சாப்பிட பிடிக்கவில்லை என்றாலும் அவர்கள் அழைத்ததற்காக கொஞ்சம் சாப்பிடலாம் என்று கிளம்பினாள் யுக்தா, பிருத்வி வந்துவிட்டானா..?? என்று கேட்க நினைத்து வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.

செந்திலும் பிரணதியும் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள், அவளும் சாப்பிட உட்கார்ந்தாள், மதி அனைவருக்கும் சாப்பாடு போட ஒரு வாய் சாப்பாடை எடுத்து வாயில் வைக்கப் போனாள் யுக்தா,

"ஓ பையனை விட மருமகள் தான் உங்களுக்கு முக்கியமா...??? இவத்தான் முக்கியம்னா அப்புறம் எனக்காக எதுக்கு கவலைப்பட்டீங்க...???"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.