(Reading time: 11 - 22 minutes)

06. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ரயூ பிடித்திருக்கிறது என்று சொன்னதும், நிம்மதியுடன் வந்து அப்பா சண்முகத்திடம் தனக்கு சம்மதம் என்று திலீப் சொல்ல, அங்கிருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி…

சரயூவின் அறைக்குள் வந்த வாசந்தி, “அவர் பார்க்க ரொம்ப அமைதி டைப்பா தெரியுது… ரொம்பவும் பேசமாட்டார் போல தெரியுது… ஒரு ஒதுக்கம் இருந்துகிட்டே இருக்குது அவர் நடவடிக்கையில… உன் குணத்துக்கு அவர் சரியா பொருந்துவாரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு… எனக்கென்னமோ இந்த சம்மந்தம் வேண்டாம்னு தோணுது…” என சரயூவிடத்தில் சொல்ல, அவளோ நிமிர்ந்து இருவரையும் பார்த்தாள்…

மகள் தன்னை பார்ப்பதை உணர்ந்த ரவீந்திரன் ஒரே கேள்வி தான் கேட்டார் அவளிடம்… அந்த பதில் அவர் எதிர்பார்த்தது போல் இல்லை எனினும் மகளின் விருப்பமே தன் விருப்பம் என்று முடிவும் செய்தார்…

“நல்லா யோசிச்சு பார்த்து தான் சொல்லுறீயா இந்த கல்யாணத்துல இஷ்டம்னு?...”

“யோசிச்சு தான்ப்பா சொல்லுறேன்… நான் அவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன்…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

அதற்கு மேல் ரவீந்திரன் மகளிடம் எதையும் வினவவே இல்லை… நேரடியாக நிச்சயத்திற்கான வேலைகளை ஏற்பாடு செய்தார்… இதுவரை எந்த குறையும் இல்லாது வளர்த்த தன் மகளை, அதே போல் எந்த குறையும் இல்லாது திருமணம் செய்து கொடுக்க விரும்பினார் அவர்…

நிச்சயதார்த்தம் அன்றும் பெரிதாக அவள் அலங்காரம் எதுவும் செய்து கொள்ள விருப்பப்படவில்லை…

அவளது சித்தி, பெரியம்மா பெண்கள் தான், அவளை அவள் பேச்சையும் மீறி அலங்கரித்து வைத்திருந்தனர் அழகாய்…

மாப்பிள்ளை வந்துட்டார்……… என்ற கூவலோடு அறைக்குள் நுழைந்தாள் சரயூவின் சித்தி பெண் காயத்ரி…

“ஹேய்… என்னடி சொல்லுற?.. மாப்பிள்ளை வந்துட்டாரா?...” என்ற பரபரப்போடு அவளிடம் கேட்டாள் சரயூவின் பெரியம்மா பெண் வித்யா…

“ஆமாடி… அத தான நானும் சொல்லுறேன்…” என முறைத்த காயத்ரியை சமாதானம் செய்த வித்யா,

“சரி சரி… கோச்சிக்காத… வா நாம மாமாவ போய் பார்க்கலாம்…” என சொல்ல,

“யாரு நீ… மாமாவ பார்க்க போற?... இதை நான் நம்பணும்?...” என்ற காயத்ரியை,

“அதான் தெரியுதுல்ல… வாடி… நம்ம சொந்தக்காரங்க எல்லாரும் வந்திருப்பாங்க… வா வா… சும்மா அப்படியே சைட் அடிச்சிட்டு வரலாம்…” என இழுத்துக்கொண்டு சென்றாள் வித்யா…

இதை எல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டிருந்த சரயூவை இரண்டு பெண்கள் வந்து பெரியவர்களின் மத்தியில் அழைத்துச் செல்ல,

அங்கே அவளின் வருங்கால கணவன் நின்றிருந்தான்…

என்ன ஒரு ஆச்சரியம், அவனும் அவளும் ஒரே நிறைத்தில் உடை அணிந்திருந்தார்கள்…

இது தான் நான் அணியப்போகிறேன் என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவுமில்லை… எனினும் அவர்கள் இருவரின் உடையும் ஒரே நிறத்தில்…

அடிக்கிற ஆரஞ்சும் இல்லாமல், வெளிறிய நிறத்திலும் இல்லாமல், நடுத்தரமாக அழகாக கண்ணை கவரும் வகையில் இருந்தது அவள் உடுத்தியிருந்த புடவையின் நிறம்…

அவளின் நிறத்தை சற்றே தூக்கி காட்டியிருந்தது அவள் புடவையின் நிறம்… அவனும் நல்ல கலர்… அவனுக்கும் அது எடுப்பாகவே இருந்தது…

“ஹேய்… என்னடி… எனக்கு தெரியாம எப்போ நீ மாமாகிட்ட பேசின?...”

“அதுதான காயூ… இவ நம்ம கூட தான இருந்தா… பின்ன எப்படி இந்த ட்ரெஸ் கலர் எல்லாம் ?...”

“அது வேற ஒன்னுமில்ல வித்யா… இவ நம்ம கிட்ட பொய் சொல்லிட்டா… மாமா கூட பேசவே இல்லைன்னு…”

“கரெக்ட் காயூ… இந்த சரயூ நம்மளை ஏமாத்திட்டா…” என்று காயத்ரியும் வித்யாவும் மாறி மாறி சரயூவிடத்தில் சண்டை பிடித்து கொள்ள,

அவள், “நீங்க இரண்டு பேரும் நினைக்குற மாதிரி எதுவும் இல்லை நிஜமா… நான் அவர்கிட்ட பேசவே இல்லை…” என எவ்வளவோ வாதாடியும் ஹ்ம்ம் ஹூம் அவர்கள் அதை காது கொடுத்து கேட்டார்கள் இல்லை…

அந்த நேரம்,

“சரயூ இங்க வந்து நில்லும்மா…” என்ற குரல் கேட்க, அவள் சென்றாள்…

“தம்பி நீங்களும் எந்திங்க… இங்க வாங்க…” என திலீப்பிடமும் சொல்லப்பட, அவனும் சென்றான்…

இரண்டு பேரும் அருகருகில்… அதிலும் சற்று இடைவெளி இருக்கத்தான் இருந்தது… என்ன இருந்தாலும் அத்தனை பேரின் முன்னிலும் அப்படி இருந்தால் தானே முறை… மரியாதையும் கூட…

“போடுப்பா… மோதிரத்தை…” என்ற குரல் கேட்டதும், அனிச்சையாக அவன் அவள் விரல்களை பற்ற முனைய, அவளே தனது கரத்தினை அவன் கைகளில் கொடுத்தாள்…

மெல்ல கரம் பிடித்து மோதிரத்தை அவன் அணிவித்து முடித்த போது,

“இந்த மோதிரத்தை போடும்மா மாப்பிள்ளை கையில்…” என பெரியவர்கள் சொல்ல, அவள் அவனை நிமிர்ந்து பார்க்க முனைந்தாள்… முடியவில்லை…

அவன் கையை எப்படி என யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அவளுக்கு சிரமமே கொடுக்காது, அவனே தனது கையை அவளை நோக்கி உயர்த்த, அவள் அவன் விரலில் மோதிரத்தை அணிவித்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.