(Reading time: 10 - 19 minutes)

"ரி விடுங்க அத்தான், ஏதோ என்னைத் திட்டினதுல அவக் கோபம் தீர்ந்தாச் சரி, ஜீவன் என்னப் பேச்சு வங்குறானோ தெரியலையே" எனத் தன் தம்பியை நினைத்து பேசியவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கிறிஸ்ஸும் சேர்ந்து சிரித்தான். தொடர்ந்து நிலவிய உரையாடலில் ரூபனுடைய வேலை விபரங்கள், வசதிகள், தங்குமிடம், சாப்பாடு என விசாரித்து கேட்டுக் கொண்டான்.

 முதலில் தனியாக கல்லூரிச் செல்ல சலித்துக் கொண்டாலும் பின்னர் படிப்பில் அவளும் ஒன்றி விட்டாள். ஜீவனை முன்போல அடிக்கடிப் பார்க்க முடியாவிட்டாலும், அவன் கிடைக்கும் நேரமெல்லாம் சேர்த்து வைத்து தொல்லைச் செய்வாள். ஜீவன் முன்போல சரிக்கு சரியாக நின்று அவளிடம் சண்டைப் போடுவதைக் குறைத்து விட்டிருந்தான். ஆண்களுக்கு சொந்த சகோதரிமாரிடமே கொஞ்சம் ஒதுக்கம் காட்டுகின்ற அளவிலான மனமுதிர்ச்சி வரும் பருவம் அது. ஆதலால், அவனிடம் அந்த மாற்றம் வந்திருந்தது. 

 கத்தி கத்திப் பார்த்து தொண்டை வற்றிப் போனவளாக அவள் திரும்பச் செல்வதைப் பார்த்து அவனுக்கு வெகுவாக சிரிப்பு வரும். கோபத்தில் "போடா டேய் ஜீவா" என்று சொல்லி விட்டுப் போய் விடுவாள். 

 கொஞ்ச நாளைக்குப் பின் அவளுக்கு அத்தை என்னும் பிரமோஷன் கிடைத்ததும் அவள் அடித்த லூட்டிக்கு அளவில்லை. தன் வீட்டில் தன்னை விட சின்ன ஒரு குட்டியான செல்லமான அண்ணன் மகளை தூக்கிக் கொண்டு கொஞ்சவே அவளுக்கு நேரம் போதவில்லை என்றுச் சொல்ல வேண்டும். ஒருவழியாக இந்தக் காரணத்தினாலாவது தன்னுடன் வம்பிழுக்காமல், இருக்கிறாளே என்று அந்த விஷயத்தில் ஜீவனுக்கு மகிழ்ச்சியே.

 அன்றைய ரூபனுடைய பேச்சு அனிக்காவின் மனதில் இருந்தாலும் , அவளுக்கு அதற்கு எந்த விதமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று இன்னும் கூட புரியவில்லை. அவளிடம் வழிகின்ற , காதல் காதல் என்று பிதற்றுகின்ற ஆண்களின் பேச்சையும் அவள் கேட்டிருக்கிறாளே.

"நீ இல்லைனா நான் செத்துடுவேன் அனிக்கா"

"நீதான் என்னோட லைஃப்"

"எனக்கு எல்லாமே நீதான், நீமட்டும் இல்லைனா என் வாழ்க்கையே இருட்டா ஆயிடும்" 

இப்படி பலவாறான வசனங்கள் கேட்டிருக்கிறாள்.அதைக் குறித்து ஒரு போதும் ஈர்க்கப் படாவிட்டாலும் ஜீவனிடம் இது போன்றவைகளைப் பகிர்ந்துக் கொண்டால் அவன் அடி தடியென்று இறங்கி விடும் ஆபத்து இருப்பதால், தன்னுடைய நெருக்கமான பெண் தோழியருடன் மட்டுமே "எந்த படத்திலிருந்து இந்த டயலாக்கை காப்பியடிச்சாங்களோ" என்றுக் கிண்டலடித்துச் சிரித்துக் கொள்ளுவாள்.

 அது போலவே ரூபனுடைய வார்த்தைகளை எடுத்துக் கொள்ளவும் அவளால் முடியவில்லை. அதனை யாரிடமும் சொல்லவும் இயலவில்லை. சொன்னால் வீட்டினுள் பிரளயமே வரும் என அவளுக்கு தெரியாதது அல்லவே? ஆக அவள் மனதினுள் அவன் வார்த்தைகள் செயலற்றுக் கிடந்தன....... பத்திரமாய், மிகப் பத்திரமாய். அவ்வார்த்தைகளில் ஆழமாய் பொதிந்து இருந்த அவனின் காதலையும், அதன் ஆழத்தையும் என்றேனும் அவள் அறிந்துக் கொள்ள வாய்ப்பு வருமா? இதைக் காலமே அறியும்.

 ரூபனின் முயற்சியில் அவன் குடும்பமே ஒன்றுக் கூடி அவனோடு நிற்க , அவன் இரண்டு வருட காலம் வேலை முடிந்து வரும் முன் அவனுடைய தொழிலுக்கு தேவையான பல அடிப்படை ஏற்பாடுகளைப் பார்த்து வைத்திருந்தான் தீபன். வந்ததும் வராததுமாக தன்னுடைய வேலைகளில் முழு மூச்சாய் இறங்கினான் ரூபன். பல்வேறு இடர்பாடுகள் எதிர்வந்தன தான் , ஆனால் அவனுடைய வெறித்தனமான உழைப்பினால், புத்திக் கூர்மையால், நிர்வாகத் திறனால், திட்டமிடுதலால் தொடர்ந்த இரண்டு வருடங்களுக்குள்ளாக ஒரு விதமான சம நிலைக்கு வந்துச் சேர்ந்து இருந்தான். அவனுடைய வளர்ச்சி அனைவருக்கும் மலைப்பூட்டுவதாகவே இருந்தது. அவனை உள்ளிருந்து இயக்கும் காதலோ இது போதாது , இது போதாது இன்னும் இன்னும் என்று மேலும் உயரங்களை அவன் தொடச் சொல்லி இயக்கிக் கொண்டு இருந்தது.

 அவனுடைய வளர்ச்சி, செல்வ நிலை, அடைத்த அத்தனைக் கடன்கள்,வீட்டிற்கு தேவையானவை சில நிறைவேற்றியது, புதிதாக வாங்கிய லேட்டஸ்ட் மாடல் கார், எல்லாம் அவனை இகழ்வாக பேசிய நபர்கள் அவனை நெருங்கி வரச் செய்ததும் , அவனுக்கு வேண்டாத பிரச்சினைகள் பல வர விருந்ததையும் அவன் அறிந்து இருக்கவில்லை.

 அவன் அறிந்தது எல்லாம் ஒன்றே அவனுடைய அத்தனை களைப்பையும் , சோர்வையும் அவனை விட்டு விலக்கும் ஒரே தாரக மந்திரம் அவனுடைய உயிருக்குள் உறைந்து விட்டவளான அவனுடைய அனிக்கா தான் என்று, வார நாட்களில் அவளைப் பார்க்க முடியாமல் தவிப்பவன் ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டால் போதும். காலைத் திருப்பலிக் கண்டு விட்டு ஆலயத்திற்கு வெளியே வருபவளை பிறர் அறியாமல் எப்படி எல்லாம் பார்க்கலாம் என்று ஆயிரம் டெக்னிக்குகள் அவனிடம் உண்டு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.