(Reading time: 25 - 49 minutes)

மேற்கொண்டு இதில் இன்னுமொரு பகுதியாக உமது வீர்ர்கள் ஆபத்தான நிலையில் பாண்டியனான என் தலைமைக்கு கீழ்படிய தயங்கினால் விபரீதமாகிவிடும்…..ஆனால் அவ்வீரர்கள் இளவரசியார் நிமித்தம் நிச்சயமாய் நாசியின் கடைசி சுவாசமுள்ள மட்டும் உண்மையாய் போராடுவர்…..”

இத்தகைய அவனது விளக்கத்தை கேட்டு இவளுக்கு அவன் தனது ஒற்றறிய வந்த உள்நோக்கத்தை அறிந்து கொண்டதை எண்ணி லஜ்ஜையுறுவதா…..

அல்லது அவன் யோசனை செல்லும் வகை கண்டு பிரமிப்பதா….

இல்லை சதுரங்கத்தில் காய் நகர்த்துவது போல் ஒவ்வொருவர் மனோபாவத்தையும் நிதானித்து அதற்கு ஏற்ப செய்லபடும் அவன் இவளுக்கு எதிராய் திரும்பினால் என்ன நேரிடும் என அஞ்சுவதா என புரியாமல் திகைத்தாள்.

இதற்கிடையில் இவை அனைத்தையும் மீறி பெண்ணென்பவள் அந்தபுரத்திற்கு மட்டுமே அருகதையானவள் என்ற எண்ணம் அவன் இதயத்தில் இல்லை என்பதை குறிப்பெடுத்து குதுகலப்பட்டது வாள்வீசும் கன்னியவள் உள்ளம்.

ஆனாலும் போர்களத்தில் நின்றிருக்கிறோம் என்ற நிலை உணர்ந்து இவள் அவன் வார்த்தைக்கு மறுப்பேதும் சொல்லாமல் தன் அறை நோக்கி பறந்தாள்….. மீண்டுமாய் பெண் உடை புனைய வேண்டுமே….

செல்லும் வழியிலேயே கவனித்தாள்…..கோட்டையின் கொத்தளம் எங்கும் ஏராளமான ஏற்றப்படாத தீ பந்தங்கள் ஆங்காங்கு சொருகப்பட்டோ அல்லது கயிறு கொண்டு கட்டப்பட்டோ காட்சி தந்தன….

அஃதோடு வண்டி வண்டியாக பல கருநிற வண்டிகளிலும் ஏற்றபடாத தீப்பந்தங்கள் ஆயத்தமாய் அடுக்கப்பட்டிருந்தன….

குறிப்பிட்ட நேரத்திற்கெல்லாம் முகம் மறைக்கும் தலை கவசமும் போர்களத்திற்கு ஏற்ற உடையுமணிந்த இவள் அந்த மானகவசனது புரவிக்கு இணையாக தன் புரவியை செலுத்த,

 ஐம்பது காலாட்படை வீர்ர்களுடனும்….. ஏனைய பத்து பேர் வண்டிகளை செலுத்தவும்…..

ஒவ்வொரு வண்டியின் பின்புறமும் ஒருவர் இவர்கள் எடுத்து செல்லும்  எரியும் தீபந்தத்தில் ஒன்றை வைத்தபடி அமர்ந்திருந்தனர்….

அத் தீப்பந்தம் எரிந்து கொண்டிருந்தாலும் அதன் வெளிச்சம் எதிரிக்கு பார்க்க கிடைத்து, அவர்கள் எச்சரிக்கை அடைந்து விடக் கூடாது என்பதற்காக,

மண் குடத்தால் அதன் நெருப்பு பகுதியை மறைக்கும் வண்ணம் அதன் மீது குடை போல கவிழ்த்து பிடித்தபடி அமர்ந்திருந்தனர் அத்தீப்பந்தம் பிடித்திருந்த வேலையாட்கள்….

இவ்வாறாய் அந்த துருக்கிய சைனியத்தை துரத்தவென இரவில் நிலவொளியை மட்டுமாய் துணையாய் கொண்டு கிளம்பியது இவர்களது படை …..

இன்னுமாய் ஒரு நூறு வீரர் கோட்டையின் காவலுக்காய் உள்ளே தங்கி இருக்க,

இவர்களைப் போலவே சகல ஆயத்தங்களுடனும்  கோட்டையின் பிரதான வாசலருகில் குழுமி இருந்தது, கோட்டை தலைவர் சைலபத்திரன் தலைமையில் மற்றொரு படைப் பிரிவு ….

இவர்கள் கோட்டையிலிருந்து  வடக்கு திசையில் தங்கியிருந்த துருக்கியரை எதிர்கொள்ள  நேராக செல்லாமல் கிழக்கு நோக்கி பிரயாணித்தனர்…..

அரைவட்டமாக பயணித்து எதிரியை எதிர்கொள்ள திட்டம்….

எரியாத தீபந்தமேற்றிய பார வண்டிகளின் சக்கரங்கள் சுழலும் சத்தமும்…..

அவ்வண்டிகளின் அசுவங்களின் குளம்பொலியும்,  மென்னடை புரியும் இவர்களது புரவிகளின் குளம்பொலியும் மிக சன்னமாகவே அமைந்திருக்கிறது…

அவ்வாறு ஓசையின்றி முன்னேறவென,  இயல்பான வழி தடத்தை பின் பற்றாமல்….ஓரடி உயரத்திற்காய் வளர்ந்து மண்டிக் கிடந்த அக்காட்டு புல்வகைகளின் மீதே இவை அனைத்தும் வழி நடத்தப்பட பணித்திருந்தான்  பாண்டிய படைத்தலைவன்….

இவ்வாறாய் இப் படை ஒரு குறிப்பிட்ட தொலைவு பயணிக்கவும்….. இப்பொழுது இவர்கள் தங்கள் பயண திசையை மாற்றி அரைவட்டமாய் வடமேற்காய் திரும்புகின்றனர்…..

அதாவது துருக்கிய சைனியத்தை நோக்கி அணி வகுத்தனர்….

பாண்டிய சேனாதிபதி மானகவசனின் வார்த்தையின் படி வீர்ர்கள் சிலர் பின் சிலர் என வரிசை வரிசையாய் அணிவகுக்காமல் ஐம்பது பேரும் இடமிருந்து வலமாக பக்கவாட்டில் ஒரே வரிசையாக அணிவகுத்து முன்னேறியது ருயம்மாவின் பார்வைக்கு விந்தையாகவே அமைந்தது….

மானகவசனின் கண்கள் நானாதிசையும் சுழன்று வர…...ருயம்மாதேவியின் விழிகளோ தாங்கள் விட்டுவந்த கோட்டையின் மீதாய் பதிந்து கிடக்கிறது…..இப்பொழுது கோட்டை மதிலில் ஆங்காங்கு ஏற்றப் பட்டிருந்த சில தீபந்தகளில் முன்பக்க கூண்டில் மினுக் மினுக்கென ஒளி சிந்திக் கொண்டிருந்த தீப்பந்தம் அணைந்து போகிறது.

கோட்டையில் தங்கி இருக்கும் கோட்டை உபதலைவன் தனக்கான கட்டளையை நிறைவேற்றுகிறான் என இவளுக்கு புரிகின்றது.

“தீபம் குளிர்ந்தது….” இவள் மெல்லமாய் சொல்லிக்கொண்டாள்…..

இவளைப் போன்று பின் திசை திரும்பாமல் முன் நோக்கி சென்று கொண்டிருந்த  பாண்டிய சேனாதிபதியின் “ம்” என்ற சப்தம் அதற்கு பதிலாய் வந்தது…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.