(Reading time: 19 - 37 minutes)

ஜெய் அந்த பைக்கை விரட்டி பிடித்து ஒரு வட்ட வளைவில் மடக்க, பைக்கில் இருந்த இருவரும் முழித்தனர்…

காரிலிருந்து வேகமாக இறங்கிய ஜெய், அவர்கள் இருவரையும் நோக்கி சென்று ஓங்கி மாறி மாறி அறைய, இருவரும் கன்னத்தினைப் பிடித்துக்கொண்டு பயப்பட,

“இறங்குங்கடா…” என்று உறுமினான் ஜெய்….

இருவரும் உடனேயே இறங்கிவிட,

“சார் நாங்க ஃப்ரெண்ட்ஸ் சார்… சும்மா ஒரு கோபம் அவளுக்கு… அதான் பின்னாடியே….” என சொல்லி முடிப்பதற்குள், பேசியவனுக்கு மீண்டும் ஓர் அறை விட்டான் ஜெய்…

“பொய் சொல்லலை சார்… வேணும்னா பாருங்க… அவ இப்போ திரும்பி பார்ப்பா நாங்க வரோமான்னு….” என இன்னொருத்தன் சொல்ல, அவனை முறைத்த ஜெய் சட்டென எதேச்சையாக போய்க்கொண்டிருந்த அந்த வண்டியைப் பார்க்க,

வளைவின் மறுபக்கம் சென்றுகொண்டிருந்த வண்டியில் இருந்த பெண், பைக்கில் தன்னை பின் தொடர்ந்து வந்த இருவரும் வருகிறார்களா என்று பார்க்க திரும்ப,

அந்த அழகு விழிகளில் மிரட்சி மட்டுமே பரவியிருக்க, பயத்தில் தவித்துப் போயிருந்தது அவளது விழிகள்…

அவளது விழியெங்கும் நிறைந்திருந்த மிரட்சி அவனுக்குள் என்னவோ செய்ய,

“நான் தான் சொன்னேன்ல சார்… அவ பார்ப்……………….” பேசி முடிக்க கூட விடாது ஜெய்யின் கைகள் அவனது கன்னத்தில் அழுத்தமாக பதிந்தது…

சட்டென்று கேட்ட சத்தத்தில் அவனிடம் நிலைத்தது அவளது பார்வை…

அவன் விழிகளை சந்தித்ததும் அதற்காகவே காத்திருந்தது போல் அவளது விழிகள் விரிய, அதில் இப்போது துளியும் மிரட்சி இல்லை…

அவன் விழிகளில் என்னக் கண்டாளோ சட்டென அவளது கைகள் பிரேக்கில் பதிய, சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள்…

அவளது விழிகளில் எங்கும் பெருகியிருந்த சந்தோஷம் அவனுக்குப் பிடித்திருந்தது… விழிகளைத் தாண்டி அவளது முகத்தில் அவனது பார்வை விழ, அதில் ஒருவித ஏக்கமும் உரிமையும் மகிழ்ச்சியும் தாண்டவமாடக்கண்டான் ஜெய்…

சட்டென தன்னையும் அறியாமல் அவன் இதழ்கள் மலர, அவனது முகத்திலும் ஜென்ம ஜென்மமாய் காத்திருந்த உணர்வு பிரதிபலிக்க, அப்படியே தன்னை மறந்திருந்தான் ஜெய்…

“நிறுத்துங்க நிறுத்துங்க… இங்க தான்….” என இறங்கிக்கொண்ட இஷான், ஜெய்யை நோக்கி விரைந்து வந்து,

“என்னடா மச்சான்?... என்ன ஆச்சு?... யாரு இவங்க…” என விசாரிக்க, பட்டென அதுவரை தான் இருந்த மோன நிலையில் இருந்து விடுபட்டான் ஜெய்…

அவள் விழிகளிடமிருந்து தன் விழிகளை வலிக்காது பிரித்தெடுத்தவன், இஷானிடம் நடந்தவற்றைக் கூறிக்கொண்டிருந்தபோது, வண்டி மோதும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் ஜெய்…

பின்னாடி வந்துகொண்டிருந்த வண்டி ஒன்று, நிறுத்தியிருந்த அவள் வண்டியின் மீது மோதி உரசி விலக, அந்த சாலையில் இருந்த சிறு பள்ளத்தில் அவளது வண்டி இறங்க, நிலை தடுமாறியவள்,

“அம்மா……..” என்ற குரலோடு கீழே விழ, சட்டென இஷானின் தோள் மீதுகைவைத்து அவனை நகர்த்திவிட்டு அவளை நோக்கி ஓடினான் ஜெய்…

தன்னை நோக்கி ஓடி வருபவனையே இமைக்காது அவள் பார்த்துக்கொண்டிருக்க, சில விநாடிகளில் அவள் பக்கம் வந்தவன், அவளை கீழே விழ செய்தவனின் மீது பாய்ந்தான்…

அவன் குடித்து வேறு இருக்கவே, அவனை அடித்து நொறுக்கினான் ஜெய்….

இஷான் வந்து அவனை அடிக்கவிடாது செய்துவிட்டு கீழே பார்க்க, ஜெய்யையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்த பெண் அவன் பார்வையில் பட,

“சதி………………….” என கூக்குரலோடு அவளின் கைப்பிடித்து தூக்கினான் இஷான்….

சதி………………….. என்ற பெயர் ஜெய்யின் மனதினுள் ஓர் முறை அதிர்ந்து ஒலிக்க, அவனுக்கே அது விசித்திரமாய் விநோதமாய் இருந்தது…

அவள் விழிகளில் அதுவரை நிரம்பி வழிந்த மகிழ்ச்சி இப்போது கோபமாய் மாறி இருக்க, அவள் அவனை முறைக்க ஆரம்பித்தாள்…

“வலிக்குதாடா?... அடி எதுவும் பட்டுச்சாடா?...” என்றபடி அவளின் மேல் அவனது பார்வை அக்கறையாக விழ, ஜெய் புருவம் சுருக்கினான் இஷானது அழைப்பையும் அக்கறையையும் கண்டு….

“நீ எங்கடா இங்க?...” என அவளிடம் இஷான் விசாரிக்க, அவள் தன்னைப் பின் தொடர்ந்து வந்த இருவரைப் பற்றி சொல்ல, இஷானுக்கு பட்டென்று கோபம் வந்தது…

“யாரு இவனுங்களா?...” என கை நீட்டி அவர்களை காட்டி கேட்க, அவளும் ஆம் என்றாள்…

“அவனுங்களை…..” என நகரப்போனவனை தடுத்தவள்,

“நீ வேற தனியா அடிக்கப்போறீயா?....” எனக் கேட்க இஷானின் பார்வை அவளையும் ஜெய்யையும் தொட்டுச் சென்றது…

இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்த எண்ணியவன், நினைவு வந்தவனாக, சதியைப் பின் தொடர்ந்த இருவரையும், குடித்துவிட்டு வந்து மோதியவனையும் பார்த்துவிட்டு ஸ்டேஷனுக்கு போன் செய்து ஆட்களை வரவழைக்க, அவர்களும் வந்து மூவரையும் அழைத்துச் சென்றனர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.