(Reading time: 11 - 21 minutes)

19. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

விமலாவின் அன்னையையும், தங்கையையும் பார்த்த ஸ்ரீதரின் தந்தை கதவைக் கூட முழுதாகத் திறக்காமல் அதிர்ந்து நின்றார்.  இந்த நேரத்தில் யார் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்று அவர் பின்னோடு பார்க்க வந்த ஸ்ரீதரின் தாய் மதிக்கு அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் சுறு சுறுவென கோவம் ஏறியது.

“இப்போ எதுக்காக இங்க வந்திருக்கீங்க.  மிச்சம் மீதி இருக்கற எங்க உயிரை எடுக்கறதுக்கா?”, விமலாவின் தாய் சாவித்ரியிடம்  கோவத்துடன் மதி  கேட்க, அவர் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தார்.

“கோவப்படாதம்மா.  வீட்டுக்கு  வெளிய அவங்களை நிக்க வச்சு  கத்தறது  நல்லா இல்லை மதி.  முதல்ல உள்ள வரட்டும்”

Vidiyalukkillai thooram

“பரவா இல்லை, அண்ணி திட்டட்டும் அண்ணா.  நாங்க பண்ற வேலைக்கு அவங்க எங்களை அடிக்காம விட்டதே பெரிசு”, சாவித்திரி கண்கலங்கியபடியே கூற, ஸ்ரீதரின் தந்தை அவர்களை உள்ளே அழைத்து உட்கார வைத்தார்.  அப்படியே சமயலறைக்கு சென்று தண்ணீரும் எடுத்து வந்து கொடுத்தார்.

“ரொம்ப நன்றிண்ணா.  எங்கமேல இருக்க கோவத்துல வாசலோடவே  அனுப்பிடுவீங்களோன்னு நினைச்சேன்.  என்ன இருந்தாலும் பெரிய மனுஷன்னு நிரூபிச்சுடீங்க”

“எனக்கு கோவம் இல்லைனா நினைக்கறீங்க,  அது கழுத்து வரைக்கும் இருக்கு.  ஆனா உங்க புருஷன் மாதிரி தேவையில்லாம  அதைக் காட்டுறது இல்லை”, மிகக்காட்டமாகக் கூற அவமானத்தில் தலைக்குனிந்தார் சாவித்திரி.

“சரி, இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கீங்க.  அடுத்து என்ன குண்டு போட இருக்காரு உங்க புருஷன்”

“அண்ணா, அண்ணி உங்க ரெண்டு பேர்க்கிட்டயும் அவர் சார்பா நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்”

“ஏம்மா நீ மன்னிப்புக் கேட்டா அந்தாளும், உன் பொண்ணும் பண்ணினதெல்லாம் இல்லைன்னு ஆயிடுமா.  ஒவ்வொருத்தனும் கேள்வி கேக்கும்போது நாக்கை பிடிங்கிட்டு சாகலாம் போல இருக்கு”

“உங்க நிலைமை எனக்குப் புரியுது அண்ணா.  நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் அவங்களோடப் போராடிப் பார்த்துட்டேன்.  ஆனா அவங்க ரெண்டு பேரும் திருந்தறா மாதிரித் தெரியலை.  அதுதான் நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்”, சாவித்திரி சொல்ல அப்படி என்ன முடிவு என்பது போல் ஸ்ரீதரின் தாயும், தந்தையும் பார்த்தனர்.

“அண்ணா, தப்பு எல்லாத்தையும் அவங்க மேல வச்சுட்டு தேவையே இல்லாம உங்க மேல புகார் கொடுத்து, வக்கீல் நோட்டீஸ் அனுப்பின்னு வம்பு பண்ணிட்டு இருக்காங்க.  இது எல்லாம் அவங்க பண்றதுக்கு காரணம் எங்களுக்கு எதிரா சொல்ல உங்கக்கிட்ட சாட்சியம் இல்லை.  இப்போ அந்த சாட்சியாதான் நான் வந்து இருக்கேன்”,என்று சொல்ல ஸ்ரீதரின் பெற்றோர் அவரை அதிர்ந்து பார்த்தார்கள்.

“என்னம்மா சொல்ற.  அவங்களுக்கு எதிரா நீ சாட்சி சொல்லப் போறியா.  அவங்க செஞ்சது என்ன சின்னத் தப்புன்னு நினைச்சியா.  விஷயம் வெளிய வந்தா அவங்க ரெண்டு பேரும் எத்தனை வருஷம் கம்பி எண்ணனும் தெரியும் இல்லை.  உன் புருஷன் எல்லாத்தையும் விட்டாச்சு.  இப்போத் திருந்தி நல்லபடியா இருக்கோம்ன்னு சொன்னதாலதான் அவங்க பண்ணினது சட்ட விரோதம்னாலும் ஒரு பொண்ணோட வாழ்க்கைன்னு சும்மா இருந்தோம்”

“ஆமாண்ணா நானும் அப்படித்தான் நினைச்சேன்.  மொதல்ல இவங்க ரெண்டு பேரும்  செய்யற தப்பே எனக்குத் தெரியாமத்தானே இருந்தது.  நான் இந்த அளவு மோசமானவங்களா இருப்பாங்கன்னு நினைக்கலை.  நீங்க ஆதாரத்தோட நிரூபிச்ச உடனதான் எனக்கு விஷயமேத்  தெரியும்.  அதுக்கூட அவங்க திருந்துவாங்கன்னு நினைச்சேன்.  ஆனா போகப் போக மோசமாத்தான் போறாங்க. போனாப் போகுதுன்னு விட்டுக் கொடுக்க அவங்க பண்றது சின்னத் தப்பு இல்லைண்ணா. எத்தனை பேர் வாழ்கை.  என் குடும்பம்னாலும் தண்டனை கண்டிப்பா கிடைக்கணும்”

“சரிம்மா, இரு நான் ஸ்ரீதர்க்கு போன் பண்ணி வர சொல்றேன்.  அவன் வந்தப்பறம் நாம பேசலாம்.  நீங்க ரெண்டு பேரும் ஏதானும் சாப்பிட்டீங்களா?  மதி போய் இவங்க ரெண்டு பேருக்கும் சாப்பிட ஏதானும் கொண்டு வா”, ஸ்ரீதரின் தந்தை சொல்ல, வேண்டா வெறுப்பாக சமயலறைக்கு எழுந்து சென்றார் மதி. 

ஸ்ரீதரின் தந்தை அவனுக்கு போன் செய்து விஷயத்தை சுருக்கமாகக் கூற, அவனும் உடனே கிளம்பி வருவதாகக் கூறினான். 

வீட்டிற்கு வந்த ஸ்ரீதரிடம், சாவித்திரி மறுபடி மன்னிப்பு கோர, அவனும் அவர்களை முதலில் சாப்பிட சொல்லி பிறகு பேசலாம் என்று கூற, அவர்களும் மதி கொடுத்த சிற்றுண்டியை சாப்பிட ஆரம்பித்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.