(Reading time: 17 - 33 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 10 - வத்ஸலா

'லோ... '. என்றான் கோகுல். அவனருகில் நின்றிருந்த கோதைக்கு நா வறண்டு போயிருந்தது.

...........................................

'ஹலோ....' என்றான் மறுபடியும், மறுமுனையில் இருந்து சத்தமே இல்லை. ஆனால் மெலிதாக கேட்ட சுவாசம் யாரோ மறுமுனையில் இருப்பதை மட்டும் உறுதி செய்தது.

 

Katrinile varum geetham

'ஹலோ .... நான் கோகுல் பேசறேன்....' மறுமுனையில் இன்னமும் மௌனம்.

ஆனால் இவன் குரல் கேட்டதும் ஒரு நொடி அந்த மூச்சு சத்தம் நின்று தொடர்ந்ததை போல தோன்றியது அவனுக்கு. தவிப்பில் குளித்து கிடந்தாள் கோதை.

சில நொடிகள் கடக்க மறுமுனையில் இருந்து ஒரு குரல் கேட்டது 'நான் வேதா பேசறேன்...'

'ஹலோ... வேதா..... என்னதிது??? நீங்க இப்போ எங்கே இருக்கேள்??? முதல்லே கிளம்பி ஆத்துக்கு வாங்கோ. உங்களுக்கு பிடிக்காதது எதுவும் இங்கே நடக்காது. அதுக்கு நான் பொறுப்பு'  .

மறுமுனையில் பேச்சில்லை. அவன் வேதா என்ற பெயரை சொல்வதை கேட்டவுடனேயே அவனருகில் ஓடி வந்தாள் கோதை

இப்படி பேசாம இருந்தா எப்படி??? நீங்க இப்போ எங்கே இருக்கேள்.???

'நான் ம... ம... ம... மதுரையிலே இருக்கேன்....'

;மதுரையா????'.

'ஆமாம்....கோதை ரொம்ப அழறாளா???? நேக்கு அவ கிட்டே ஒரு வாட்டி பேசணும்'

'வேதா நீங்க முதல்லே ஆத்துக்கு கிளம்பி வாங்கோ

'இல்லை நீங்க கோதைட்ட குடுங்கோ ப்ளீஸ்...'

அவன் வேறு வழி இல்லமல் கோதையிடம் தொலைபேசியை கொடுக்க பதற்றத்துடன்...... 'அக்கா... ' என்றாள் அவள்.

'செல்லம் என்னை மன்னிச்சிடுடா..... நாளைக்கு நேக்கு கல்யாணம்...'

'அக்கா... என்னக்கா நீ முதல்லே ஆத்துக்கு வாக்கா. அப்பாக்கு தெரியாம நீ கல்யாணம் பண்ணிப்பியா??? தப்புக்கா... வந்திடுக்கா..'

'இல்லைடா... அது முடியாது. நேக்கு இவரை தான் பிடிச்சிருக்கு. விட்டுட்டு வர முடியாது. சும்மா உன்னோட பேசணும்னு தோணித்து அதுதான் கூப்பிட்டேன். அக்காவை நினைச்சு அழாதே. அக்காவை பத்தி யோசிக்காதே உன் வாழ்கையை பார்த்துக்கோ. வெச்சிடறேன்...'

'அக்கா... அக்....கா.... கோதை அழைத்துக்கொண்டே இருக்க அழைப்பை துண்டித்துவிட்டிருந்தாள் வேதா.

'போனை வெச்சிட்டா... கண்களில் கண்ணீர் வழிய கோதை கோகுலை பார்த்து சொல்ல .... அவன் தொலைப்பேசியை வாங்கி பார்த்த போது அதில் எந்த சத்தமும் இல்லை. யாருடைய அதிர்ஷ்டமோ??? யாருடைய துரதிஷ்டமோ அது திடீரென செயல் இழந்து போயிருந்தது.

'என்னாச்சு கோகுல்???'

'அவுட் ஆஃப் ஆர்டர்...' ஒரு பெருமூச்சுடன் ரிஸீவரை கீழே வைத்தான்.

'உங்க அக்கா நம்பர் சொல்லு என்றபடி தனது கைப்பேசியில் இருந்து அதை முயல அது அணைக்கப்பட்டிருந்தது. இப்போது எந்த எண்ணிலிருந்து அழைத்திருப்பாள்????.

போன்லே காலர் ஐ.டி இல்லையாடா???

'ம்ஹூம்... இப்போ என்ன பண்றது???

'இரும்மா  டென்ஷன் ஆகாதே இப்படி உட்கார்...' ரெண்டு நிமிஷம் ரிலாக்ஸ்டா இரு  ..' என்றவனுக்கு எத்தனை முறை யோசித்தாலும் விஷயத்தை அவளது தந்தையிடம் சொல்லிவிடுவதுதான் சரி என்று தோன்றியது.

'கோதை பொண்ணு உங்க அப்பாட்ட எல்லாத்தையும் சொல்லிடறது தான் நல்லதுன்னு நேக்கு படறது..'

'என்னனு சொல்றது??? அக்கா வீட்டை விட்டு போயிட்டான்னா??? ரொம்ப பயந்து போயிடுவார்...'

'அதுக்காக சொல்லாம இருக்க முடியுமா??? நான் நிதானமா சொல்றேன் சரியா??? என்றபடியே அவரது எண்ணை அழைத்தான் கோகுல். அந்த நொடியில் சுவாசம் அவளை விட்டு வெகு தூரம் போய்விட்ட உணர்வு அவளுக்கு.

அங்கே அப்பாவின் கைப்பேசி ஒலித்துக்கொண்டே இருக்க அழைப்பு ஏற்கப்படவில்லை. இரண்டு முறை, மூன்றாவது முறை அழைப்பு துண்டிக்கப்பட்டது.

'எடுக்க மாட்டேன்றார். ஒரு வேளை கோவில்லே இருப்பாரோ என்னவோ???. சரி நம்பர் பார்த்துட்டு கூப்பிடுவார்' என்று அவன் சொல்ல.....

பதில் பேசாமல் யோசனையுடனே அமர்ந்திருந்தாள் கோதை. மெதுவாக திரும்பி அவள் முகம் படித்தான் அவளவன்.

'என்னமா யோசனை???

'அப்பா தற்கொலை பண்ணிண்டுடுவாரா கோகுல் ??? ஒரு நொடி அதிர்ந்தான் கோகுல். அவள் விழி தாண்டி இருந்த நீரும், பயம் பரவிக்கிடந்த அவளது கண்களும் அவளது மனநிலையை தெளிவாக உணர்த்தின அவனுக்கு.

பைத்தியமா நோக்கு. தேவை இல்லாம என்னத்தையானும் கற்பனை பண்ணிக்காதே. அப்படி எல்லாம் எதுவும் நடக்காதுடா'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.