(Reading time: 18 - 35 minutes)

வற்றை எல்லாம் தூரத்தில் இருந்து அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தான் விஷ்ணு. அப்போது அவனுக்கு மனதில் நிழலாடிய காட்சி எல்லாம் ஒன்றே ஒன்றுதான், அனுவை அவன் முதன் முதலில் பார்த்த அந்தத் தருணம் மட்டும்தான். 20 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த நொடியில் அவள் மீது காதலில் விழுந்தானோ அதே தருணம். அன்றும் அவள் தன் தோடத்தில் இப்படிதான் தன் செல்ல நாய்க் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்தவள் இவன் என்ன செய்கிறான் என்று விஷ்ணுவைப் பார்க்க அவனோ வெச்ச கண் வாங்காமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் என்ன என்பது போல் தலையை ஆட்ட, இவன் ஒண்ணும் இல்லை என்பது போல் தலையை அசைத்தான்.

“ஏன் விஷ்ணு அங்கேயே நின்னுட்டே இங்கே வா” என்று கை ஆட்டி அழைத்தாள் அனு. அதற்கு “இல்ல அனு” என்று கூறியவனை “ச்சீ போட” என்று கூறி விட்டு மீண்டும் தன் விளையாட்டைத் தொடங்கினாள் அனு.

அவள் விளையாடுவதும், இவன் அவளை ரசிப்பதும் என் இருவரும் உலகை மறக்க, மேகம் கருத்து மழை வருவது போல் ஆனதை இருவரும் கவனிக்க தவறினர். முதல் துளி மழை முகத்தில் விழுந்ததும் தான் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான் விஷ்ணு.

“அனு, மழை வர மாதிரி ஆயிடுச்சி, வாங்க பெருசா மழை வரதுக்குள்ள காருக்கு போயிடலாம்“ என்று விஷ்ணு கூற, “அதெல்லாம் மழை வராது விஷ்ணு” என்று அனு கூறி முடிப்பதற்குள் மேக தேவதை தன் வாசல் கதவுகளை திறந்துவிட சோவென மழை கொட்ட தொடங்கியது.

உடனே விஷ்ணு மழைக்கு ஒதுங்கப் பெரிய மரத்தின் கீழ் சென்று நின்றான். நின்றவன் அவள் எங்கே என்று தேட, அவளோ அந்த மழைக்காகவே காத்திருந்தாற் போல் கைகளை அகலமாக விரித்து, வானத்தைப் பார்த்த வாரே, சிரித்துக் கொண்டே சிறு பிள்ளை போல் துள்ளிக் குதிக்க தொடங்கினாள். மழையைக் கண்ட மயில் போல் ஆனந்தமாக ஆடினாள். 

என்னதான் அவள் மழையில் ஆடுவதை ரசித்தாலும்,  “அனு மழையில நனையாதிங்க, உடம்புக்கு ஒத்துக்காது. சீக்கிரம் இங்க வாங்க” என்றான் அக்கறையோடு.

“போ விஷ்ணு, மழையில இப்படி ஆட்டம் போட்டு எவ்வளோ நாள் ஆச்சு. நீ ஏன் அங்க போய் நின்னுட்ட, இங்க வா. மழையில நனையிறது எவ்வளவு ஹாப்பி தெரியுமா?” என்று அவனையும் மழையில் நனைய அழைத்தாள்.

“எனக்கு அதெல்லாம் தெரிய வேண்டாம், நீங்க மழையில் ஆடி உடம்பு சரியில்லாம போன நான்தான் காரணம் னு திவ்யா என்ன திட்டு வாங்க. பிளிஸ் வந்துடுங்க” என்றான் கொஞ்சாத குறையாக.

“அவ கெடக்குற லூசு” என்று கூறிவிட்டு மீண்டும் மழையில் ஆடத் தொடங்கினாள் அனு.

இனி இவளிடம் பேசி பிரோஜனம் இல்லை என்று தானே களத்தில் இறங்கினான் விஷ்ணு. வேகமாக ஓடிச் சென்று அவள் கை பற்றி “வாங்க அனு, சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்காதீங்க” என்று அவன் அவளை இழுக்கு, அந்த குளிர்ந்த இதமான நேரத்தில் அவன் அவள் கைகளை பற்றியது அவளை ஏதோ செய்தது. பெண்ணவள் மயங்கி அவன் பின்னால் நடக்கலானாள்.

மீண்டும் மரத்துக்கு அடியில் வந்து, கைகளை விடுவித்தவுடன் தான், அவளுக்கு சுய நினைவே வந்தது. அவன் முகத்தை அருகில் பார்த்த அவளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தது. அந்த இதமான மாலை வேளையில், மழையின் சாரலில், மனமெல்லாம் நிறைந்தவன் அருகில் இருந்தும் அவனை உரிமையோடு தொட முடியவில்லை என்ற ஏக்கம் அவள் ஆனந்தத்தை ஓங்கி அடித்தது.

இவளுக்கே இப்படி என்றாள், அவன் நிலமையைக் கேட்கவா வேண்டும். காதல் சுகத்தை விட அது தரும் வளி பெரிது என்று எப்போதோ படித்திருக்கிறான், ஆனால் அதை இன்று உணர்ந்து கொண்டிருக்கிறான்.

இருவர் மனதிலும் காதல் ஆனால் சொல்ல வார்த்தையும் தயிரியமும் இல்லை.

 அவள் கூந்தல் ஈரமாக இருப்பதைக் கண்டு, தன் பாதி நினைந்த கை குட்டையை (கர்ஷிப்) ஐ எடுத்து அவள் தலையை துடைத்தான். மீண்டும் அவனின் நெருக்கம், குளிர்ந்த அவள் உடலை வெப்பமாக்கியது. “ஏண்ட, இப்படி என்ன கொல் ர” என்று அவனை தன் மனதில் அன்பாய் திட்டி கொண்டிருந்தாள். 

அந்தச் சமயம், தீடிர் என்று வந்த அந்த இடி சத்தத்தில் பயந்து அனு விஷ்ணுவை அனைத்துக் கொண்டாள். “அர்ஜுனா அர்ஜுனா” என்று அவள் உதடுகள் தானாக முணுமுணுக்கத் தொடங்கியது

(அவளுக்கு இடி என்றாள் சிறு வயதில் இருந்தே பயம். அவள் அப்பா சொல்லி கொடுத்ததுதான் இந்த “அர்ஜுனா” மந்திரம். எப்போது இடித்தாளும் அவளை அறியாமலே அவள் உதடுகள் முணுமுணுக்கும்).

சிறிது இடை வெளியில் இன்னொரு இடி பெரிதாய் இடிக்க, அவனை இருக்க அனைத்துக் கொண்டாள் அனு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.