(Reading time: 25 - 49 minutes)

06. அதில் நாயகன் பேர் எழுது - அன்னா ஸ்வீட்டி

Athil nayagan per ezhuthu

த்துமாவின் அங்கமான மனித மனதில் எழும் சிந்தனைகள் அம்மனிதரின் அனுமதி பெற்று எழுவதில்லை….ஆனால் அவை தொடர்வதும் அல்லது தடையிட்டு  தடுக்கப்படுவதும் அவரின் சுயத்தின் அதிகாரத்திற்குட்பட்டே இருக்கின்றது.…..

அப்படித்தான் ஆயிற்று காகதீய இளவரசி ருயம்மாதேவியின் நிலையும்….அவள் அனுமதியுடனோ ஆலோசனையுடனோ உதிக்கவில்லை மரணம் நேர்ந்தால் இவனருகில் நேரட்டும் என்ற அவ்வெண்ணம் ….

ஆனால் அது வந்து உதித்துவிட்ட இந்நிலையில் திடுக்கிட்டுப் போனாள் அவள். மிதமிஞ்சிய திகிலும் உண்டாயிற்று அவளுக்கு…..குற்றம் சுமத்தி கலவரமூட்டியது அவள் பெண்மை…… இஃதென்ன சிந்தனை? அந்நிய ஆண் மகன் அருகில் மரணத்தை தழுவ விருப்பமா?? கலங்கி தகித்தாள்.

ஏன் எழுந்தது இவ்வெண்ணம்? சடுதியாய் ஒரு ஆராய்தல்….சற்று முன் இப் பாண்டிய சேனாதிபதி போரின் விளைவுகள் குறித்து விளக்கியது மனதில் வந்து விழுகிறது….ஓ அது தான்…..

மரணத்திற்குப் பின்னும் தன் மானம் காக்கப் படவேண்டும் என வாஞ்சிப்பது பெண்மையின் இயல்பல்லவா…. பெண்களின் மானத்தை காப்பதை தான் வாளெடுப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாய் அவர் பகர்ந்திருந்தாரே….

அஃதோடு இவள் பாதுகாப்பிற்காய் மரணத்தை கூட சிரமேற்பேன் என்ற அவரது சூளுரையும் இணைந்து, ‘துருக்கிய சைனியத்திடம் தோல்வியை சந்திக்க நேர்ந்தால்’  என்ற எண்ணம் பிறக்கவும்…. அவர் அருகில் மரணம் ஏற்பட விளைகிறது போலும் இவள் மனம்….

கற்பை காக்க போராடும் பெண்ணின் இயல்பான சிந்தை இது….வேறொன்றுமில்லை என விடையும் கண்டு, ஒரு வகையில் தன்னை சாந்திகுட்படுத்திக் கொண்டாள் ருயம்மா. ஆனாலும் இதைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்தது அவளது சிந்தனா வெள்ளம். அதில் வெகு நேரம் மௌனம் புனைந்தன இவள் இதழ்கள்.

“சிந்தனை பலமாயிருக்கிறதே ருயமரே?” என்று அவனே வினவியதில்தான் அவளது எண்ண சுழலைவிட்டு விடுபட்டவள்,  தாங்கள் துருக்கியர் பதுங்கி இருக்கும் அந்த வனாந்தர பகுதியைவிட்டு வெகுவாக விலகி ஓரளவு தங்கள் கோட்டைக்கு அருகில் வந்திருக்கிறோம் என உணர்ந்து

“பலவும் ஓடிக் கொண்டிருக்கிறது மனதில்….எதைக் கேட்கிறீர் பிரபு?” என இயல்பாய் சம்பாஷிக்க முனைந்தாள். பெருமளவு சமனப்பட்டிருந்தாள் அவள்.

“ஒவ்வொன்றாய் சொல்லும் கேட்போம்…” அவனிடமோ கதை கேட்க தயாராகும் தோரணை…..

மரணத்தை துருக்கியர் வடிவில் தன் முதுகுக்கு பின்னும்…. அந்நியர் கோட்டையை முகத்திற்கு முன்னும் வைத்துக் கொண்டு இவரால் எத்தனை இலகுவாய்  இருக்க இயல்கிறதாம்…. இத் திக்கில் பாய்ந்ததது இவள் நினைவு…..  

அதன் விளைவாய் இவளும் இலகுவாகவே உணர விருப்பமுற்றாள்….

ஆக ”தங்களுக்கு பெயர் சூட்டிய பெற்றோரின் ஞானத்தை எண்ணிக் கொண்டிருந்தேன்….. நிச்சயமாய் பாராட்டப்பட வேண்டியவர்கள்” என அவள் மனதில் வந்து போன ஒரு இலகு சிந்தனையில் சம்பாஷணையை  துவங்கினாள்…

“ நீர் பாண்டிய தேசம் விஜயம் புரியும்பொழுது அப்பெயர் வைத்தவர்களிடம் இப்பாராட்டை நேரில் நவின்றுவிடும்…..மிகவும் மகிழ்வார்கள்…” இழையோடும் சிறுநகையுடன் விடை வந்தது அவன்புறம். அதில் விஷமத்தின் சாயையுண்டோ????

மீண்டுமாய் திக்பிரமித்தாள் ருயம்மா. அவளுக்கு ஆழ்ந்த கலக்கமும் உண்டாயிற்று…..இவளை இனம் கண்டு கொண்டாரோ இப் பிரபு?? பாண்டிய மன்னனை மணந்தால் இவள் ருயம்மாதேவியாய் அங்கு செல்ல நேரிடும். ஆனால் ருயமருத்ரனாய் அங்கு இவள் செல்லும் தேவையே கிடையாதே….

அப்படியானால் இவள் பெண் அதுவும் இளவரசி ருயம்மாதேவி எனவே கண்டுவிட்டார்தானே இவர்…? குழம்பி திகைத்தாள். மேற்கொண்டு எதுவும் சொல்லவும் இயலாமல் சன்னமாய் முறுவல் செய்யவும் வகையற்று கல்லென சமைந்தாள்.

“ஏனிந்த  திகைப்பு?” இவள் முகபாவம் உணர்ந்து வினவினான் அவன்.

ஆயினும் இவள் விடை ஏதும் பகரும் முன்னம் “இத் துருக்கிய முற்றுகை முறியடிக்கபடவும் உம்மையும் என்னுடன் பாண்டிய நாடு அழைத்து செல்லலாம் என எண்ணி இருக்கிறேன்….” என தன் திட்டத்தையும்  பகர்ந்தான்….

 எல்லையற்ற வியப்பிற்குட்பட்டாள் ருயம்மாதேவி…..சொல்லவொண்ணா ஒரு கிளர்வும் அவளை தாக்கிற்று….

இவ் ஒற்றறியும் பணிக்கும் இவளைத்தான் தேர்ந்தெடுத்தார் சமயோசிதத்திலும் ராஜதந்திரத்திலும் தன்னிகரில்லா இப்படைத்தலைவர்…. தற்போது பாண்டிய நாடும் அழைத்து செல்வதாக கூறுகின்றார்…..இவர் திட்டம் தான் என்ன? அதிலும் குறிப்பாக இவளை அழைப்பதன் காரணம் என்ன?

அவளால் கிரகிக்க இயலவில்லை….

“ஏது சேனாதிபதியாரே இந்த ருயமருத்ரன் மீது இத்தகைய அபிமானம்?”  இலகு நகை துலங்க வினவினாலும் எச்சரிக்கை பாவமும் விரவிக் கிடந்து அவ் வார்த்தைகளில்..…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.