(Reading time: 25 - 49 minutes)

கோட்டையின் பிற வீரர்கள் போரிட ஆயத்தமாய் இருக்கிறார்கள்…” வினோத திசையில் விடையளிக்க துவங்கினான் அவன்.

“ஆம்…..ஆகையால்…” ஒத்துக் கொண்டவள் விளக்கம் வேண்டினாள்….

“இன்றைய ஒற்றறியும் நிகழ்வில் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம்….”

“நிச்சயமாக…….” ஆமோதித்தாள்.

“இருவர் மாத்திரமாய் எதிரி சைன்யத்திடம் சிக்கும் அபாயம் மிகையே……” ஒத்துக்கொள்ளும் பதங்களை பகர்ந்தபடி,  அவன் மொழிய முற்படும் கருத்து என்ன என யூகிக்கவும் முனைந்தாள்.

“நீர் உமது உயிரை கோட்டை மதில் மீது விரயமாக்க இருந்தீர்….” தொடர்ந்தான் அவன்.

“………….”

“வீணாக செல்லும் உயிர் எதிரியின் வாளால் செல்லட்டுமே  என அழைத்து வந்தேன்…...” ஏளனமற்ற குரலில் இவ்வாறு இயம்பி நிறுத்தினான்.

இத்தகைய காரணத்தை நிச்சயமாய் ருயம்மாதேவி எதிர்பார்த்திருக்கவில்லை…. ஆக கொன்று போடத்தான் கூட்டி வந்தானாமா?

“கோட்டையின் பிற வீர்ர்கள் வாழ்வின்  மதிப்பறிந்தவர்கள்…” மேற்கொண்டு சொன்ன அவனது இக்கூற்றில் ஏளனமிருக்கிறது தானே….

ஒரு கணம் மிதமிஞ்சி கொதித்தாலும் மறுகணம் அவன் நோக்கத்தின் ஆழம் விளங்க சரேலென குளிர்ந்தும் போனாள் ருயம்மா…. அவனது செயலை சிலாகிக்கவும் முற்பட்டாள்…...

“தாய் நாட்டை இத்தனை போர் மேகம் சூழ்ந்திருக்க தற்கொலைக்கு முயல்வதற்கும் புறமுதுகிடுவதற்கும் ஏது வித்யாசம் ருயமரே….?” சினம் பகிரங்கமாயிருந்தது அவன் வினாவில்.

இவ்விதமாய் வார்த்தையால் கேட்பதற்கு முன்  செயல் விளக்கம் செய்திருக்கிறார் இவர்…..சிறந்த ஆசான்தான் இந்த பாண்டிய சேனாதிபதி….உவகை தளும்ப எண்ணிக் கொண்டாள்.

 ‘அஃதோடு நான் ஒரு ஸ்த்ரீயென இவருக்கு தெரியவில்லை என்பதும் நிச்சயம்….’ என்பதாக அது குறித்த அவள் விசனமும் அப்பொழுதுக்கு அடங்கி நிர்சலனம்  உதித்தது அவள் சிந்தையில்..

சற்று முன் இவன் அருகில் மரணம் வேண்டும் என வாஞ்சித்த இதய உணர்வு குறித்து ஒரு  எச்சரிக்கை மணி உண்டாகி இருந்தது இவளுள். அது இக்கணம் கிண் கிண் என இடைவிடாது ஒலிப்பதால்…. மானகவசன் குறித்து பாராட்டுக்கள் பாவை இதயத்தில் பவனி வந்தாலும் வார்த்தையில் அதை வெளியிட விருப்பமுறவில்லை மங்கை…..

 “ஆக பாண்டிய தேசத்தில் தற்கொலையை தவிர்க்க இன்னுமாய் ஏராள காரணங்கள் காணக் கிடைக்கும் என்கிறீரோ…?” என்று சிறு ஏளனம் கலந்தே உரையாடலை நகர்த்தினாள்…. போர்களத்தை விடவும் அங்கு ஆபத்துகள் அதிகமோ என்பது அதன் பொருள்….பாண்டிய தேசத்திற்கு இவளை அழைப்பதின் நோக்கமும் அவளுக்கு புரிந்தாக வேண்டும்…

“உமது சகோதரியை மணமுடித்து அனுப்ப இருக்கின்றீர் அத்தேசத்திற்கு…..” இப்படியாய் மறு உத்தாரம் வந்தது அவனிடமிருந்து…. ஏளனமோ வெகுளியோ ஏதுமின்றி அவன் குரல் ஒலித்தாலும்……அப்படி ஒரு தேசத்திற்கு உங்கள் வீட்டு பெண்பிள்ளையை அனுப்ப நீங்கள்  முடிவெடுத்திறுகிறீர்கள் என்கிறாரோ இவர் என எண்ணாதிருக்க இயலவில்லை இவளால்.

மேற்கொண்டு உரையாடலை தொடராமல் ஒரு கணம் நிறுத்தினான் அவன்….

இவளுக்கு இதற்கு எப்பதிலும் பகர விருப்பமில்லை….. மனதால் எவ்வாறு இம் மணத்தை இவள் ஒத்துக் கொள்ளவதாம்?

 அவன் இவள் பதிலை எதிர்பர்த்திருக்கவில்லையோ, தன் விளக்கத்தை தொடர்ந்தான்…. “அனைத்து வகையிலும் அந்நிய தேசமான அதை நீர் நேரில் கண்டு திரும்பினால்…. உமக்கு உமது சகோதரியை அங்கு அனுப்பிய பின் நிர்பயமும் நிம்மதியுமாயும் இருக்கும்….

 அஃதோடு எம்தேசம் பற்றியும் பாண்டிய குடிகள், அவர்தம் பழக்க வழக்கங்கள், எமது ஆட்சி மற்றும் மன்னர்  குறித்தும் நீர் நேரில் கண்டதை உமது சகோதரிக்கு திருமணத்திற்கு முன்னம் சொல்லி வைத்தீரானால் இங்கிருந்து கிளம்பும் தருணம் அவரும் சஞ்சலமின்றி கிளம்ப இயலும்….” வெகு சதாரணம் போல் அவன் காரணம் பகர

அடியற்று விழுந்தாள் அவள் மனதளவில்……பெண்ணாகிய இவள் சஞ்சலத்தை, விசனத்தை விபரீத அச்சத்தை இவள் தாய் கூட முழுபங்கும் உணர்ந்ததாய் இவளுக்கு தோன்றவில்லை….. ஒருவேளை புரிந்து கொண்டாரோ?? ஆனால் இவளிடம் அவர் ஒப்பவில்லை….

“விவாகத்திற்கு பின் மணவாளன் வீடு செல்லும் எப்பெண்ணுக்கும் உள்ள கிலேசமிது ருயம்மா….உன் தந்தையை மணக்கும் போது எனக்கும்தான் இருந்தது…..” என முடித்துவிட்டார்.

ஆட்சி பரிபாலினைக்கு இலகுவாகவும் ஏற்புடையதாகவும் இருக்குமென காகதீய தேசத்தை 77 பாளையமாய் பிரித்து ஒவ்வொன்றை நிர்வகிக்கவும்  ஒரு பத்மநாயக்கரை நியமித்திருக்கிறார் இவளது தந்தை…. அப்படி ஒரு பாளையக்காரருடனோ அல்லது அவரது வாரிசுடனோதான் இவளுக்கு மணம் முடிக்கும் எண்ணம் இருந்து வந்தது இவள் வளர்ந்து வந்த காலத்தில்……. அவ்வாறு இவள் தேசத்திற்குள் வேறு ஒரு பாளையம் செல்ல நேர்ந்திருந்தால் இவளது தாயின் வார்த்தைகள் இவளுக்கு போதுமாயிருக்கும்……..

வாழ்நாளில் சில முறையாவது தாய் வீடு சென்று வரவும்…..தாய் தந்தையர் இவள் வசிப்பிடம் வந்து செல்லவும் அதில் வாய்ப்பிருந்திருக்கும்…..இஃதானால் அப்படியா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.