(Reading time: 17 - 33 minutes)

"ம்மா இப்படி பேசறேள்.. நேக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கு என்னை அந்த கற்பகாம்பாள் கைவிட மாட்டான்னு..", என்று மெல்லிய குரலில் கூறிய சாரதாவுக்கு பயத்தில் கண்களில் நீர் துளிர்த்தது.

"இந்தாடி.. இந்த மாதிரி அழுது ஆகாத்தியம் பண்ணரதெல்லாம் என் கிட்டே நடக்காது இனிமேல்...நான் சொன்னா சொன்னதுதான் நோக்கு தெரியுமில்லே.. எப்படியாவது மாய்மாலம் பண்ணி என் பிள்ளையிடம் அழுது  புரண்டு சேந்துக்கலாம்னு மாத்திரம் தப்பு கணக்கு போட்டுடாதே.. நான் உசிரோட இருக்கறதுமட்டும் அது நடக்காது.. என் பிள்ளைக்கு ஏற்கனவே ஒரு நல்ல பொண்ணை பார்த்து வச்சுட்டேன்... இன்னும் ரெண்டு மாசத்துலே உன்னோட பவிஷு தெரிஞ்சுடும்", என்று தோள் பட்டையில் முகத்தை இடித்து கொண்டு உள்ளாஎ போனாள்.

சரதாவிற்குள் பயம் பந்தாய் திரண்டு தொண்டையில் அடைத்து கொண்டாற் போல் இருந்தது.. சே..என்ன மனுஷி இவர்.. தானும் பெண்ணாய் பிறந்திருந்தும் கூட மற்ற பெண்ணுக்கு இந்தளவு தீங்கு நினைக்கிறாறே?.. குழந்தை என்பது தெய்வத்தின் பரிசல்லவா.. கடவுளுக்கு சமானம் என்பது எல்லாம் பொய்யா?.. இந்தழகில் நம்மை தாலி கட்டி தன்னில் பாதியாக்கி கொண்ட மஹானுபாவன்.. எப்படியாவது அம்மாவை நான் சமாதானப் படுத்துவேன் என்று வாக்கு வேறு கொடுக்கிறார்..

'எங்கே போய் சொல்லி அழ முடியும்..பாவம் அவர் இந்த மாமிக்கு ஒரே பிள்ளையாய் பிறந்து அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்டார்.. அவருக்கு இருக்கும் ஒரே ஆதரவு நானும் என் குழந்தைகளும் தான்.. சொற்ப சம்பளத்தில்..இரண்டு தங்கைகளை கரையேற்றி.. அம்மாவை பார்த்து கொண்டு போதாதற்கு சுமையாய் நானும் மூன்று பெண்களும்..ஒரு வார்த்தை கூட நம்மை கடிந்து பேசியதில்லை அவர்.. தாலி கட்டிய தோஷத்திற்காக அவர் அம்மாவின் அனைத்து ஏச்சு பேச்சுக்களையும் பொறுத்து கொண்டு இத்தனை நாள் இருந்துவிட்டேன்..'

'ஆனால் இந்த முறை மாமியாரிடம் நம் பாச்சா பலிக்காது.. ஏதோ முடிவு செய்து விட்டு தன் இப்படி பேசுகிறார்.. பார்க்கலாம் நாளை அப்பா அம்மா வந்தவுடன் ஏதாவது நிச்சயம் பேசி முடிவு செய்ய வேண்டும்', என்று நினைத்தவளை ராமமூர்த்தியின் குரல் உலகிற்கு அழைத்து வந்தது.

"வாங்கோன்னா..  கார்த்தலேயே எங்கே போயிட்டேள்?.. மஹதி ரொம்ப தேடித்து உங்களை..", என்று அன்புடன் கூறியவளை ஒரு கணம் பார்த்தவர்,

"அதில்லைம்மா.. என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் படப்பையிலே ஒரு கோவில் இருக்கு..அங்கே போய் நம் மனக்குறையை சொல்லி வேண்டிண்டா அந்த அம்பாள் நிச்சயம் நாம் கேட்கும் வரம் தருவான்னு சொன்னான்..அதான் போய் வேண்டிண்டு வந்தேன்.. இந்த முறையானும் நமக்கு பிள்ளை பொறக்கனும்னு.. என்னாலே இதைத் தவிர ஏதும் பண்ண முடியதே..", என்றார் பரிதாபமாக.

"ஏன்னா..உங்களுக்கு கூடவா பிள்ளை ஆசை பிடிச்சுண்டுடுத்து.. இது நாள் வரை ஒரு வாட்டி கூட என்னை நீங்க குறை சொன்னதில்லை..ஆனா இப்போ பிள்ளை வேணும்னு வேண்டிக்கறதுக்காக கோவிலுக்கு போனேள்னா கேக்கறதுக்கே எனக்கு கஷ்டமா இருக்கு.. மறுபடியும் பொண்ணு பொறந்தா நாம என்ன செய்ய முடியும்?.. இதுக்குத்தான் நான் தலை பாட அடிச்சுண்டேன் நான் ஆபரேஷண் பண்ணின்டுடறேன்ன்னு.. இப்போ பாருங்கோ.. நித்ய கண்டம் பூரண ஆயுசுன்னு, நிமிஷத்துக்கு நிமிஷம் டென்ஷன் கூடிண்டே போறது..",என்றவளின் கண்கள் நீரை சுரக்க ஆரம்பித்தது.

மெல்ல அவள் கண்களை துடைத்தவர் சாரதாவை அணைத்து கொண்டு," சாரு.. பகவான் ஒரு வழி காமிப்பார்.. கவலைப்படாதே நம்பு.. இந்தம்மா உன்னை இன்னமும் சித்தரவதை பண்ண ஆரம்பிச்சுடுவாளேன்னு தான் நான் வேண்டிக்க போனேன்.. திக்கற்றவருக்கு தெய்வம் தானே துணை.. என் தங்கைகளுக்கும் பிள்ளை பொறந்ததுலே அம்மா இன்னமும் மோசமா உன்னை நடத்த ஆரம்பிச்சாச்சு.. என்னாலயோ அவளை எதிர்க்க முடியலை.. ஏதோ ஒரு கையாலாகதத்தனம்.. சின்ன வயசிலேந்து எங்களை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினாள், அவளை நான் என்ன எதிர்த்து செய்ய முடியும்..அதான் அந்த தெய்வத்தின் கால்லே விழுந்துட்டு வரேன்", என்றவர் கையிலிருந்த குங்குமப் பிரசாதத்தை அவள் நெற்றி வகிட்டில் வைத்தார்.

"எனக்கு ஒன்னும் சொல்லத் தெரியலேன்னா.. ஆனா நீங்க இல்லாம எனக்கு வாழ்க்கை இல்லை.. எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு..உங்க வம்ச விருத்திக்கு ஒரு பிள்ளையை பெற்றுக் கொடுக்க முடியலையேன்னு..ஆனா அது நம்ம கையிலே இல்லையே.. நானும் தினமும் அந்த ராமரை வேண்டிக்கறேன்..ஸ்ரீ ராமா ஒரே ஒரு பிள்ளையைத் தான்னு.. அவன் தயவு இன்னும் கிட்டலையே..", என்று தழுதழுதுத்தாள்.

"சரிம்மா..கஷ்டப் படாதே நம்ம கஷ்டத்துக்கும் ஒரு விடிவு வரும்..இன்னும் ரெண்டே நாள்ல நீ உங்கம்மாவாத்துக்கு போயிடுவே..நான் அப்பப்போ முடியரப்போ வந்து பாத்துக்கறேன்..ஹாஸ்பிடலில் சேர்ந்தாவிட்டு சொல்லி அனுப்பு வரேன்.. நம்ம மூணு பொண்ணுகளையும் நான் பத்திரமா பார்த்துக்கறேன்..", என்றவர், அதற்குள் தாயின் குரல் கேட்க சட்டென்று அவளை விட்டகன்று ரூமிற்குள் சென்று மறைந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.