(Reading time: 9 - 17 minutes)

04. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

mannan

முதலிரவு அறைக்குள் அனுப்பப்பட்டவுடன் குதிரைவீரன் உடனே போய் மஞ்சத்தில் அமர்ந்து விடவில்லை.முதல் நாள் வரை அபரஞ்சிதாவின் கணவன்மார்கள் ஒவ்வொருவராய் அந்த அறையில்தான் மாண்டு போய் இருக்கிறார்கள்.அப்படி என்றால் அவ்வறையில் ஏதோ ஒரு மர்மம் இருக்கவேண்டும்.அந்த மர்மம் அந்த காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்பதைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று உறுதியாய் இருந்தான் அவன்.

முதலிரவு அறையின் நடுனாயகமாகக் கிடந்த மஞ்சம் நீளமும் அகலமுமாய் ப்ரம்மாண்டமாய் இருந்தது.உயர்தர இலவம் பஞ்சினாலும் அன்னப்பறவையின் இறகுகளாலும் மயிலின் பீலியினாலும் அடைக்கப்பட்டது போல் அவ்வளவு மிருதுவாகவும் இருந்தது.அம் மஞ்சத்தின் மேற்புரம் முழுதும் வாசனைப் பூக்கள் தூவப்பட்ட்டிருந்தது..மஞ்சத்தின் நாற்புரமும் சரம் சரம்மாய்ப் பூக்கள் தொங்கவிடப்பட்டிருக்க எதிர் சுவற்றில் காதல் ரஸம் ததும்பும் கண்ணன் ராதை மற்றும் ரதி மன்மதன் ஒவியங்கள் வண்ணங்களில்.ஆள் உயர குத்து விளக்கொன்று ஐந்து முகங்கள் மூலம் லேசாய் ஒளியை உமிழ்ந்தபடி நின்றிருந்தது.மஞ்சத்தின் மேலே அழகிய வேலைப்பாடோடு கூடிய அலங்காரத் துணி கூடாரம்போல்.தூரத்தில் மெல்லிய திரைச் சீலை அசைந்து கொண்டிருந்தது..கண்களுக்கு மட்டுமே விருந்தில்லாமல் நாவுக்கும் விருந்தளிக்கக் கூடிய மணக்கும் பட்சண வகைகள், பானங்கள் குறைவில்லாமல் வைக்கப்பட்டிருந்தன..

மொத்தத்தில் தேவ தச்சன் மயன் அமைத்த முதலிரவு அறைபோல் அமர்க்களமாய் அழகாய் அசத்தலாய் இருந்தது அம் முதலிரவு அறை. சினிமா பட முதலிரவு அறைபோல் அமர்க்களமாய் இருந்த அந்த அறையெங்கும் அடி அடியாய் நடந்து ஏதாவது வித்தியாசமாய் கண்களில் படுகிறதா என்று உற்று உற்றுப் பார்த்தான்.ஏதும் படவில்லை.மஞ்சத்திற்குமேலாக அழகுக்காகக் கட்டப்பட்டிருந்த அஸ்மான கிரி என்று சொல்லப்படும் கூடாரம் போல் கட்டப்பட்டிருந்த மெல்லிய அலங்காரத் துணியினை ஆட்டிப் பார்த்தான்.பின்னர் காற்றுக்காகவும் வெளிச்சத்திற்காகவும் அமைக்கப்பட்டிருந்த சுவற்றின் மேலே இருந்த சாரளங்களைப் பார்த்தான்....ஊகூம் ஒன்றும் தென்படவில்லை வித்யாசமாய்...இலவம் பஞ்சினாலும் அன்னப் பறவையின் மெல்லிய இறகுகளாலும் மயில் பீலியாலும் அடைக்கப்பட்ட மஞ்சத்தை தூக்கி அதனடியில் ஏதும் தென்படுகிறதா என்று பார்க்க ஒன்றுமில்லை அங்கும்..ஒன்றும் புரியவில்லை குதிரை வீரனுக்கு.அகிற்புகையும் சந்தனமுமாய் மெல்லிய வாசம் அந்த அறையில் தவழ்ந்ததேயன்றி மயக்கம் வரும் அளவுக்கு எந்த வாசனையும் வீசவில்லை.

சுவற்றில் மாட்டியிருந்த வண்ணப் படங்களைக் கழற்றி அதன் பின்புரம் ஏதாவது சுரங்கப் பாதை இருக்கிறதா?அதன் வழியாக யாராவது உள்ளே நுழைய சாத்தியம் உள்ளதா என்றெல்லாம் மிகக் கவனமாகப் பார்த்தான் குதிரைவீரன்.

வன் இவ்வளவு தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அபரஞ்சிதா மிகுந்த சோகத்தோடு சுவற்றில் சாய்ந்துகொண்டு நின்றிருந்தாள்.அப்படி நின்று கொண்டிருந்தவள் ஒரு நிமிடம் ஒரே நிமிடம் ஏன் அதற்கும் குறைவான நேரமே அங்குமிங்கும் ஏதாவது தென்படுகிறதாவென தேடிக்கொண்டிருந்த குதிரைவீரனைப் பார்த்தாள்.அவனின் வசீகரமும் அறிவும் ததும்பும் முகமும் அவனது திண்ணிய தோள்களும்,அவன் உறுதியாய்க் கால்களை பூமியில் பதித்து நிற்கும் தோரணையும் கம்பீரமான அவனின் நடையும் தேக்கு போன்ற அவனின் உடலும் அபரஞ்சிதாவின் கண்களில் நுழைந்து இதயத்தில் இடம் பிடித்தது.ஆம் அவளின் நெஞ்சினில் காதல் பூத்தது.சாதாரணமாய்ப் பெண்களின் மனதில் சட்டென காதல் மலர்வதில்லை.அப்படி மலர்ந்து விட்டால் மனம் கொய்தவனை மறக்க முடிவதில்லை.சில பெண்கள் காதலித்து காதலித்தவனைக் கரம்பிடிப்பர்.சில பெண்கள் கரம்பிடித்த பின் காதலிப்பர்.அப்படிக் கரம் பிடித்து விட்டால் அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என நினைப்பர்.எல்லாப் பெண்களும் இதில் ஒன்றுதான்.அபரஞ்சிதாவும் அன்னிலையில்தான் இருந்தாள்.வழக்கம்போல் இந்த இரவு இவனுக்கும் கடைசி இரவாய் ஆகிவிடுமோ எனப் பயந்தாள்.இதுவரை கணவனாக வந்த எந்த ஆணையும்  அவள் இப்படி மனதால் நெருங்கியதில்லை. ஒவ்வொரு நாளும் முதலிரவில் இறக்கும் ஆணின் உயிரற்ற உடலைப் பார்த்து அவ்வுடலைத் தொடாமலே பயமும் வருத்தமுமாய் கத்தியிருக்கிறாளேயன்றி கணவனாய் வரித்ததில்லை.தினம் தினம் அது ஒரு சடங்காகவே நடந்தது.ஆனால் தன் மனம் கவர்ந்த இவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என நினத்தவளின் கண்களில் கண்ணீர் அரும்பியது.

இனித் தேடிப்பார்க்க ஏதுமில்லை என்ற எண்ணத்தோடு சுவற்றில் சாய்ந்தபடி நிற்கும் அபரஞ்சிதாவை நெருங்கினான் குதிரைவீரன்.ஒருவித நடுக்கத்தோடு நின்றிருந்த அபரஞ்சிதா தனது புதிய கணவன் அருகில் வரவும் கலக்கமடைந்தாள்.அவன் தன் கை தொட்டு விட்டால் அவனுக்கு மரணம் சம்பவித்து விடுமோ என அஞ்சினாள்.ஓரடி பின்னுக்கு நகர்ந்தாள்.அவளின் மன ஓட்டத்தை அறிந்தானோ என்னவோ குதிரைவீரன் திரும்பி மஞ்சத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.

பரஞ்சிதா...இங்கே வா..அழைத்தான்..

ஒருவித பயத்தோடும் கலக்கத்தோடும் நின்று கொண்டிருந்த அப்ரஞ்சிதா அவன் அழைத்ததும் செல்லாவிட்டால் எங்கே அவன் தன்னை வலுக்கட்டாயமாய்க் கை பிடித்து அழைத்துச் செல்லமுயன்றால் இவனுக்கு முந்தைய கணவரெல்லாம் தன்னைத் தொட முயல அவர்களின் கை தன் மீது பட்டவுடனேயே அவர்களுக்கு ஏற்பட்ட  அசம்பாவிதம் இவனுக்கும் நடந்துவிடுமோ என்ற அச்சம் மீண்டும் மனதில் எழ மேலும் தாமதிக்காது மஞ்சத்தை நோக்கி நடந்தாள்...நடுக்கத்தோடும் பயத்தோடும் அவனருகில் ஆனால் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.