(Reading time: 6 - 12 minutes)

ஹ்ம்ம்… ஆமாடா… சகிக்கு அர்த்தம் நட்பு… ஹ்ம்ம் நம்பிக்கைன்னு கூட சொல்லலாம்… அது போல நமக்கு ரொம்ப பிடிச்ச பிரியமானவங்களை நாம சகின்னு சொல்லலாம்… அது கொஞ்சம் பொண்ணு பேரு போல….” என்றவாறு அவன் முடிக்க,

அவள், “சூப்பர்… அர்த்தம்… கிருஷ்ணர் அங்க பாஞ்சாலியை சகின்னு சொல்லுறார்… நான் இங்க உங்களை சொல்லுறேனா?... குட்… குட்…. நல்லா இருக்கே இது….” என்றபடி அவள் சிரித்ததும்,

“ஹ்ம்ம்… ஆமாடா…” என்றான் அவனும் புன்னகைத்தபடி…

“என் பேருல பையன் பேரு இருக்கு…. உங்க பேருல பொண்ணு பேரு இருக்கு… நல்லா இருக்குல்ல… நிஜமா…” என்றவள் தலை ஆட்டி அவனிடம் கேட்க, அவனது தலையும் தானாகவே அசைந்தது….

“ஆமா… உங்களுக்கு இந்த பேரு வச்சது யாரு சகி?...” என அவள் கேட்டதும்,

கொஞ்சம் யோசித்தவன், “இப்பவே சொல்லணுமாடா?... ஹ்ம்ம்ம் கொஞ்ச நாள் கழிச்சு சொல்லட்டா?... இல்ல உனக்கு இப்பவே தெரியணுமா?...” என பொறுமையாக நிதானமாக அவன் கேட்டதும்,

“இல்ல சகி… எனக்கு நீங்க கொஞ்ச நாள் கழிச்சே சொல்லுங்க……” என்றாள் அவளும் சட்டென்று…

“ஒகேடா… சீக்கிரமே ஒருநாள் நிச்சயம் சொல்லுறேன்… சரியா?....”

“சரிதான்… ஆனா, எங்கிட்ட எதாவது பேசும்போது ஏன் நிறுத்தி மெதுவா பார்த்து பார்த்து பேசுறீங்க?... நான் என்ன பேயா பூதமா?...” என அவள் கொஞ்சம் உரிமையான கோபத்தோடு கேட்க

அவனுக்கு அவளின் அந்த செயலில் சிரிப்பு தான் வந்தது….

“குட்டி தேவதை மாதிரி இருக்குற… உன்னை நான் குட்டி தேவதை மாதிரி மட்டும் தான் நினைக்குறேன்… நீ சொன்ன வேற பேர் மாதிரி இல்லடா கிருஷ்ணா… நீ குட்டிப்பொண்ணு இல்லையா… அதான் கொஞ்சம் நிறுத்தி நிதானமா பேசுறேன்… வேற எதுவும் இல்லடா…” என அவன் அவளைப் பற்றி தான் என்ன நினைக்கிறான் என சொன்னதும், அவளுக்கு தன் தகப்பனின் நினைவு வந்தது..

நொடிக்கு நொடி அவளை சபித்துக்கொண்டிருக்கும் அவரையும், வார்த்தைக்கு வார்த்தை தன்னை தாங்குபவனையும் ஒரு சேர்த்து வைத்து பார்த்துக்கொண்டது அவளின் மனது…

எதுவும் பேசாமல், மெதுவாக நடந்து வருவபவளிடத்தில், “நான் அதிகம் பேசமாட்டேண்டா யார் கூடவும்… கொஞ்சம் அமைதின்னு சொல்லுவாங்க கிளாஸ்ல…. ஆனா எனக்கு தெரிஞ்சு நீ அமைதி கிடையாது… துருதுருன்னு தான் இருப்பா எனக்கு தெரிஞ்ச கிருஷ்ணா… வரும்போது கூட நல்லா தான் இருந்த…. இப்போ திடீர்னு என்ன ஆச்சுடா?...” என கனிவாக அவன் கேட்க

தனது தந்தையை பற்றி சொல்லிவிட்டு, “அவர் அப்படித்தான் திட்டிகிட்டே இருப்பார்… ஆனா அம்மா இருந்திருந்தா அவரை திட்ட விட்டிருக்கமாட்டாங்கல்ல…” என அவள் சொன்னதும்,

அவளின் வேதனை அவனுக்கு புரிந்தது…. தன்னை விட சின்ன வயதில், ஏன் இவளுக்கு இப்படி ஒரு நிலை… கடவுளே இது மாறாதா?.... என அவன் வேண்டிக்கொண்டிருந்த வேளை,

“அப்பா திட்டுறது… அம்மா இல்லாதது எதுவும் உங்க கூட இருக்கும்போது எனக்கு தெரியலை சகி….” என வெகுளியாய் அதே நேரத்தில் உண்மையாய் அவள் சொல்ல, அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…

“தன்னை அருகாமை அவளுக்கு இப்படி ஒரு நிறைவை தரும் என்றால், காலம் முழுக்க அவளுடனே நான் இருந்திட வேண்டும்… கடவுளே…” என மனதிற்குள் அந்த நொடி நூறு முறை வேண்டிக்கொண்டவனை “ஏன் இப்படி வேண்டிக்கொண்டாய்?...” என யாரேனும் கேட்டிருந்தால் நிச்சயம் அவனுக்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அப்போது….

“என்னாச்சு சகி?... ஏன் ஒரு மாதிரி ஆகிட்டீங்க?...” என அவள் அவனை சத்தமிட்டு அழைக்க,

அவள் விழிகளைப் பார்த்தவண்ணம், “நான் உங்கூடவே இருப்பேண்டா… சரியா?...” என கேட்ட நொடியில், அவள் விழிகள் தானாகவே கலங்கியது… உதடுகளில் ஏனோ சிரிப்பும், முகத்தில் ஏனோ இனம் புரியாத மகிழ்ச்சியும் தோன்ற,

“நானும் உங்க கூடவே இருப்பேன்…. சரியா?...” என்றாள் அவளும் பதிலுக்கு….

இருவரின் முகத்திலும் புன்னகை மலர, அப்படியே நடந்து சென்று கொண்டிருந்தனர் பள்ளிக்கு….

தொடரும்

Episode # 23

Episode # 25

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.