(Reading time: 19 - 37 minutes)

19. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, சென்னையில் தன் பணியை துவக்கினர் ஜெய்யும் இஷானும்….

வேலையில் சேர்ந்த முதல் நாள், கமிஷனர் அலுவலகம் சென்றுவிட்டு, அந்த பரபரப்பான சாலையில் வந்து கொண்டிருந்தனர் இருவரும்…

“மச்சான்… இது தான் அந்த கொலை நடந்த இடம்…” என இஷான் கைகாட்டிய இடத்தில் வண்டியை நிறுத்த சொன்னான் ஜெய்…

வண்டியை விட்டு இறங்கி அந்த இடத்தை ஜெய் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, இஷான் ஜெய்யைப் பார்த்தபடி இருந்தான்…

“என்னடா இந்த இடத்தையே பார்க்குற?...”

“நத்திங்க்….” என்றவன், அவனை விட்டு நகரமுற்படுகையில்,

“எங்கடா போற?...” என்ற இஷானின் குரல் அவனை தடுத்தது…

“அந்த கடையில போய் டீ சாப்பிட போறேன்…” என்றவன் ரோட்டைக்கடந்து சென்று எதிர்புறம் இருந்த கடையை அடைந்தான்…

அவனைக் கண்டதும் அந்த டீக்கடைக்காரனோ, “சார் நீங்க எத்தனை பேர் வந்து கேட்டாலும் என் பதில் ஒன்னுதான்… நான் எதையும் பார்க்கலை…. எனக்கு எதுவும் தெரியாது….” என்றான் அவசரமாய்….

“நீங்க என்ன சொல்லுறீங்க எனக்கு புரியலை?... டீ வேணும்… இங்க டீ கிடைக்குமா?...”

அவனின் கேள்வியில் சற்றே அதிர்ந்த அந்த ஆள், பின் புன்சிரிப்புடன்,

“உட்காருங்க சார்… இரண்டே நிமிஷத்துல சூப்பரான டீ போட்டுத்தரேன்….” என்றதும், அவன் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான்…

ஜெய்யைத் தொடர்ந்து வந்த இஷானும் அவனருகில் அமர்ந்து,

“அன்னைக்கு அந்த கொலை…..” என அந்த டீக்கடைக்காரனை பார்த்து ஆரம்பிக்க, ஜெய் அவனை கண் ஜாடையில் தடுத்தான்…

நண்பன் தடுத்ததும், சட்டென்று அமைதியானவன், சிறிது நேரத்தில் டீயை வாங்கி குடிக்க ஆரம்பித்தான்…

“டீ ஸ்ட்ராங்கா சூப்பரா இருக்குண்ணா… எத்தனை வருஷமா கடை வைச்சிருக்கீங்க?...”

அவனது பாராட்டுக்கு பதிலாய் முகமெங்கும் புன்னகையுடன், “நன்றி சார்…” என்றவன், “நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே இங்க தான் இருக்கேன் நான்…” எனவும்,

அவனைப் பற்றி விசாரித்தான் ஜெய்…

பேச்சு வளர்ந்து வளர்ந்து அவனின் குடும்பம், தொழில், அன்றாட கடை திறக்கும் நேரம், சந்திக்கும் மனிதர்கள், வாடிக்கையான கஸ்டமர்கள் என சுற்றி சுற்றி வந்துவிட்டு கடைசியில் எதேச்சையாக அந்த கொலையிலும் வந்து முடிய, டீக்கடைக்காரன் தன்னை மறந்து சொல்ல ஆரம்பித்திருந்தான் தனக்கு தெரிந்த விஷயங்களை…

“பட்டப்பகல்ன்னு கூட பார்க்கலை தம்பி… வெட்டி சாச்சிட்டு போயிட்டே இருந்தானுங்க…”

பேச்சில் சார் குறைந்து தம்பி வந்திருக்க,

“யாருமே உதவிக்கு போகலையா?...”

மெதுவாக விசாரித்தான் ஜெய்…

“எங்க தம்பி?... பார்க்கவே பக்கா ரவுடிப்பயலுங்க மாதிரி இருந்தானுங்க… இதுல முகத்துல துணி வேற கட்டியிருந்தானுங்க…. நாலைஞ்சு பேரு ஒரு கை நீளத்துக்கு அருவா வச்சி சுத்தி நிக்கும்போது யார் போய் என்ன செய்ய முடியும்?... ஓடி ஒளியதான் செஞ்சாங்க…”

“கொலையும் பண்ணிட்டு அசால்ட்டா அவங்க இந்த பாதையில தான போயிருப்பாங்க மத்தவங்களையும் மிரட்டிகிட்டே??...”

“வெட்டி போட்டுட்டு திரும்பி பார்த்தப்போ பத்தடி தூரத்துக்கு அவனுங்களை சுத்தி ஆளே இல்ல தம்பி…. அப்புறம் ஒரு வெள்ளை கார் வந்துச்சு அதுல ஏறி இதோ இந்த திசையில தான் போனாங்க… கண் இமைக்குற நேரத்துல கொலையும் செஞ்சிட்டு சொகுசான அந்த பெரிய காருல ஏறி பறந்தும் போயிட்டானுங்க… எல்லாம் பணத்திமிரு… உள்ள போனாலும் வெளிய எடுக்குறதுக்கு அரசியல் ரீதியா சப்போர்ட் இருக்குங்கிற தெனாவட்டு… வேற என்ன சொல்ல…”

அவர் தனது ஆதங்ககத்தையும் சேர்த்து வெளிப்படுத்த, அவன் வந்த வேலை முடிந்தவனாய் டீயை குடித்துவிட்டு பணத்தையும் கொடுத்துவிட்டு, வரேண்ணா என்றபடி நகர, அவரும் தனது வேலையை தொடர ஆரம்பித்தார் டீயை ஆற்றிக்கொண்டே…

ரோட்டைக் கடந்து இந்த பக்கம் வந்தவன் இன்னமும் இஷான் அங்கேயே நிற்பதை பார்த்துவிட்டு,

“என்னடா வரலையா?....” என சைகை காண்பிக்க, இஷானோ, ஜெய்யின் விசாரணையை எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தான்…

அப்போது ஜெய்யின் பார்வை தூரத்தில் சற்று வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு வண்டியின் மீது பதிய, அதைத் தொடர்ந்து அந்த வண்டியின் பின்னாடியே பைக்கில் வந்த இருவரும் முன்னே செல்லும் வண்டியை மடக்க முற்படுவது தெரிய, ஜெய்யின் பார்வை கூர்மையாகியது…

வண்டி அவனைக் கடந்து முன்னேற, அந்த பைக்கும் அவனைக் கடந்து சென்றது இமைக்கும் நேரத்தில்… அதற்கும் மேல் தாமதிக்காது விரைந்து சென்று காரை எடுத்தான் டிரைவரின் உதவி இல்லாமலே…

அதற்குள் சாலையின் இந்த பக்கம் வந்துவிட்ட இஷான், ஜெய்யின் நடவடிக்கைக் கண்டு சற்றே அதிர்ச்சியாகி பின், அவனை பின் தொடர்ந்தான் வேறு ஒரு காரை அங்கே உடனே வரவழைத்து…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.