(Reading time: 11 - 21 minutes)

நீங்க இப்போ பேசினது, எங்களுக்கு உதவறதா சொன்னது எல்லாம் உண்மையா, இல்லை புதுசா ஏதானும் உங்க புருஷன் பிளான் பண்றாரா?”, ஸ்ரீதர் கேட்க, சாவித்திரி  தான் சொல்லுவது அனைத்தும் சத்தியம் என்றும், எந்த நிலையிலும் மாற மாட்டேன் என்றும், தாங்கள் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இருப்பதாகவும்   கூற, அவன் வக்கீல் வரதனுக்கு அழைத்து சாவித்திரி வந்த விவரத்தைக் கூறி அடுத்து என்ன செய்வது என்று கேட்க, வக்கீலும் இன்று அவருக்கு கோர்ட்டில் வேலை இருப்பதாகவும், நாளை காலையில் விமலாவின் தாயை அழைத்துக்கொண்டு வந்து தன்னை பார்க்குமாறும் கூறினார்.

“வக்கீல் சார் நாளைக்கு காலைல ப்ரீயா இருப்பேன்னு சொல்றாரு.  உங்களால வர முடியுமா?”

“கண்டிப்பாத்  தம்பி.  நாங்க என் தம்பி வீட்டுலதான் தங்கப் போறோம்.  எத்தனை மணிக்கு வரணும் சொல்லுங்க.  அவர் வீட்டு விலாசமும் கொடுங்க.  நாங்க நேரா அங்கவே வந்துடறோம்”

“நான் ஒண்ணு சொல்லுவேன் கேப்பீங்களா?”, என்று ஸ்ரீதர் கேட்க, என்ன என்பதுப்போல் சாவித்திரி பார்த்தார்.

“நீங்க இன்னைக்கு உங்க வீட்டுக்குப் போங்க.  நீங்க கிளம்பும்போது அவங்க ரெண்டு பேரும் வீட்டுல இல்லைன்னு சொன்னீங்க.  எப்படி இருந்தாலும் நீங்க வந்தது தெரியாது.   நாளைக்கு வக்கீல் சாரைப் பார்த்துட்டு அப்பறம் என்னப் பண்றதுன்னு யோசிக்கலாம்.  முடிஞ்ச அளவுக்கு  அவங்கள மொறச்சுக்காம இருங்க.  அப்பறம் ரூபா நாளைக்கு நீ காலேஜ் போய்டு.  தேவை இல்லாம எதுக்கு லீவ் போட்டுட்டு”, ஸ்ரீதர் சொல்ல, சாவித்ரியும் ரூபாவும் அவன் சொல்வதற்கு சரி என்று விட்டு நாளை காலை அவர்களை சந்திப்பதாகக் கூறி விடைபெற்று கிளம்பினர்.

“ஏம்ப்பா ஸ்ரீதர், இவங்களை எந்த அளவுக்கு நம்பறது.  அந்தாள் இவங்களை வச்சு அடுத்த டிராமா பண்றான்னு தோணுது.  அப்பா  போன் பண்ணி பேசினதுக்கே அந்தாள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினான்.  இப்போ இவங்க இங்க நேரா  வந்தது தெரிஞ்சா என்ன பண்ணுவானோ”,  மதி கவலையுடன் பேசினார்.

“நீங்க சொல்றது சரிதான்ம்மா, அதுதான் நான் அவங்களை நேரா வக்கீல் வீட்டுக்கு வர சொல்லிட்டேன்.  அங்க வந்தாங்கன்னா அந்தாள் எதுவும் பிரச்சனை பண்ண வழி இல்லை.  பார்க்கலாம் இதே கதையை நாளைக்கும் வக்கீல் வீட்டுல சொல்றாங்களான்னு.  சரிம்மா எனக்கு வேலை இருக்கு.  நான் ஆபீஸ் கிளம்பறேன்”,என்று கூறிக் கிளம்பினான்.

 ஸ்ரீதரின் வீட்டிலிருந்து கிளம்பிய சாவித்ரியும், ரூபாவும் ஒரு ஆட்டோவைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தார்கள்.  அவர்கள் உள்ளே நுழையும்போது விமலாவும் அவள் தந்தையும் ஹாலில் அமர்ந்திருக்க, விமலாவின் தந்தை, “என்ன... தம்பி வீட்டுக்குப் போய் எங்களைப் பத்தி போட்டு கொடுத்துட்டு வந்தாச்சா”, என்று கேட்க  சாவித்ரிக்கு பக் என்று இருந்தது.

“என்னை வேவு பார்க்கறீங்களா?”

“ஆமாம் உன்னை வேவு வேற பார்க்கறாங்க.  வீட்டுல இல்லைனா ஒண்ணு, கோவில் இல்லைனா உன் தம்பி வீடு இது ரெண்டு இடம்தான் போவ.  மதியம் கோவில் சாத்தி இருக்கும், அதுதான் தம்பி வீடான்னு கேட்டேன்.  எதுக்கு இப்போ அம்மாவும், பொண்ணும் சேர்ந்து அவன் வீட்டுக்குப் போனீங்க”

அப்பாடா இவர் அங்கு போன் பண்ணிப் பேசவில்லை என்று நிம்மதி அடைந்த சாவித்ரி, “ஆமாம் நீங்க பண்ற வேலை எல்லாம் நல்லாவா இருக்கு.  என்னைக்கு வேணா போலீஸ் ஸ்டேஷன் போய் நிக்கறா மாதிரி பண்றீங்க.  நம்ம பக்கம் பேச ஆள் வேண்டாமா.  அதுதான் அவங்கிட்ட விஷயத்தை சொல்லலாம்ன்னு போனேன்.  நான் போன நேரம், அவன் மாமியார் வீட்டு ஆளுங்களும் வந்திருந்தாங்க.  அதனால ஒண்ணும் சொல்லாமலே வந்துட்டேன்”, என்று போட்டுத் தாக்க, அம்மா எப்படி இப்படி சரளமா புளுகித் தள்ளுகிறார்கள்   என்று,  ‘பே’ என்று பார்த்தாள் ரூபா.

“இதோடா, உன் தம்பி சென்னைல லீடிங் லாயர்.  நீ சொன்ன உடனே பாஞ்சு பாஞ்சு நமக்காகப் பேசி இந்த கேசை வின் பண்ணித் தரப்போறேன்.  போடி போக்கத்தவளே. இங்க பாரு இங்க நடக்கற விஷயம் எதுவும் யார் காதுக்கும் போகக் கூடாது.  மீறிப் போச்சுன்னு வச்சுக்க உனக்கும், அவனுக்கும் சேர்த்து நான் வில்லனா மாற வேண்டி வரும் ஜாக்கிரதை. உங்கம்மாக்குத்தான் அறிவில்லை.  நீ காலேஜ் லீவ் போட்டுட்டு அவன் வீட்டுக்குப் போகனுமா”, தந்தை கத்தியவுடன் ரூபாவிற்கு, சாவித்ரியைப் போல் சரளமாக பொய் சொல்ல வரவில்லை.  அதனால் எந்த  பதிலும்  சொல்லாமல் தலையை மட்டும் குனிந்து கொண்டாள்.

“இங்க பாருங்க இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போய்டல.  அவங்க மேல போட்ட கேஸ் வாபஸ் வாங்கிடுங்க.  நல்லவங்க சாபம் நமக்கு வேண்டாங்க”

“ஐயோ அம்மா, இந்த சீரியல் டைலாக்கை நிறுத்தறீங்களா.  எப்போப் பார்த்தாலும் லொட்டு லொட்டுன்னு ஏதானும் சொல்லிட்டு இருக்கறது.  என்ன பண்ணனும்ன்னு எனக்கும், அப்பாக்கும் தெரியும், நீங்க வீட்டு வேலையை மட்டும் பாருங்க.  அது போதும்.  தேவை இல்லாம இந்த அட்வைஸ் கொடுக்கற வேலை எல்லாம் வேணாம்”

“என்னது, வீட்டு வேலை மட்டும் பாக்கணுமா, நான் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா.  உன் அம்மாடி.  கொஞ்சமானும் மதிப்பு வச்சு பேசு.  இந்த அளவு திமிரு ஆகாதுடி”

“அம்மாங்கறதாலதான் பேசிட்டு இருக்கேன்.  எங்க லெவல் தெரியும் இல்ல.  தேவை இல்லாம நீங்களே உங்களுக்கு பிரச்சனையை இழுத்து விட்டுக்காதீங்க.  அப்பா சொன்னதேதான் நானும் சொல்றேன்.  நம்ம வீட்டுல நடக்கற விஷயம் யார் காதுக்கும் போகக்கூடாது சொல்லிட்டேன்”, விமலா மிரட்டலாகப் பேச, இப்படி ஒரு பெண்ணை பெற்றதற்காக நூறாவது முறையாக வருந்தினார் சாவித்ரி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.