(Reading time: 17 - 33 minutes)

"னதிற்குகந்தந்து முருகன் ரூபம்,

மாயயை நீக்குவது அவன் திருநாமம்"

என்று சிந்து பைரவி குழைந்து வந்தது சாரதாவின் குரலில்.. நல்ல நிறத்தில் அழகே உருவாக ஏதோ மயிலை கற்பகாம்பாளே இறங்கி வந்து அமர்ந்திருந்த மாதிரி ஒரு தேஜஸ்..

நிறைமாத கர்ப்பம்.. எட்டு மாதம் முடியும் தருணம்.

சாரதாவுக்கு இது நான்காம் பிரசவம். முதல் மூன்றும் பெண்கள்.. ரஞ்சனி, கல்யாணி, மஹதி என்று.. இதில் மஹதிக்கு மூணு வயது பூரணமாகும் முன்பே இதோ வயிற்றில் நான்காவது வந்து விட்டது.. அவளும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாள் இந்த கர்பத்தை கலைக்க.. ராமமூர்த்தி ஒத்துக் கொள்ளவே இல்லை.

"பகவான் நமக்கு ஏதோ ஒரு காரியத்தை முன்னிட்டு இந்த வரப்பிரசாதத்தை கொடுத்திருக்கிறான்.. அதை கலைப்பது எந்த விதத்தில் நியாயம்.. நானும் கூட மூன்றும் பெண்ணாகி போனதே, இனிமேல் நமக்கு குழந்தை வேண்டாம் என்று தான் நினைத்தேன்.. ஆனாலும் எப்படியோ இது தங்கி விட்டது.. பிறக்க வேண்டும் என்று விதி இருக்கும் போது யார் அதை தடுப்பது", என்று கூறி முடித்து விட்டார்.

"ஏண்டி சாரதா.. ஏதாவது நல்ல ஆண் ராகத்தில் பாட்டு பாடுவதுதானே.. அப்பவாவது நோக்கு பிள்ளை பிறக்கறதான்னு பார்க்கறேன்..", என்று நிஷ்டூரமாக வந்த குரலில், தன் மோனத்தை கலைத்தவள் தம்பூரவை ஓர் ஓரமாக வைத்துவிட்டு நெஞ்சம் துடிக்க பயத்துடன் தன் மாமியார் ராஜத்தை ஏறிட்டு பார்த்தவள் மெல்ல, வலக் கையை ஊன்றி எழுந்து நிற்க முயற்ச்சித்தாள்.

"அம்மா" என்று ஓடி வந்தார்கள் ரஞ்சனியும் கல்யாணியும்.. அவர்கள் பின்னே அழகிய முயல் குட்டி போல் மஹதி மெல்ல தளிர் நடையிட்டு வரக் கண்டவள்,

மஹதியை அணைத்துக் கொண்டு.. "செல்லகுட்டி..என்னம்மா வேணும் பாப்பாக்கு..தொப்பை பசிக்கறதா? மம்மு தரட்டா?" என்று கேட்டவளை பார்த்த மூத்த பெண்கள்,

"அம்மா எப்பவும் பாப்பாக்கு தான் முதல்லே தருவியா?. நான் எவ்வளவு நாளா சொல்லிண்டு இருக்கேன் எனக்கு முறுக்கும் தட்டையும் பண்ணித்தான்னு..?", என்று புகார் படித்தாள் பத்து வயது ரஞ்சனி.

"இல்லேடா நிச்சயம் உனக்கு பண்ணித்தரேன்.. அப்பாகிட்டே சொல்லி சாமான்லாம் வாங்கிண்டு வர சொல்லறேன்..", என்று அவள் முடிக்கும் முன்னமே அவள் மீது பாயத் தொடங்கினாள் ராஜம்..

"ம்ம்..இப்போ என்ன விசேஷம் வெச்சுக் கிடக்கு..இங்கே பட்சணம் பண்ணி அத்தூளி பண்ண?.. என் பிள்ளை ஏதோ சம்பாதிக்கறான்.. அதையும் இப்படி தின்பண்டத்துலேயே கரியாக்குவாளா?..பிசாத்து பணம் நீயும் தான் சம்பாதிக்கறே.. இதிலே இந்த மாதிரி சொகுசு வாழ்க்கை நமக்கு கட்டுபடியாகுமா?..நாளைக்கு கல்யாணம் கார்த்தின்னு இதோ நீ பெத்து போட்டிருக்கியே பொண்ணரசிகள் மூணு..அதுகளுக்கு செய்ய சேக்க வேண்டாமா?", என்று வார்த்தைகளை துப்பினாள்.

"ஏம்மா அப்படி சொல்லறேள் குழந்தை ஆசையா கேக்கறது..", என்று இழுத்த சாரதாவை ஆத்திரத்துடன் முறைத்த ராஜம்..

"நன்னா பதிலுக்கு பதில் பேசு....ஆனா காரியத்துலே கோட்டை விட்டுடு..மூணும் பொண்ணு..இந்த லட்சணத்திலே நாலாவது வேற?..யார் பாத்துப்பா..சமார்த்தியம் கெட்டவ....நானும் தான் பெத்தேன்..நறுக்குன்னு பேர் சொல்லறாப்போல ஒரு பிள்ளை..தலைச்சனே பிள்ளை..அப்பிடி இருக்கனும்.. வந்த வழி அப்பிடி.. எங்காத்துலே எல்லாருக்கும் முதல் பிள்ளை குழந்தை தான் தெரியுமோ..", என்று பீற்றத் தொடங்கினாள்.

"ரஞ்சு நீ போ பாப்பாவுக்கு சாக்லேட் எடுத்து குடு..", என்று மூன்று பேரையும் அனுப்பி வைத்து விட்டு,

"ஏம்மா எங்காத்துலேயும் அண்ணா தான் மொதல்லே..", என்று சாரதா முடிக்கும் முன்னரே..

"ஆஹா.. நல்ல அண்ணண் நோக்கு.. அதான் வெள்ளைகாரியை இழுத்துண்டு ஓடிட்டானே..அவன் யோக்யதை பத்தி தான் மாயவரமே சிரிப்பா சிரிச்சுதே....உங்கப்பா அம்மா தான் அங்கே வெக்கமில்லாம உக்காண்துண்டு இருந்தா பிள்ளை வருவான் தங்களையும் கூட்டிண்டு போவான்னு.. என்ன ஆச்சு.. இதோ ஆறேழு வருஷம் ஓடி போனதுக்கப்புறம் எல்லாத்தையும் வித்துட்டு கொஞ்சம் வெச்சிண்டு..இங்கே வந்து கூடாரமடிச்சுட்டா..", என்றாள்

எல்லோரும் தப்பாக நினைத்து விட வேண்டாம்..சாரதாவின் பெற்றோர் கொஞ்சம் நிலத்தை விற்று விட்டு வீட்டை காலி செய்து விட்டு இதே மெட்ராஸில் இவர்கள் இருக்கும் மாம்பலத்திலிருந்து கொஞ்சம் தள்ளி மைலாப்பூரில் ஒரு தனி வீட்டில் இருக்கிறார்கள். அதற்கே என்னமோ இவள் வீட்டிலேயே அவர்கள் தங்கிவிட்டது போல் பேசுவாள் ராஜம்.

"இல்லேம்மா.. பொண்ணோ பையனோ எல்லாம் நம்ம கையிலேயா இருக்கு.. எல்லார் பகவான் கொடுக்கறது..",

"ம்ம்.. கொடுப்பார் கொடுப்பார்.. ஒன்னு மட்டும் கேட்டுக்கோ.. இந்த வாட்டி எனக்கு நெய் பந்தம் பிடிக்க ஒரு பேரனோட வந்தா வீட்டுக்கு வா இல்லையா.. அப்படியே உங்கம்மாவாத்துலேயே போயிடு.. பொண்ணுன்னா நேக்கு விவரம் கூட குடுக்காதேள்.. அதுக்கபுறம்.. இந்த வீட்டுக்கும் உனக்கும் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சுண்டு அங்கேயே தங்கிடு..சொல்லிட்டேன்..", என்றாள் தன் பெரிய கண்களை உருட்டியபடி கோபமாய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.