(Reading time: 17 - 34 minutes)

அமேலியா - 02 - சிவாஜிதாசன்

Ameliya

நீண்ட உறக்கத்திற்கு பின் வில்லியம்ஸ் மெல்ல கண் விழித்தான். மீண்டும் அதே மருந்துகளின் வாடை. வெறுப்போடு முகம் சுளித்தான். எழும்ப முற்பட்டான், ஆனால் முடியவில்லை. சில மாதங்களாய் மருத்துவமுகாம் படுக்கையிலேயே இருந்ததால், அவன் மனமும் உடலும் சோர்ந்து, சக்தியற்றவனாய் மாறியிருந்தான். கண்ணி வெடியில் இழந்த தன் கால்களை நோக்கினான். துக்கம் அவன் தொண்டையை அடைத்தது. உடலில் ஆங்காங்கே ஏற்பட்ட காயத்தின் வலி அவனுக்கு மேலும் எரிச்சலூட்டியது. வாழ்வதே சாபம் என எண்ணினான்.

அவன் கண் விழித்ததைப் பார்த்த தாதிப்பெண் அவனருகே வந்து, "ஏதாச்சும் உதவி தேவையா?"  என்று கேட்டாள்.

"சாப்பிட ஏதாச்சும் குடுங்க" 

"சற்று பொறுங்கள் " என்று கூறி உள்ளே சென்ற தாதி கஞ்சி போன்ற உணவைக் கொண்டுவந்தாள்.

அதைப் பார்த்த வில்லியம்ஸ், "இன்னைக்கும் இது தானா?" என்று சலித்துக்கொண்டு, "பிளீஸ், வேற ஏதாச்சும் குடுங்க" என்று பரிதாபமாய் கேட்டான்.

"உங்க வாய்ப்பகுதியில இருக்க காயம் இன்னும் முழுமையா குணமடையல, மிஸ்டர் வில்லியம்ஸ். உங்களால மென்னு சாப்பிட முடியாது"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்.... 

படிக்க தவறாதீர்கள்...

"சரி, வச்சிட்டு போங்க" என்றான் சோகமாக.

அவனருகிலிருந்த மேசையில் உணவை வைத்துவிட்டு சில அடிகள் எடுத்து வைத்த தாதி, "உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். உங்க லவர் கால் பண்ணிருந்தாங்க"

"அவகிட்ட நடந்தது எதுவும் சொல்லலியே?"

 "நீங்க வேலையா இருக்கீங்க. இப்போ பேசமுடியாதுன்னு மட்டும் சொன்னேன்"

"தேங்க்ஸ்" வில்லியம்ஸ் கண்களை மூடி நீண்ட பெருமூச்சு விட்டான்.

இந்த 28 வயதிலேயே அவனுக்கு இந்த மோசமான நிலைமை வந்திருக்கக்கூடாது. அவன் ஓர் ஜிம்னாஸ்டிக் கலைஞன். தன் உடலை வில்லாய் வளைத்து சுழன்று தன் உறுதி மிக்க கால்களால் நிற்கும் அழகைக் கண்டு கூட்டத்தினர் ஆர்ப்பரிப்பர். ஜிம்னாஸ்டிக் பயிற்சியின் போது அவன் விழுந்தது கூட இல்லை. அவன் கலையை விரும்பி ரசித்த சாரா அவன் காதலியாய் கிடைத்தாள். இருவரும் சந்தோசமாக தங்கள் காதலை வளர்த்தனர். வில்லியம்ஸ் ராணுவத்தில் சேர்ந்து போர்வீரனாக ஈராக்கிற்கு வந்தான். சிறிது காலத்தில் திரும்பி வந்து சாராவைக் கல்யாணம் செய்துகொள்வதாய் வாக்குறுதி அளித்தான். ஆனால், எதிர்பாராவிதமாய் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி தன் கால்களை இழந்தான். சாராவின் முன் இக்கோலத்தில் எப்படி நிற்பது? தன் வாழ்வு என்னாகும்? சாரா தன்னை ஏற்றுக்கொள்வாளா? தன் வாழ்க்கை இப்படியொரு போராட்டமாய் ஆகிவிட்டதே என்று வருந்தினான்.

"ஹாய் வில்லியம்ஸ் , எப்படியிருக்கீங்க?" என்றபடி கையில் ஒரு பெரிய பார்சலோடு உள்ளே வந்தார் டாக்டர். வயது ஐம்பதைக் கடந்த பின்னும் அவரது திடகாத்திர உடலைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறான் வில்லியம்ஸ். "என்ன வில்லியம்ஸ் , அமைதியா இருக்கீங்க?"

"சந்தோசமா தான் இல்ல, அமைதியாவாச்சும் இருக்கேனே" என்று சோகப் புன்னகையோடு சொன்னான் வில்லியம்ஸ்.

"இன்னைக்கு நீங்க சந்தோசப்பட போறீங்க. அத நான் நிச்சயமா சொல்வேன்"

கேள்விக்குறியோடு பார்த்தான் வில்லியம்ஸ்.

டாக்டர் பார்சலைப் பிரித்து, அதிலிருந்த செயற்கைக் காலை வெளியே எடுத்தார். வில்லியம்சை அமரவைத்து, அவன் வலது முழங்காலில் அதைப் பொருத்தினார். வில்லியம்சிற்கு இலேசாக வலித்தது. ஆவென்று கத்தினான். "கொஞ்சம் பொறுத்துக்கோங்க. ஆரம்பத்துல கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். போகப்போக சரியாய்டும்"

"என்னால நடக்கமுடியுமா டாக்டர்?"

"உங்க வலது கால், முட்டிக்கு கீழ மட்டும் தான் பாதிச்சிருக்கு. ஆனா உங்க இடது கால் முழுசா பாதிக்கப்பட்டிருக்கதால அதுக்கு செயற்கைக் கால் பொறுத்த முடியல. நீங்க ஊன்றுகோல் வச்சு நடக்கலாம்" என்று கூறி தாதியைப் பார்த்தார். அடுத்த நிமிடம் அவள் ஊன்றுகோலோடு வந்தாள். வில்லியம்சை ஊன்றுகோலோடு நடந்து பார்க்க சொன்னார்.

செயற்கைக்கால் மற்றும் ஊன்றுகோலின் உதவியோடு தத்தி தத்தி சில அடிகள் எடுத்து வைத்தான். ஊன்றுகோல் நழுவியது, இருந்தும் அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

"இது உங்களுக்கு திருப்தியா இருக்கா?"

"நடக்கமுடியாம படுத்துட்டே இருக்கதுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல" என்று கூறி சில அடி தூரம் நடந்து கதவைத் திறந்தான்.

அமெரிக்காவின் ராணுவ முகாம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ராணுவத்தினர் வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த இடமே பதற்றம் சூழ்ந்த இடமாக காணப்பட்டது. ராணுவத்தின் உயரதிகாரி வாக்கி டாக்கியில்  "எது நடந்தாலும் கவலையில்லை, நான் சொன்னத செய்யுங்க"  என்று கோபமாக உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். 

நடப்பவற்றையெல்லாம் ஒன்றும் புரியாமல் பார்த்தான் வில்லியம்ஸ்.

"அமெரிக்க பத்திரிக்கையாளரை தீவிரவாதிகள் கடத்திட்டாங்களாம்" என்றார் டாக்டர்.

ஒருவன் கர்னல் ஜார்ஜ் முன் வேகமாக ஓடி வந்தான் " சார் அவங்க குடுத்த கெடு முடிய இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கு "

கர்னல்  ஜார்ஜ் முகம் கடுமையானது. "எனக்கு தெரியும், எப்படியாச்சும் அந்த அமெரிக்க பத்திரிக்கையாளன நாம காப்பாத்தியாகனும்" என்றபடி வேகமாய் நடந்து தனது டெண்டிற்கு சென்று சிறிய தொலைக்காட்சியை ஓட விட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.