(Reading time: 11 - 22 minutes)

ஹேய்……. கங்கிராட்ஸ்…” என்ற வாழ்த்துக்களை வித்யாவும், காயத்ரியும் தெரிவிக்க, சற்றும் எதிர்பாராது அனைவரின் முன்னிலையிலும் அவளிடம் ஒரு பரிசு பெட்டியை கொடுத்தான் அவன்…

ஆச்சரியத்தில் தன்னை மறந்திருந்தவளை, வித்யா, காயத்ரியின் கேலி பேச்சுக்கள் தான் நனவுக்கு இழுத்து வந்தது…

“இது உனக்குத்தான்… பிடி… வாங்கிக்கோ….” என்ற அவன் குரலில் முழுதும் தெளிந்தவள், அதை வாங்க தயங்கினாள்…

“வாங்கிக்கோம்மா…” என்ற குரல்கள் பெரியவர்களிடமிருந்து கோரசாக கேட்க, அவள் சரி என்பது போல் தலைஅசைத்துவிட்டு அவனிடமிருந்து அதை வாங்கிக்கொண்டாள்…

“ஓபன் பண்ணுடி…” என சரயூவின் காதுக்குள் வித்யா ரகசியம் பாட, அவள் அமைதியாக இருந்தாள்…

“பிரிச்சிப்பாரு…” என அவனும் கூற, பெரியவர்களும் அதற்கு சம்மதம் சொல்ல, அவள் பிரித்தாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

பரிசை பார்த்தவளுக்கு அதிலிருந்து கண்களை எடுக்கவே முடியவே இல்லை… தான் காண்பது கனவா?... என அவளுக்கே சந்தேகமாய் இருந்தது…

இப்போது செல்போன் அதுவும் ஸ்மார்ட்போன் என்றால் அது சாதாரணமான ஒன்று… ஆனால் இதுவே பல வருடங்களுக்கு முன்பு அவ்வளவு எளிதானது அல்ல…

அப்போது பெரும்பாலும் பலரும் வைத்திருந்தது குட்டி போனைத்தான்… கைக்கு அடக்கமாய் கச்சிதமாய் இருக்கும் அந்த போனைத்தான் உபயோகப்படுத்தி கொண்டிருந்தார்கள்….

அதுவும் எல்லோரும் அல்ல… ஆனாலும் அந்த எண்ணிக்கை குறைவாகவும் இல்லை… இரண்டுக்கும் இடையில் இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்…

அப்படிப்பட்ட நேரத்தில், அழகான டச் போன் ஒன்று வாங்கி கொடுத்திருந்தான் திலீப் தனது வருங்கால மனைவிக்கு…

அவள் அது கனவா என்று தான் நினைத்திருந்தாள்… ஆனால் வந்திருந்தவர்களில் பலரும் ஆ வென வாயைப் பிளந்தது தான் உண்மை…

“பெரிய போனா இருக்கே… ஏம்ப்பா.. விலையும் ரொம்ப இருக்குமோ…” என கேட்ட ஒருவரிடத்தில்,

“விலை எல்லாம் பெரிசா தெரியலை எனக்கு… அவளுக்காக வாங்கணும்னு நினைச்சேன்… வாங்கிட்டேன்… அவ்வளவுதான்…” என்றான் அவன்…

“எல்லாம் சரிதான்ப்பா… நீ விலையை சொல்லு… நாங்க பெருசா இல்லையான்னு சொல்லுறோம்…” என விடாமல் அந்த பெரியவரும் கேட்க,

“பரிசையும் வாங்கி கொடுத்து, விலையையும் சொன்னா நல்லாவா இருக்கும்… பெரியவங்க நீங்க… உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்…” என அவன் சொன்னதும், அந்த பெரியவர், முணுமுணுத்துக்கொண்டே அமைதியானார்…

பின் என்ன, வந்திருந்தவர்களில் பாதிக்கும் மேல் அவன் வாங்கி கொடுத்த போனை பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்…

பொண்ணு ரொம்ப அதிர்ஷ்டசாலிப்பா… இப்பவே பையன் பொண்ணு மேல அக்கறையால்ல இருக்குறான்… விலைகூட சொல்லமாட்டேனுட்டானே…

அதுதானே… எத்தனை தடவை அழுத்தி கேட்டப்பவும், விலை சொன்னா நல்லாவா இருக்கும்னு அந்த பெரிய மனுஷன் வாயையே அடைச்சிட்டானேப்பா… ரவீந்திரன் நல்ல மாப்பிள்ளையா தான் தேடி பிடிச்சிருக்கான்…

அதுவும் சரிதான்… அவனுக்கு இருக்குறதோ ஒரு பொண்ணு… அதை நல்ல இடத்துல கட்டி கொடுத்தா தான அவனுக்கும் நிம்மதி…

மாப்பிள்ளை அமைதியான பையனா தெரியுறான், நல்ல குடும்பம், நல்ல இடம், வசதியும் போல தான் தெரியுது… மொத்தத்துல ரவீந்திரன் பொண்ணு குடுத்து வைச்சவ தான்…

என வந்திருந்தவர்களில் சிலர் மாறி மாறி பேசிக்கொண்டிருக்க, அதை பாதி பேர் கேட்டு மகிழவும், பாதி பேர் கேட்டு குமுறவும் செய்தனர்…

எந்த நல்ல காரியம் நடக்கும் இடத்திலும், நல்லவைகள் மட்டுமே எல்லோரின் கண்களுக்கும் விருந்தளிக்கும் என சொல்லுவதில் எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை, அந்த நல்லதும் சிலரின் கண்களுக்கு உறுத்தலாகவும் மாறியிருக்கும்…

இதுபோல் தன் பிள்ளைக்கு அமையவில்லையே… என்ற ஆதங்கமும், ஏக்கமும் வெளிவரும் நேரத்தில், அவர்களால் அந்த மணப்பெண்ணின் சந்தோஷத்தை நிச்சயம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது…

இது இன்று நேற்றல்ல… காலம் காலமாய் நடந்து வரும் ஒன்று தான்… இருப்பதை கொண்டு வாழ அவர்களில் யார் தான் முன் வந்தார்கள்… இப்படி நம் பிள்ளைக்கு நடக்கவில்லையே என்று நடவாத, இல்லாத ஒன்றை தானே மனம் முதலில் நினைத்துக்கொள்கிறது…

இதற்கு அந்த சிலரும் விதிவிலக்கல்ல… அவர்களின் குமுறலும், பெருமூச்சும், சரயூவின் புன்னகையை சுற்றி சுற்றி வர, வந்திருந்த பல நல்லவர்களின் வாழ்த்துக்களும், ஆசியும் அந்த பொறாமைத்தீயை சற்று தள்ளி விரட்டியடித்தது..

பரந்து விரிந்த இந்த உலகில் ஜீரணித்துக்கொள்ள முடியாத சில விஷயங்களும் சிலருக்கு உண்டு… அது மற்றவர்களின் சந்தோஷமான வாழ்க்கை…

ஆயிரம் தான் இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று சொன்னாலும், அவர்களின் அந்த பொறாமை என்ன செய்திட முடியும் என்று எண்ணினாலும், நிதர்சனத்தில் ஒரு பழமொழியும் உண்டு…

“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதென்று… “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.