(Reading time: 21 - 42 minutes)

ன்னத்தான் மனைவி சொன்னாலும் குமாரசாமியின் மனம் சமாதானமாகவில்லை... தன் மகளின் ஜாதகத்தை தன் குடும்ப ஜோசியரிடம் காண்பித்ததும் அந்த ஜோசியர் அவள் நல்ல இடத்தில் வசதியாக சந்தோஷமாக வாழ்வாள்... என்று தான் கூறினார்... அவர் இதுவரை சொன்னதெல்லாம் நடந்தும் இருக்கிறது... அதுதான் இப்போது அவர் கவலையே... தன் மகளின் ஜாதகத்தை பார்த்து அந்த ஜோசியர் நல்ல பலன் மட்டும் சொல்லவில்லை... கூடவே ஒரு கவலை தரும் செய்தியும் கூறினார்.

"உங்க பொண்ணுக்கு கல்யாண யோகம் கூடி வந்துடுச்சு குமாரசாமி, இப்ப நீங்க அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்... நல்ல வசதியா, அமோகமா அவ வாழப்போறா... ஆனா.." கொஞ்சம் தயங்கி, பின் பொறுமையாக கூறினார்.

"ஆனா அவ கல்யாணம் கொஞ்சம் குழப்பத்தோட நடக்கும், ஆனா பெருசா எதுவும் இருக்காதுன்னு நினைச்சுப்போமே... அதனால அவ கல்யாணம் கூடி வந்தா எந்த குழப்பமுமில்லாம கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு கல்யாண வேலையை ஆரம்பிங்க..." என்று அந்த ஜோசியர் சொன்னார்.

அவருக்கென்ன, பலன் சொல்லும்போது நிறை, குறையை எத்தனையோ பேருக்கு அவர் சொல்லியிருப்பார்... ஆனா தன்னோட பொண்ணுன்னு வரும்போது தங்களுக்கு தானே வருத்தமெல்லாம்... வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் முழு விவரத்தையும் அவர் கூறவில்லை... வெறும் ஜோசியர் சொன்ன நல்லதை மட்டும் சொன்னார்..

அதற்கேற்றார் போல், முதல் வரனே வசதியாக வந்ததால்... மல்லிகாவும் இந்த வரனையே முடித்துவிடும் ஆசையில் இருக்கிறார்... ஆனால் இவருக்கு தான் கல்யாணத்துல என்ன குழப்பம் வருமோ என்கிற கவலையில் சின்ன சின்ன விஷயத்தை கூட மனம் ஆராய்ச்சி செய்து பார்க்கிறது...

இதே யோசனையில் அவர் நின்றிருக்க... "என்னங்க என்ன யோசிக்கிறீங்க... எல்லாம் நல்லபடியா நடக்கும் வாங்க..." என்று ஆட்டோவில் உட்கார்ந்தபடி மல்லிகா கூறியதும் அவரும் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தார், ஆட்டோ வீடு நோக்கி சென்றது.

மைலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவிலில் அன்று விசேஷ தினம் எதுவும் இல்லாததால் கூட்டம் குறைவாகவே இருந்தது... அதனால் அம்மன் தரிசனம் நர்மதாவிற்கும், யமுனாவிற்கும் நன்றாகவே கிடைத்தது...  இருவரும் தரிசனத்தை முடித்துவிட்டு, பிரகாரத்தை ஒருமுறை சுற்றி வந்தனர்... பின் இருவரும் ஒரு இடம் பார்த்து உட்கார்ந்தனர்.

நர்மதா, யமுனா இருவரும் தென் சென்னையில் உள்ள ஒரு தனியார் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையர்களாக பணி புரிகின்றனர், நர்மதா B.Sc Maths, B.Ed படித்துவிட்டு கணித ஆசிரியையாகவும், யமுனா B.A English lit, B.Ed படித்துவிட்டு ஆங்கில ஆசிரியையாகவும் பணிபுரிகிறார்கள்.

இருவரும் ஆசிரியைகளாக பணி புரிவதால், எப்போதும் ஒற்றை பின்னலிட்டு, ஒரு எளிமையான புடவையோடு தான் பார்க்க முடியும்,   இருவரையும் பார்க்கும் போது நம் அக்கம் பக்கத்து வீடுகளில் பார்க்கும் சராசரி அழகுடைய பெண்கள் தான் ஞாபகத்திற்கு வரும்...

யமுனா, நர்மதாவை விட ஒரு வயது சிறியவள், அதே போல் நர்மதா சேர்ந்த ஆறு மாதத்திற்கு பின் தான் யமுனா அந்த பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள்... இருவரும் ஒரு வருடமாக ஒன்றாக பணிபுரிகின்றனர்.. இருவருக்கும் சில பொறுப்புகள் கொடுக்கப்பட்டு ஒன்றாக சேர்ந்து செய்ததாலும், இருவரும் ஒரே பஸ் ரூட்டில் பயணம் செய்வதாலும் இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு உருவானது...

நட்பு என்று அதிக உரிமை எடுத்து, இன்னொருவரின் அந்தரங்கத்தில் தலையிட்டு அன்பு தொல்லை செய்யாததாலும், அதே சமயத்தில் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அக்கறையாக இருப்பதாலும்.. இருவராலும் நெருங்கிய தோழிகளாக ஆக முடிந்தது...

அவர்களின் நட்பு பள்ளியில் மட்டும் தொடராமல், யமுனா லேடிஸ் ஹாஸ்டலில் தங்கியிருப்பதால் விடுமுறை தினங்களில் நர்மதா வீட்டிற்கு அவள் சென்று வருவது, சீக்கிரம் பள்ளியிலிருந்து கிளம்பினால் இது போல் ஏதாவது கோவிலுக்கு சென்று சிறிது நேரம் பேசுவது என்று அவர்களின் நட்பு வெளியிடத்திலும் தொடரும்...

அதேபோல் மாதம் ஒருமுறை ஏதாவது தங்களுக்கு தேவையானதை வாங்க இருவரும் ஷாப்பிங் செல்வது வழக்கம், எப்போதும் புடவையே கட்டுவதால்... அந்த ஒருநாள் சுடிதார் அணிந்துக் கொண்டு டி.நகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, பாண்டிபஜார் என்று ஒரு இடம் விடாமல் வலம் வருவர், முக்கியமான சிலப் பொருட்களை மட்டும் தான் பெரிய ஷோ ரூமில் வாங்குவர், மற்ற பொருட்களை அங்கிருக்கும் சின்ன சின்ன கடைகளில் பேரம் பேசி, அதற்காக கறாராக இல்லாமல், விற்பனையாளர்களுக்கு இலாபம் கிடைக்கும்படி பொருட்களை வாங்குவர், அப்படி ஷாப்பிங் செய்யும் போது நடுவில் வேர்க்கடலை போட்ட மசாலா பொறி, லெமன் சோடா இல்லை கோன் ஐஸ்கிரீம் என்று ஏதாவது வாங்கி சாப்பிடுவர், இல்லை எப்போதாவது பசி எடுத்தால், தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் ஆளுக்கு ஒரு அரைப் ப்ளேட் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிடுவர். இப்படியே அவர்களின் நட்பு தொடர்ந்தது...

இன்று பள்ளி முடிந்ததும் கோவிலுக்கு போலாமா..?? என்று நர்மதா கேட்டதால் தான் இருவரும் கோவிலுக்கு வந்தனர், ஏதோ பேசப் போவதால் தான் நர்மதா கோவிலுக்கு கூப்பிடுகிறாள் என்று யமுனா யூகித்து விட்டாள்... ஆனால் இன்னும் பேச்சை ஆரம்பிக்காமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நர்மதா..

"நர்மதா... ஏதோ பேசனும்னு தானே கோவிலுக்கு போலாம்னு சொன்ன... அப்புறம் ஏன் அமைதியா உட்கார்ந்திருக்க..??"

"பேசனும்னு கூப்பிடல யமுனா.. கொஞ்ச நேரம் கோவிலில் உட்கார்ந்திருக்கனும்னு தோனுச்சு.. அதான் போலாமான்னு கேட்டேன்..."

"ஏன் என்னாச்சு..??"

"ஒன்னுமில்ல யமுனா... அப்பா மதியம் லன்ச் டைம்ல போன் பண்ணாரு.... இன்னைக்கு அப்பா,அம்மா ரெண்டுப்பேரும் மாப்பிள்ளை வீட்டுக்கு போனாங்க... அப்படியே அங்கேயே சிம்பிளா நிச்சயத்தை முடிச்சு, கல்யாண தேதியை குறிச்சிட்டாங்களாம், இன்னும் 25 நாளில் கல்யாணமாம்..."

"என்னடி சொல்ற, ரெண்டு நாளுக்கு முன்னாடி தானே அவங்க பொண்ணு பார்த்துட்டு போனாங்க... அதுக்கப்புறம் மாப்பிள்ளை வந்து பார்க்க வேண்டாமா..??  நீயும் மாப்பிள்ளையை போட்டோல மட்டும் தான் பார்த்திருக்க... நேர்ல பார்க்க வேண்டாமா..?? அதுக்குள்ள கல்யாண தேதியை குறிச்சிட்டாங்கன்னு சொல்ற...?? "

"அது அந்த மாப்பிள்ளை ரொம்ப பிஸியாம், அதில்லாம அவங்க அம்மாக்கு பிடிச்சா போதும்னு ஏற்கனவே சொல்லிட்டாராம்... கல்யாணமும் சிம்பிளா பண்ணனும்னு சொன்னாராம்... அதான் சீக்கிரம் நல்ல முகூர்த்தம் பார்த்து கல்யாணம் முடிவுப் பண்ணிட்டாங்க, நானும் அம்மா, அப்பா இஷ்டம்னு தானே சொன்னேன்... அதனால அம்மாவும் ஒத்துக்கிட்டு வந்துட்டாங்க.."

"சரி மாப்பிள்ளை வீட்ல அப்படி முடிவு செஞ்சிருக்கும் போது... அதுவும் நல்லதுக்கு தான்... இப்பல்லாம் கல்யாணம் என்ற பேர்ல இந்தியாவுல நிறைய செலவுப் பண்றாங்கன்னுல்லாம் நியூஸ் வருது...

சரி, கைகொடு கல்யாணப் பொண்ணு... கங்க்ராட்ஸ்" என்று கை குலுக்கியவள்,

"சரி மாப்பிள்ளை உன்னை பார்க்க வரலன்னா என்ன..?? நாம போய் அவரை பார்த்துடலாம் சரியா..??" என்று யமுனா, நர்மதாவை கேளி செய்ய... முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் நர்மதா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.