(Reading time: 18 - 35 minutes)

விழி மூடி ஆழ்ந்த துயிலில் இருந்தவனது தூக்கத்தை கலைக்காது அவனருகில் வந்தாள் சதி…

அழகு கொஞ்சும் முகம், அதில் இப்போதும் மின்னிக்கொண்டிருக்கும் கம்பீரம், மயக்கும் விழிகள் இமைக்கதவுகளுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் விதம், சீரான சுவாசத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த அவனது நாசி, பிரிய மாட்டேன் என்று போராட்டத்தைக் கையிலெடுத்தது போல் ஒட்டிக்கொண்டிருந்த அவனது அதரங்கள்…

வரிசையாக ரசித்துக்கொண்டிருந்தவளது பார்வை அவன் மார்பில் விழ, அவன் அணிந்திருந்த உடையை சற்று விலக்கி, அவனது கட்டுபோட்ட காயத்தினைப் பார்த்தாள்…

விழி நீர் சட்டென அருவி என வழிந்து அவனது நெஞ்சில் பட, அவனிடத்தில் மெல்ல அசைவு….

பின் மெதுவாக, அவள் அவன் மார்பில் பட்டும் படாமல் தட்டிக்கொடுக்க, அவன் மீண்டும் தன் நித்திரைக்குள் சென்றான்…

கண் தான் வலிக்காதோ அவளுக்கு தெரியவில்லை… அவனையே தான் பார்த்தாள் இமைக்காமல்…

வாசம் பரப்பி கிறங்கடிக்கும் பூக்களின் நறுமணத்தை தடுத்து மறைத்திட செய்திட முடியுமா?... அப்படித்தான் உணர்ந்தாள் தன்னவன் தன் மீது கொண்டிருக்கும் காதலையும்…

ஆயிரம் தான் அவன் மறைத்தாலும் அவளுக்கு ஒன்றென்றால் அவன் தானே முதல் ஆளாக நிற்கிறான் தனக்கு முன்னே பெரிய அரண் போல…

இதற்கு பெயர் காதல் இல்லாமல் என்னவாம்?... என தனக்குள் கேள்விகேட்டுக்கொண்டே அவனது கேசத்தினை தன் விரல்களினால் கலைத்து அவள் கோதி விட, அதுவும் அவளின் விரல்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தது…

அப்போது அறைக்கு வெளியே, சோமநாதனுக்கு தகவல் சொல்லிவிட்டு, சதி பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான் இஷான்…

“என்ன இஷான்… என்ன யோசனை?...”

“இல்ல தாத்தா… அப்பாகிட்ட சதி-ஜெய் விஷயமா எப்போ எப்படி பேசுறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்…”

“இப்போதைக்கு நீ எதுவும் பேச வேண்டாம்… நேரம் காலம் வரும்போது நானே பேசுறேன்…”

“தாத்தா அதுவரை நாம…..” என சொல்ல இருந்தவனை தடுத்து,

“ஜெய்யும் இன்னும் சதிகிட்ட தன்னோட காதலை சொல்லலை… அவனுக்கும் நாம கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம்… அதுக்குப்பிறகு தட்சேஷ்வர் கிட்ட நான் பேசுறேன்… அதுவரை கொஞ்சம் அமைதியா இரு… இந்த விஷயம் உனக்கு தெரிஞ்ச மாதிரி கூட காட்டிக்காத அவங்கிட்ட…. சரியா?...” என அழுத்தம் திருத்தமாக அவர் சொல்ல, அவன் சரி என தலை ஆட்டினான்…

பின், “தாத்தா உங்ககிட்ட நான் ஒரு விஷயம் கேட்கலாமா?...” என அவன் இழுக்க

“சதி ஜெய்யை விரும்புறான்னு எனக்கு எப்படி தெரியும்னு கேட்கப்போற?... அதான?..” என அவனுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை கொடுத்தார் அவர்…

“எப்படி தாத்தா… நான் கேட்க நினைச்சதை கரெக்டா சொல்லிட்டீங்க?...”

“நீ இத தான் கேட்கப்போறன்னு மனசு சொல்லுச்சு…”

“கிரேட் தாத்தா… சரி சொல்லுங்க… எப்படி உங்களுக்கு சதியைப் பத்தி தெரிய வந்துச்சு?... இத்தனைக்கும் நீங்க இங்க ஒரு வருஷத்துக்கும் மேல இல்லையே…. நேத்து ராத்திரி தான வந்தீங்க?... அப்புறம் எப்படி?...”

“முன்னாடியே எனக்கு இது தெரியும் இஷான்…”

“என்ன சொல்லுறீங்க தாத்தா?...”

அவன் அதிர்ச்சியடைய, அவர் அவனை நின்று நிதானமாக பார்த்துவிட்டு ஆம் என்பது போல் தலையசைக்க, அவன் அடுத்து பேச முனைவதற்குள், சோமநாதன் வந்தார் அங்கே…

“சார்…” என அவன் கை தானாய் அவருக்கு மரியாதை செய்ய, அவரும் அதை ஏற்றுக்கொண்டு, ஜெய்யைப் பற்றி விசாரித்தார்…

ஜெய் இருந்த அறைக்கதவை அவன் கைக்காட்ட, அவர் விரைந்து உள்ளே சென்றார்…

அப்போது சதி அவனருகில் அமர்ந்து ஜெய்யைப் பார்த்துக்கொண்டிருப்பது புரிய,

“சதி… இங்க என்னம்மா பண்ணுற?...” என்ற அவரின் குரலில் சட்டென எழுந்தாள் அவள்…

“ஜெய்யை காப்பாத்தி இங்க அட்மிட் பண்ணினது சதி தான் சார்….” என தங்கைக்கு உதவிக்கு வந்தான் இஷான்…

“ரொம்ப நன்றிம்மா சதி… என் பையனை பத்திரமா மீட்டு கொடுத்திட்ட… உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலைம்மா… என் உயிரை மீட்டு கொடுத்திட்டம்மா…” என அவர் அவளின் கைப்பிடித்து கண்கலங்க,

“சார்… ப்ளீஸ்… கன்ட்ரோல் யுவர்செல்ஃப்…” என அவரை சமாதானப்படுத்த முனைந்தான் இஷான்…

“அறைக்கு வெளிய தான் இஷான் நான் கமிஷனர் எல்லாம்… இந்த அறைக்குள்ள நான் என் பையனுக்கு அப்பா மட்டும் தான்…” என அவர் தகப்பனாய் பேச, இஷானும் புரிந்து கொண்டவனாய் நண்பனைப் பார்த்தான்…

சட்டென இஷானின் முகத்தில் கோபம் பரவ, “இப்போ வந்துடுறேன் அங்கிள்… ஜெய் இப்போ முழிச்சிடுவான்… நீங்க இங்கேயே இருங்க…” என்றவன் புயலென அங்கிருந்து வெளியேறினான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.