(Reading time: 17 - 34 minutes)

"மெரிக்க பத்திரிகையாளனை தீவிரவாதிகள் பணையக் கைதியாக பிடித்து வைத்துள்ளனர். இருபத்தி நான்கு மணி நேரத்தில் அமெரிக்க ராணுவத்தினர் ஈராக்கை விட்டு சென்று விடுகிறோம் என்று கூறினால் கைதியை விடுவிக்கிறோம் இல்லையேல் கொலை செய்துவிடுவோம் என்று கெடு வைத்துள்ளனர்" என்று தொலைக்காட்சி நிருபர் பேசிக்கொண்டிருந்தார் .

ர்னல் ஜார்ஜ் உடலளவில் திடமாய் இருந்தாலும் மனதளவில் மிகவும் சோர்ந்து போயிருந்தார். அவரது ராணுவ வாழ்வில் ஏராளமான மரணங்களை பார்த்திருக்கிறார். அதைப் பற்றி அவர் துளியும் கவலைப்பட்டதில்லை. போர் என்றால் இருபக்கமும் மரணங்கள் நிகழும். ராணுவ வாழ்க்கையில் ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும் தான் போராடுவார்கள்  அது தான் வெற்றி. வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். இது தான் எழுதப்படாத விதி .

ஜார்ஜ் நிறைய போர்களில் கலந்து வெற்றிவாகை சூடியிருக்கிறார். கடுமையான போராளி, எதற்கும் கலங்காதவர் என்று பெயர் எடுத்த ஜார்ஜ் தன் மனைவியின் இறப்பைக் கண்டு துடிதுடித்துப் போனார். கார் விபத்தில் படுகாயத்தோடு மருத்துவமனை படுக்கையில் சில நாட்களில் உயிர் பிரியப்போகும் தருவாயில் இருந்த தன் மனைவியின் நிலையைக் கண்ட ஜார்ஜ் தன்னையறியாமல் அழத் தொடங்கினார். இதுவரை அவர் அழுததே இல்லை. மரணம் எல்லோர்க்கும் பொதுவானது தான் என்று கூறும் ஜார்ஜ் உணர்வற்று படுத்து கிடக்கும் தன் மனைவியைக் கண்டு அழுதார். அவள் கையைப் பிடித்துக்கொண்டு அவள் விரும்பி கேட்கும் பாடலை விம்மலோடு பாடினார், அவளால் பேச முடியவில்லை, கண்களை திறந்து அவரை பார்த்தாள். கண்களில் கண்ணீர். அதைத் துடைத்த ஜார்ஜ், தன் மனைவியின் முகத்தோடு முகம் வைத்து அவள் மூச்சுக் காற்றை உணர்ந்தபடி பாடலைப் பாடினார். பாடலை முடிக்கும் முன்பே அவள் இறந்துவிட்டாள். தன் வாழ்க்கையில் நடந்த மிகவும் மோசமான தருணமான தன் மனைவியின் இழப்பை இன்று வரை அவரால் தாங்க முடியவில்லை, அடுத்த வருடத்தில் வேலையில் இருந்து ஓய்வு பெறப்போகும் ஜார்ஜ் தன் எஞ்சிய வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க திட்டமிட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாய் உள்ள ஓர் இடத்தை ஐந்து மாதங்கள் முன்பு தான் வாங்கினார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் அந்த இடத்தில சிறிய வீட்டை கட்டி இயற்கையோடு கலந்து தன் மனைவியின் நினைவுகளோடு வாழவேண்டும் என்ற கற்பனைகளோடு நாட்களை கடத்தி வந்தார். அதுவரை எந்த கஷ்டங்களையும் தான் சந்திக்கக்கூடாது என்று நினைத்தவருக்கு ஈராக் செல்லும் வாய்ப்பு வந்தது. வேறு வழியில்லாமல் கடமையே என வந்தார். இப்பொழுது தீவிரவாதிகளால் மேலும் ஒரு கஷ்டம். அந்த பத்திரிகையாளனை காப்பாற்ற முடியமால் போனால்,.இத்துணை நாள் சேகரித்து வைத்திருக்கும் அனுபவக் கணக்குகள் அவமானங்களை சந்திக்கும். அதை அவர் விரும்பவில்லை.

ருத்துவ முகாமில் இருந்து ஊன்றுகோலின் உதவியோடு தத்தி தத்தி நடந்து சென்றான் வில்லியம்ஸ்.

"மிஸ்டர் வில்லியம்ஸ் நீங்க எங்க போறிங்க?" என்று பதட்டத்தோடு கேட்டார் டாக்டர்.

"பயப்படாதிங்க டாக்டர். கொஞ்ச தூரம் நடந்து பாத்துட்டு வரேன்" என்று கூறிய வில்லியம்ஸ் ஊன்றுகோலின் உதவியோடு மெதுவாக நடந்தான். நடக்கும் பொழுது ஓரிடத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தான். ஜீப் ஒன்று வேகமாய் வந்து பிரேக் போட்டு நின்றது. அதில் சுமார் ஆறு ராணுவ வீரர்கள் இருந்தனர்.

ஜீப்பை ஒட்டிய டிரைவர், "வில்லியம்ஸ்! கொஞ்சம் சீக்கிரம் விலகுறீங்களா. நாங்க அவசரமா போகணும்" என்று சொன்னான்.

"சாரி சாரி நீங்க போகலாம்"  என்று விலகினான் வில்லியம்ஸ்.

"வில்லியம்ஸ் நீ எதுக்கு இங்க வந்த?"  என்றபடி அவனருகே வந்தார் கர்னல்  ஜார்ஜ்.

"உங்களை பார்க்க தான் சார்"

"என்ன விஷயம் ?"

"நான் இனி இங்க இருந்து உங்க கூட தீவிரவாதிகளை தேடணும்னு விரும்புறீங்களா சார்" என்றான் வில்லியம்ஸ்

ஜார்ஜ் சிரித்தார். "உனக்கு என்ன வேணும் வில்லியம்ஸ்?"

"நான் அமெரிக்கா போகணும் சார். ஒரு முடமா உங்களுக்கெல்லாம் பிரயோஜனம் இல்லாம நான் இருக்க விரும்பல. எனக்கு என் காதலியை பாக்கணும்னு ஆசையா இருக்கு"

"இன்னும் நீ முழுசா குணமாகலையே வில்லியம்ஸ்"

"இந்த இடத்தில் எத்தனை வருஷம் இருந்தாலும் என்னால குணமாகமுடியாது கர்னல். எனக்கு இப்போ தேவையெல்லாம் அன்பு, ஆறுதல், பரிவு இதெல்லாம் தான். மருந்து, மாத்திரை கிடையாது"

"உன் காதலி கிட்ட நடந்த விஷயங்களை சொல்லிட்டியா?"

"இல்லை சார், எனக்கு அந்த தைரியம் இல்லை. அங்க போய் அவ முன்னாடி நிற்கிறேன்  அதன் பிறகு அவளுடைய விருப்பம்"

"ஓகே வில்லியம்ஸ். இன்னும் இரண்டு நாளுல அமெரிக்காவோட ராணுவக்கப்பல் இங்க வருது. நமக்கு தேவையான துப்பாக்கி, பீரங்கி, உணவுகள் எல்லாம் எடுத்துட்டு வராங்க. உனக்கு விருப்பம் இருந்தா அந்த கப்பலில் போ"

"கடல் பயணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்" என்றான் வில்லியம்ஸ்.

கர்னலின் வாக்கி டாக்கியில் ஒரு குரல். "சார் நாங்க தீவிரவாதிகள நெருங்கிட்டோம்னு நினைக்கிறோம்" என்றது அந்த குரல்

"பிரமாதம். எனக்கு ஒவ்வொரு நிகழ்வையும் தெரியப்படுத்திட்டே இருங்க" என்றார் கர்னல்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அமெரிக்கா செல்லும் உற்சாகத்தோடு மருத்துவ முகாமிற்கு சென்று கொண்டிருந்தான் வில்லியம்ஸ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.