10. பைராகி - சகி

மன நிம்மதிக்காக சிலக்காலம் அரண்மனையை தியாகம் செய்து நதியின் கரையில் தான் கட்டிய அழகிய கோட்டையில் வாசம் செய்தார் இளவரசர் ஆதித்யர்.
கரையோரம் வளர்ந்திருந்த வில்வமரத்தின் அடியில் அமைதியாக தியானித்துக் கொண்டிருந்தார்.
மனம் ஒருநிலைப்பட ஜெபம்,தவம் யாவும் அவசியமல்லவா!
அதனால் அவசியம் அவரது அன்றாட கடமைகளில் தவம் என்பது தலையாயதாக இருந்தது.
சில நேரங்களில் கண்விழித்தார் அவர்.குழப்பமான மனம் ஒன்றிணைந்து வெறுமையான உணர்வு!!
மனதில் ஏற்பட்ட புத்துணர்வு அன்றைய நாளினை புதுமையாக்கும் என்ற நம்பிக்கை இதயத்தில் உதித்தது.
தவம் கலைந்து எழுந்தவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது அவரது வெண்புரவி!!
"உன் வதனத்தில் தெரியும் மாறுதலின் காரணம் என்ன?"
அது பதில் பேசாமல் கனைத்தது.
"ஓலை ஏதும் கொணர்ந்தாயா?"-அது இல்லையென தலையசைத்தது.
"வேறு என்ன?"-அஸ்வம் திரும்பி ஒரு மரத்தினை கண்டது.
ஆதித்யரின் மனம் துணுக்குற்றது.
தனது வாளை உருவினார்.
"அவ்விருட்சமா?"-என்றப்படி,மரத்தின் அருகே சென்றார்.
மரத்தின் பின் ஏதோ குரல் கேட்டது.சட்டென தாமதிக்காமல் விருட்சத்திடம் தஞ்சம் புகுந்திருந்தவரை பிடித்து வளைத்தார்.
"ஆ..!"-என்ற பெண்ணின் அலறல் கேட்டது.அப்போது தான் கவனித்தார் அது ஒரு நங்கை என்று!!
அவரது வலக்கரம் அவளை வளைத்திருக்க,இடக்கரம் வாளை அவளது கழுத்திற்கும் குறுக்கே பிடித்திருந்தது.சில நொடிகள் ஏதும் புரியாமல் நின்றனர்.மணம்மிக்க அவளது கேசம் அவரது முகத்தில் அலைந்தது.
சில நொடிகளில் அவளை விலகினார் ஆதித்யர்.
அவள் அச்சத்தோடு அவரை பார்த்தாள்.சில நொடிகளில் அவளது பார்வையில் ஒருவித ஆச்சரியம் தெரிந்தது!!சிலையாகி நின்றாள்.
"தாங்கள் யார்?"-என்ற கேள்வியில் நினைவுக்கு வந்தாள் அப்பெண்.
"எனது நாமம் யாத்ரீகா!நான் சேனாதிபதியின் புதல்வி!"
-அதைக்கேட்டதும் அவன் மனதின் குழப்பங்கள் யாவும் நீங்கின.
"நீயா?"-என்றார்.சட்டென..
"தங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?"
-அவன் யாரிடமோ பேசுவதாக பேசினான்.
"நான் என் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தேன்!போட்டியின் விதிப்படி நான் ஔிந்திருந்தேன்!அப்போது தான் தாம்..."
"எனை மன்னித்தருளுங்கள்!!தங்களை காட்டிக்கொடுப்பது எனது நோக்கமல்ல!"-அவள் பேசாமல் நின்றாள்.
"சிறுப்பெண்ணாய் தங்களை பார்த்திருந்தேன்!இன்று..."-அவன் ஏதோ கூற வர,அவளின் முகம் சிவந்துப் போனது.அதை கவனித்தவன்,
"தாங்கள் விளையாட்டை தொடங்கலாம்!நான் தங்களை பிறகு சந்திக்கிறேன்!"-என்று கூறிவிட்டு தனது புரவியோடு நடந்தான்.
அவனது முகத்திலும் ஒருவித புன்னகை!
எட்டு வருடங்களுக்கு முன்...
இளவரசரும்,சேனாதிபதியின் புதல்வியும் நெருங்கிய நண்பர்கள்..
இவர் வாள் பயிற்சி மேற்கொள்ளும் அதே நந்தவனத்தில் அவள் நடனக்கலை பயில்வாள்.
இருவரும் காலையிலிருந்து மாலைவரை பிரியாது இருப்பர்.
ஆதித்யர் எளிமையான சில வாள்பயிற்சிகளை அவளுக்கு கற்று தந்திருக்கிறார்.ஆனால்,அவளோ குருதியை கண்ட மாத்திரமே மயங்கி விழும் குணம் கொண்டவள்.
சிறு வயதிலே தாயை இழந்தவள்.
தங்களுள் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றை நினைவக்கூர்ந்தார் இளவரசர்.
அன்று...
நந்தவனத்தில் அவர்கள் அமர்ந்திருந்தனர்...
"நெடுநேரமாக நிலவிடம் என்ன உரையாடி கொண்டிருக்கிறாய் யாத்ரீகா?"
"இயற்கையின் வதனத்தை காணுங்கள் இளவரசே!இறைவன் மிகுந்த ரசனை மிக்கவன் அல்லவா!"
"எனில்,உனது தாயும் ரசனை உள்ளவர் தான்!"-அவளது முகம் சட்டென இருண்டது.
"எழிலோவியமான உன்னை நேர்த்தியாக வடித்திருக்கிறார்!"-அறியாத வயதில் கூறினார்.
"..............."