(Reading time: 10 - 19 minutes)

11. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval  

னிக்காவை இவ்வளவு கோபமாக சிடுசிடுப்பாக அவள் வீட்டில் இதற்கு முன்பு யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளவாக கோபத்தில் பொரிந்துக் கொண்டு இருந்தாள் அவள். எல்லாவற்றிற்கும் காரணமாக அவள் மனம் ரூபனையே குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது. காரணம் வேறொன்றுமில்லை, அவர்களது 12 வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து அட்மிஷன் குறித்த வேலைகள் நடைப் பெற்றுக் கொண்டிருந்தது. அவள் தன்னுடையப் பள்ளியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியிலேயே படிப்பைத் தொடரவிருக்க, அவள் உயிர் நண்பன் அல்லது அவளால் உயிரை எடுக்கப் படும் நண்பன் என்று சொல்லப் பட தகுந்த ஜீவன் தன் அண்ணன் ஆரம்பிக்கவிருக்கும் தொழிற்ச்சம்பந்தமான "ஆட்டோ மொபைல் இஞ்சினியரிங்க்" படிக்கப் போவதாகச் சொல்லி அதற்கான அட்மிஷனில் மும்முரமாக இருந்தான். என்ட்ரன்ஸில்தேர்வாகி விடுவான் என அவனுக்கு தெரியும். அவன் முயன்று எடுத்த நல்ல மார்க்குகள் காரணமாக எளிதாக அட்மிஷன் கிடைத்து விட வாய்ப்புக்கள் இருந்தன.

 ஜீவனுக்கு ரூபனிடம் விபரங்கள் கேட்டுக் கேட்டு , அவன் வேலைப் பார்க்கும் இடம் முன்பு ஓரிரு முறைச் சென்று வந்ததில் ஏற்கெனவே அந்த வேலைக் குறித்து தன்னுடைய அண்ணன் போலவே ஆர்வம் தோன்றியிருந்தது. தான் அதற்க்குரிய நுணுக்கங்களைக் கற்றுத்தேர்வது சிறப்பாக இருக்கும். மேலும், தன்னுடைய அண்ணனுக்கு சொந்தமாக தொழிற்சாலை அமைக்கும் நேரத்தில் தன் படிப்பு உதவியாக இருக்கும்.பிற்காலத்தில் தானும் தன் அண்ணனைப் பின்பற்றி பெரிதான நிலையை அடையவும் உதவும் என்று எண்ணியிருந்தான். 

 ஜீவன் தன்னோடு சேர்ந்து படிக்கப் போவது இல்லை என்கின்ற விஷயம் அனிக்காவிற்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. அவன் படிப்பின் காரணமாக ப்ரீ கேஜி முதலாக அவளுடன் கூட வந்த நட்பை பிரிவது அவளுக்கு மிகவும் கடினமாக இருந்தது.

 சின்னச் சின்ன விஷயம் முதலாக அவளை அவ்வளவு பார்த்து பார்த்து கவனித்துக் கொள்ளுவான். வீட்டில் அவனை தொல்லைச் செய்கின்ற அவளுடைய பழக்கத்தை பல நேரம் சகித்து பொறுமையாக இருப்பவன், வெளியே பலர் முன்பு எதுவும் சேட்டைச் செய்தால் முறைப்பான். 

 "என் மானத்தை வாங்காதே" என்று அவன் முறைக்கிற முறைப்பில் அவள் சேட்டை இருக்கிற இடம் விட்டு காணாமலேயே போய்விடும். எப்படிச் சண்டைப் போட்டாலும் இவளைப் பத்திரமாக பாதுகாக்காமல் அவனும், அவனுக்கு தன்னிடம் இருப்பதை முதலில் கொடுத்து சாப்பிட வைக்காமல் அவளும் இருந்தது இல்லை. அப்படிப்பட்ட அவர்களுடைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நட்பை பிரித்ததற்கு யார் காரணம்? அந்த ரூபன் தானே? என்று மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

 ரூபன் தாய் நாட்டை விட்டுப் பிரிந்துச் சென்று ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தன. தன்னுடைய வீட்டிற்கு அழைப்பதைப் போல இல்லாவிட்டாலும் மாதத்திற்கு ஒரு முறையாவது அத்தையின் நம்பருக்கு அழைத்து விடுவான் அவன். அது சாராவின் மொபைல் போன் என்று தான் பெயர் , ஆனால் ஒரு வகையில் அந்த வீட்டின் லேண்ட் லைன் போலத்தான். பல நேரம் எங்கேயாவது ஹாலில் இருக்கிற போனை அட்டெண்ட் செய்வது வேறு யாராவதாக தான் இருக்கும். அப்படி என்றைக்காவது தப்பித்தவறி அனிக்கா போனை எடுத்து பேசினால் என்னும் அவனுடைய நப்பாசை நிறைவேறும் நாள் அன்று வந்தது.

 ஏற்கெனவே கோபத்தில் இருந்தவளுக்கு பக்கத்திலிருந்த அம்மா போன் அடித்ததும் அது யாரென்றுப் பார்த்தாள். அதில் ரூபனுடைய பெயர் தெரியவும் இவளுடைய பல்ஸ் எகிறியது.

"ஹலோ" என்றான் அவன்.

"போங்க அத்தான் நான் உங்க மேல கோபமா இருக்கேன்" என்று ஆரம்பித்த இவள் குரலைக் கேட்டு ஆனந்தப் படுவதா? இல்லை என் மேல் என்னக் கோபம் என்று கவலைப் படுவதா எனப் புரியவில்லை அவனுக்கு.

" நானும் ஜீவனும் எப்படித் தெரியுமா? எங்க ஃப்ரண்ட்ஷிப் எப்படி தெரியுமா.........." என்று ஆரம்பித்து "மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்" என்று பிஜிஎம் ஒலிக்காத குறையாக முழுதாக ஒரு மூச்சு அவள் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டு, அவர்களுடைய நட்புக் கூட்டைக் கலைத்தது அவன் தான் எனச் சராமரியாகக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாள்.

 ரூபனோ ஹ்ஹி.... யென அவள் பேச்சை வெகு நாள் கழித்துக் கேட்ட ஆனந்த அதிர்ச்சியில் முகம் ஜ்வலிக்க போனைக் காதில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். திடீரென எதிர்முனையில் குரல் மாறியது, இதென்ன அனி திடீரென ஆண் குரலில் பேசுகிறாளே? என அவன் சுயவுணர்வுக்கு வர சில செகண்ட்ஸ் செலவானது.

"ரூபன் எப்படியிருக்க?" என்று எதிர்முனையில் கேட்டது கிறிஸ் தான்.கனவுலகிலிருந்து கீழிறங்கி தரையில் கால் பதித்தவன்

"நல்லாயிருக்கேன் அத்தான் , நீங்க அக்கா, மாமா, அத்தை எல்லாரும் நல்லா இருக்கீங்களா?" எனப் பதிலுக்கு விசாரித்தான்.

"நல்லாயிருக்கோம், இந்த வாலு பேசினதைக் கண்டுக்கிடாத.வீட்டுல புலம்பிக் கிட்டே இருந்தா, அதே நேரம் நீ போன் செஞ்சு மாட்டிக்கிட்டே" சங்கடமாகச் சொன்னாலும் அவனுக்கு தங்கையை நினைத்துச் சிரிப்பே வந்தது.எதிர் தரப்பிலும் ரூபனால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.