(Reading time: 18 - 35 minutes)

15. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

காதல் கொண்ட மனம் சிறகடிக்க பறக்க துணிந்த வேளை, ஜெய்யின் அறை நோக்கிச் சென்றவள், சட்டென தன் ஓட்டத்தை நிறுத்தினாள்…

பிரம்மரிஷியும், இஷானும் என்னவென்று பார்க்க, அவள் இருவரிடத்திலும் விரைந்து வந்தாள்…

வந்தவள், முதலில், பிரம்மரிஷியின் பாதம் தொட்டு பணிந்தாள்…

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை தாத்தா… இருந்தாலும் என்னோட உயிரை எனக்கு திருப்பி கொடுத்ததுக்கு டாக்டர் ஒரு காரணம்னா, நீங்களும் பெரிய காரணம்… என்னோட நன்றியை ஏத்துக்கோங்க தாத்தா…” என முழந்தாளிட்டு கைகூப்ப,

அவர் அவளை தீர்க்கமான ஒரு பார்வை பார்த்தார்… நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தவள், கைகூப்பி விழி மூடி நின்றிருந்தவள், அந்த பார்வை கவனிக்கவில்லை…

அவளது கவனத்தினை எட்டாது போன அந்த பார்வையினை இஷான் கண்டு கொண்டான்…

“உன் உயிர் உன்னை விட்டு பிரியாதும்மா… அதை தக்க வச்சிக்க சில போராட்டங்களை சந்திக்க வேண்டியிருப்பது விதி… அதுக்காகத்தான் உனக்கு அந்த மந்திரத்தை நான் சொல்லிக்கொடுத்தேன்… போய் சிவாவைப் பார்த்துட்டு வா… உன் கண்ணீர் அணை அவனைக் கண்ணார கண்டா மட்டும் தான் நிக்கும்…” என சதியை எழுப்பி விட்டு அவளது முகம் பார்த்து அவள் சொல்ல, அவள் உதட்டில் ஓரத்தில் மிகவும் சின்னதாய் ஒரு சிரிப்பு எட்டிப் பார்த்தது…

“சரி தாத்தா…” என நகர்ந்தவளின் பார்வை அடுத்து வந்தடைந்தது இஷானிடத்தில்…

“எந்த ஒரு அண்ணனுக்கும் தங்கச்சியோட காதல் அதிர்ச்சியா தான் இருக்கும்… உனக்கும் அப்படித்தான் இருக்கும்னு எனக்குப் புரியுது… இத்தனை நாள் உங்கிட்ட நான் அதை சொல்லாம இருந்ததுக்கு என்னை மன்னிச்சிடு அண்ணா… உனக்கும் தைஜூவுக்கும் முதலில் கல்யாணம் நடக்கட்டும்… அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்… ஆனா அத்தனை நாள் தள்ளி போட வேண்டாம், இன்னைக்கே உங்கிட்ட சொல்லலாம்னு காலையில தான நினைச்சேன்… அப்போதான் நீ தைஜூகிட்ட என்னைப்பத்தி கேட்டதா சொன்னா… அண்ணாகிட்ட நான் பேசிக்கிறேன்னு சொல்லி அவளை சமாதானப்படுத்தி வச்சிருந்தேன்… அதுக்குள்ள என்னென்னவோ ஆகிப்போச்சு… மன்னிச்சிடுண்ணா….”

குரல் தழுதழுக்க சொன்ன தங்கையின் கன்னத்தினை பிடித்துக்கொண்டவன்,

“சதி… நிஜமாவே எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலை… உனக்கு ஜெய்யை மாமா பையன்ற உறவு முறையில பிடிக்கும்னு தான் நினைச்சிட்டிருந்தேன்… ஆனா இப்படி நீ அவனோட சரிபாதியாவே வாழ்ந்திட்டிருக்கேன்னு சத்தியமா நான் கனவுல கூட நினைச்சுப்பார்க்கலை…”

அவனின் வார்த்தைகளில் அடுத்து என்ன பேச என்று அவள் அமைதியாக இருக்க, அவனே தொடர்ந்தான்…

“நான் ஒரு விஷயம் சொன்னா நீ நம்புவியான்னு தெரியலை…” என பீடிகை போட்டவன்,

“ஜெய் கூட எப்போ நான் டிரெயினிங்க் சேர்ந்தேனோ அப்பவே எனக்கு ஜெய்யை பிடிச்சு போச்சு… ஜெய் தான் சோமநாதன் மாமாவோட பையன்னு எனக்கு தெரியுறதுக்கு முன்னாடியே உனக்கு மாப்பிள்ளையா ஜெய் வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சிருக்கேன்… அவன் தான் நம்ம மாமா பையன்னு என்னைக்கு எனக்கு தெரிய வந்துச்சோ அந்த செகண்டே நான் முடிவு பண்ணிட்டேன் உனக்கு அவன் தான் மாப்பிள்ளைன்னு…” என அவன் சொன்னதும், தனது கன்னத்தினைப் பிடித்திருந்த இஷானின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாள் அவனை சந்தோஷத்துடன் பார்த்தாள் அவள்…

“எனக்கு மட்டும் இல்ல நம்ம வீட்டுல யாருமே இதுக்கு எதிர்ப்பு சொல்லமாட்டாங்கன்னு தெரிஞ்சு தான் ஜெய்யை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் முடிவெடுத்தேன்… ஏன்னா, சொந்த அண்ணன் பையனுக்கு பொண்ணு கொடுக்க அம்மாவும் மாட்டேன்னு சொல்லமாட்டாங்க… உயிர் நண்பன் பையனுக்கு பொண்ணு கொடுக்க அப்பாவும் மாட்டேன்னு சொல்லமாட்டாங்க…”

அவனின் வார்த்தைகளில் சட்டென தகப்பனின் நினைவு வர, அவனது கரத்தினை பிடித்திருந்த பிடியை நழுவ விட்டாள் சதி…

“ஜெய்யை பிடிக்காதுன்னு எந்த பொண்ணும் சொல்ல மாட்டா… அவன் குணம் அப்படி…  அப்படித்தான் அவனுக்கு ஒரு பொண்ணு புரோபோஸ் கூட பண்ணினா, அவன் தனக்கு விருப்பமில்லன்னு அந்த பொண்ணு முகம் கூட பார்க்காம சொல்லிட்டு வந்துட்டான்… உங்கிட்ட கூட இதை சொல்லியிருக்கேன்ல ஒருதடவை… ஹ்ம்ம்… அதனால தான் உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்குற விஷயமா வீட்டுல பார்த்து பேசலாம்னு நான் நினைச்சிட்டிருந்தா, இங்க என் செல்ல தங்கச்சி பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திட்டா எனக்கு…” என சிரித்துக்கொண்டே தங்கையின் நெற்றியில் முட்டியவன்,

“நிஜமாவே சந்தோஷமா இருக்குடா… ஆனா எனக்கு ஒரு டவுட்… நானும் தினமும் பார்க் வரேன்… ஆனா நீ அவனை பார்க்குறதை நான் பார்த்ததே இல்லையே… நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம் புக்குல தான் உன் கண்ணு முழுக்க இருக்கும்… அதும் இல்லாம அவனை நான் உன்னிப்பா கவனிச்சிருக்கேன், உன் பக்கமே திரும்பாமல்ல போவான்… அப்புறம் எப்படிடா?...” என அவன் தன் சந்தேகத்தை கேட்க, அவன் முட்டியதற்கு பதிலுக்கு முட்டியவள்,

“அட லூசு அண்ணா, உனக்கு கண்ணு முழுக்க தைஜூ மேல தான இருக்கும்… அப்புறம் எங்க நீ என்னை கவனிப்ப?... அதும் இல்லாம உன் ஆருயிர் நண்பர் இன்னும் அவர் காதலை எங்கிட்ட சொல்லலை…” என சொல்ல

“வாட்?....” என அதிர்ந்தே போனான் இஷான்…

“என்னடா சொல்லுற?... இத்தனை நாள் எங்கிட்டேயே இதை எல்லாம் மறைச்சி வச்சிருக்கான்னு அவங்கிட்ட நான் சண்டை போடணும்னு யோசிச்சிட்டிருக்கேன்… நீ என்னடான்னா இப்படி சொல்லுற?...”

“உண்மைதான் அண்ணா… நேத்து ராத்திரி தான் நான் அவர்கிட்ட என்னோட காதலை சொன்னேன்… இது தைஜூக்கு கூட தெரியாது…”

“ஏண்டா?.. அவதான உனக்கு எல்லாமே… அவகிட்ட எதுக்கு மறைச்ச?...”

இஷான் அப்படி கேட்டதும், தமையனிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்தவள், பிறகு ஒரு முடிவுடன், நேற்றிரவு, ஜெய்யிடம் தன் காதலை சொல்லிக்கொண்டிருந்த போது, தன் கழுத்தில் ஒருவன் கத்தி வைத்து மிரட்டியதையும், பின் அவன் தன்னை தள்ளிவிட்டுவிட்டு ஓடியதையும் மட்டும் சொல்ல, இஷானின் முகமெங்கும் கோபம் படர்ந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.