(Reading time: 6 - 12 minutes)

24. கிருஷ்ண சகி - மீரா ராம்

னக்கு முன்பாகவே எழுந்து கொண்ட நதியையும், அவளின் செயலையும் சற்று விநோதமாக கவனித்துக்கொண்டே இருந்தார் கோகிலவாணி…

இருந்தும் அவளிடத்தில் அவர் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை….

சின்னப்பெண், பாவம் அவள் முகத்தில் இதுவரை தான் இப்படி ஒரு சந்தோஷத்தைக் கண்டதே இல்லை…. என்றெண்ணியவருக்கு உடனேயே தன் மகனின் நினைவு வர, “எங்கே இவள் சந்தோஷமாக இருக்க முடியும்?... அதுவும் இந்த வீட்டில்…. அதுதான் நித்தமும் வார்த்தைகளால் அவளை காயப்படுத்த நான் பெத்த என் மகன் இருக்கும்போது…” என ஒரு பெருமூச்சுடன் தனது அடுத்த வேலைகளை அவர் கவனிக்கலானார்…

krishna saki

வழக்கத்தை விட மாறாக கொஞ்சம் முன்னதாகவே அவள் வீட்டை விட்டு கிளம்ப, கோகிலவாணியோ சரி சற்று நேரம் பிள்ளைகளுடன் பேசிக்கொண்டே செல்லட்டும்… என்ற எண்ணத்தோடு அவளுக்கு கை அசைத்து அவர் டாட்டா காட்டிவிட்டு உள்ளே சென்றார்….

அவன் வரும் திசையில் அவனை எதிர்பார்த்து தனது குட்டிக்கண்களை உருட்டியபடி நின்றிருந்தாள் அவள்…

அவன் வர தாமதமாகவே, என்ன செய்ய என்று யோசித்தவளுக்கு முகமே ஒரு மாதிரி ஆகி போனது…

“ஏன் வரலை… இன்னும்…” என்ற கேள்வியே அவளுக்கு திரும்ப திரும்ப தோன்ற, செய்வதறியாது தவித்தவளின் விழிகளில் தேடலும் பரிதவிப்பும் தானாகவே உருவாயிற்று….

அப்போது, “கிருஷ்ணா…” என்ற மகத்தின் அழைப்பில் எதையோ திரும்ப பெற்றுவிட்ட உற்சாகத்தில் அவனருகில் ஓடினாள் அவள்…

“பயந்துட்டேன் தெரியுமா?.... நீங்க வர லேட் ஆனதும்….” என அவள் கூறியதும், அவன் கண்கள் விரிந்த நொடியில்,  “ஏன் வரலை இன்னும்னு யோசிச்சிட்டே இருந்தேன் தெரியுமா?... எதுக்கு சகி லேட்?...” என அறியாமையோடு அவள் கொண்ட அக்கறை கலந்த உரிமையில் அவன் நெகிழ்ந்தே போனான்….

“நான் வர கொஞ்ச நேரம் ஆகியிருக்குமா?... அதற்குள் ஏன் இந்த பரிதவிப்பு…. கிருஷ்ணாவின் முகத்தில்…” என்றவனுக்கு உடனேயே அவளின் தகப்பனின் நினைவு வர, அன்புக்கு ஏங்குகிற சின்னப்பெண்…. அவளை இன்று நாமும் தவிக்க விட்டுவிட்டோமே…. சே…. இனி அவளை இப்படி முகத்தில் கவலையோடு பரிதவிப்போடு நான் பார்க்க கூடாது…. அவளுடன் கூட இருந்து அவளை பார்த்துக் கொள்ள வேண்டும்….” என தனக்குள் உதித்த சிந்தனையை அவன் சற்று ஆச்சரியமாகவே பார்த்துக்கொண்டான்…

“எதுக்கு நான் இப்படி எல்லாம் யோசிக்கிறேன்… கிருஷ்ணாவை அன்புக்கு ஏங்க விட கூடாதுன்னு நான் ஏன் நினைக்கிறேன்…???...’ என யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு, அவனது மனமோ, “உன்னைப்போல் தானே அவளும்…” என பதில் சொல்ல அவன் சற்றே அதிர்ந்தான்….

“இல்லை… என் நிலை… யாருக்கும் வரக்கூடாது இனி…” என இறுக விழி மூடி தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தவனை,

கிருஷ்ணாவின், “சகி…. என்ன சகி…. என்ன யோசனை?... வாங்க நடக்கலாம்… லேட் ஆகுது பாருங்க… உங்களை மிஸ் அடிக்க மாட்டாங்களா லேட்டா போனா?... வாங்க….” என்ற படபடவென்ற பேச்சு நனவுலகுக்கு கொண்டு வர,

“போகலாம்… கிருஷ்ணா… வா….” என்ற வார்த்தையோடு அவளோடு நடக்கலானான்….

“இனி நான் லேட்டா வர மாட்டேன்…. சரியா கிருஷ்ணா?....”

“ஹ்ம்… சரி சகி…. அப்படியே லேட்டா வந்தாலும் நான் வெயிட் பண்ணுறேன் என்ன?....” என தலை ஆட்டி சொல்பவளின் பேச்சை ரசித்தான் அவன்…

“சாப்பிட்டியா கிருஷ்ணா?....”

“இன்னைக்கு நிஜமாவே சாப்பிட்டேன்… நீங்க சாப்பிட்டீங்களா?...”

“ஹ்ம்ம்… சாப்பிட்டேண்டா….”

“குட்… குட்….”

“நீ சொன்னா சரிதாண்டா…..” என அவனும் சிரிக்க

“சரி சொல்லுறதெல்லாம் இருக்கட்டும்… சகி பேருக்கு அர்த்தம் சொல்லுறேன்னு சொன்னீங்கள்ள…. இப்போ சொல்லுங்க…”

நின்று அவளை நிதானமாக பார்த்தவன், “ஹ்ம்ம்… உனக்கு என்னவா இருக்கும்னு தோணுது…” என இருகட்டியபடி கேட்க

“எதுவும் தோணலையே…. நீங்களே சொல்லுங்களேன்…. ப்ளீஸ்…..” என்ற அவளின் கெஞ்சலில்,

“சரிடா… நானே சொல்லுறேன்… நீ கெஞ்சாத…” என்றவன்,

“நீ மகாபாரதம் பார்ப்பீயா?....”

“விஜய் டீவியில போடுற மகாபாரதம் தான?...”

“ஹ்ம்ம்… ஆமா…”

“பார்ப்பேனே… எனக்கு பிடிக்குமே….”

“ஹ்ம்… அதுல கிருஷ்ணர் பாஞ்சாலியை என்னன்னு சொல்லி கூப்பிடுறார்?...”

“சகின்னு சொல்லுவார்…”

“ஹ்ம்ம்.. குட்… பாஞ்சாலியை அவருக்கு ரொம்ப பிடிக்கும்…. அவங்களுக்கு நல்ல ப்ரெண்ட் அவர்…”

“ஓ…. ஆமா… அவர் அதுல அவருக்கு நிறைய ஹெல்ப் பண்ணுறார்ல…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.