(Reading time: 13 - 25 minutes)

"மாமா..நான் அப்படி உங்களை கூப்பிடலாம் தானே..இத்தனை நாள் வரை என் அம்மாவுக்கு ஒரு அண்ணன் இருந்ததே தெரியாமல் இருந்தது நிச்சயம் ஒரு நல்ல துவக்கம் அல்ல.. ஆனாலும் என்னால் முடிந்த அளவுக்கு நம் உறவு முறையை ஒட்ட வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்... நான் இந்தியா வந்ததே முக்கியமாக அதற்குத்தான்.. சொந்தங்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று நினைத்து தான் வந்தேன்."

"என்ன பண்ணுவது ஏதேதோ நடந்து விட்டது அந்த காலத்தில்..சொல்லும்மா கமலா எப்படி இருக்கிறாள் மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்.. அவர்கள் வரவில்லையா?... கிட்டத்தட்ட இருபத்தி ஆறு வருடங்கள்..என் தங்கையை பற்றி ஒரு விவரமும் எங்களிடம் கிடையாது..இள வயது வேகம் எல்லாருக்கும் வாய் வார்த்தை முற்றி உறவே முறிந்து போனது..", என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் ராமன்.

"மாமா என்ன தான் நடந்தது?. நீங்கள்ளாம் ஏன் பிரிஞ்சேள்?"

"அது ஒரு பெரிய கதை.. நீ பொறக்கறதுக்கு முன்னாடியே ஆரம்பிச்ச சண்டை அது.. எங்கப்பா அம்மா போனவுடன் நானும் என் தங்கையும் தான் தனியா சென்னையில் குடியிருந்தோம். நான் வேலைக்கு போய் அப்போ தான் என்னோட தூரத்து சொந்தமான உன் மாமி விமலாவை கல்யாணம் பண்ணிண்டு இருந்தேன்.. உன் அம்மா காலேஜ் போயிண்டு இருந்தா..ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா எல்லாம் நன்னா தான் போனது..அந்த சமயத்தில் தான் உன் அம்மா விஸ்வனாதனுடைய காதல் வலையில் விழுந்தா.. விசுவும் ரொம்ப நல்லவர்தான்.. ஆனா கமலா தான் காதலிக்கற விஷயத்தை முன்னாடியே யாருக்கும் சொல்லலை.."

"ஏன் மாமா அப்பாவும் நீங்களும் ஒரே பிரிவுதானே பின்னே ஏன் பிரச்சனை?"

"அதான் போறாத காலம்கறது.. விமலாவோட தம்பியை நாங்க கமலிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தோம்.. நிச்சயம் பன்னறதுக்கு முன்னாடி கமலா ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிண்டு வந்துட்டா.. ஏன்னா அவா மாமியாரத்துல அவளுக்கு மூணு நாத்தனார்.. அவாளுக்கு கல்யாணம் பண்ணாம பிள்ளைக்கு கல்யாணம் பண்ணறதுலே அந்த மாமிக்கு  உடன் பாடு இல்லை.. இத்தனைக்கும் நல்ல வசதியானவா.. அதனால் ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணி கூட்டிண்டு வந்துட்டார் விஸ்வனாதன்.

"ஒரு வழியா சமாதானம் ஆனா அந்த மாமி.. நாங்களும் அவாளை ஏத்துண்டு ஒன்னும் சொல்லலை..இப்படியே சில வருஷங்கள் கழிஞ்சுது.. கிட்டத்தட்ட பத்து வருஷம்.. எங்களுக்கும் குழந்தை இல்லை அவளுக்கும் குழந்தை இல்லை.. கமலாவை அந்த ஒரு காரணத்தைக் காட்டி அவ மாமியார் பண்ணாத கொடுமை இல்லை..ஒரு வழியா அவ பிள்ளையண்டா  ஆனாலும் அவ மாமியார் அவளை சொல்லி சொல்லி காட்டுவா.. எல்லாத்துக்கும்.. வெறும் கையை வீசிண்டு வந்தவன்னு.. குழந்தை பிறப்புக்கு கூட எங்காத்துக்கு அனுப்பலை.. ஒருவழியா நீ பிறந்த மூணு நாள் கழிச்சு எப்படியோ விஷயம் தெரிஞ்சு போனோம்.."

"அந்த மாமி உன்னோட மாமி அதாவது என் வொய்ஃபை ரொம்ப அசிங்கப்படுத்திட்டா.. குழந்தை இல்லாதவ அது இதுன்னு பேசி.. யாருக்கோசறம் பணம் சேர்க்கறேள்.. இப்பவே பரம்பரை வீட்டை கமலாவுக்கு எழுதி கொடுங்கோ..உங்களுக்கோ குழந்தை குட்டி இனி எப்போ பொறக்கறதுன்னு இன்சல்ட் பண்ணிட்டா.. உன் மாமிக்கு ரொம்ப கோவம்.. அப்போ தான் நானும் பிசினஸ் ஆரம்பிச்சு கொஞ்சம் எஸ்டாபிலிஷ் ஆயிண்டிருந்தேன்.. எப்படியோ பணத்தை பொறட்டி அவ பங்கை கொடுத்தோம்..உறவு கசந்துடுத்து.. மாப்பிள்ளையும் அவர் அம்மாவை கண்டிரோல் செய்யலை.. என் தங்கைக்காக நான் செஞ்சேன்..ஆனா என் பொண்டாடிக்காக அவளை அவமானப்படுத்தின உறவுகளை முறித்துக் கொண்டேன்"..

"கமலாவுக்கும் தெரியும் என் நிலை..அவளால் ஒன்னும் செய்ய முடியலை..நீ பொறந்த கொஞ்ச நாளிலேயே மாப்பிள்ளை டிரான்ஸ்ஃபர்ல டில்லிக்கு போனார்..அப்படியே அங்கேந்து அமெரிக்கா போனான்னு கேள்வி பட்டேன்..ஆனா தொடர்பு விட்டு போச்சு..ஆனா எங்க பரம்பரை வீட்டுலே தான் நான் இன்னமும் இருக்கேன்..", என்று முடித்தார்.

"மாமா உங்களுக்கு குழந்தைகள்?", என்று இழுத்தவளை பார்த்தவர்,

"இருக்கா..நீ பொறந்த அடுத்த வருஷமே எங்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தாள்..அவள் பேரு அதிதி..இப்போ அமெரிக்காவுலே எம்.எஸ். படிக்கறா", என்றார் முகத்தில் பெருமிதம் மிளிர

"ஒ..டூ குட்..நான் யு. எஸ். போனவுடனேயே அவளை காண்டாக்ட் பண்ணறேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. என்னோட கஸின் அங்கேயே இருக்கா ஆனா எனக்கு தெரியலை பாருங்கோ..இட் இஸ் அ ஷேம்..அம்மா கேட்ட ரொம்ப சந்தோஷப்படுவா.."

"சொல்லும்மா மத்தபடி உன்னை நான் ஆத்துக்கு கூப்பிடலையேன்னு நினைச்சுக்காதே..எனக்கு மனசு விட்டு பேசனும்னு தோனித்து..அதான் மாமிக்கு கூடத் தெரியாம இன்னிக்கு வந்தேன்..ஆத்துக்கு போனதும் அவ கிட்ட சொல்லறேன் ரொம்ப சந்தோஷப்படுவா. ஆத்துக்கு உன்னை கூப்பிடறேன்..சொல்லு வேற என்ன விஷயம்..நீ திடீர்னு இந்த ஒரு காரணத்துக்காக தான் இந்தியா வந்தேன்னா நம்ப முடியலை..வேற என்ன..தயங்காம சொல்லு..", என்று ஊக்கினார்..

மெல்ல பேசத்தொடங்கினாள் பைரவி..அவள் பேசப் பேச வித விதமான உணர்வுகளும், பாவங்களும் ராமனின் முகத்தில் வந்து போயின....கேட்டு கடைசியில் கண்களில் நீர் பெருக தலையில் கையை வைத்து பிடித்தபடி ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.