(Reading time: 21 - 42 minutes)

"ராஜா உன்னோட கல்யாண தேதியை முடிவு செஞ்சாச்சுப்பா.."தன் அன்னை சொன்னதும் ஒரு நொடி அதிர்ந்தான் துஷ்யந்த்..

"ஆமாப்பா.. இன்னும் 25 நாளில் உனக்கு கல்யாணம்... நீ எப்படி சொன்னியோ அப்படியே செய்யலாம்னு பொண்ணு வீட்ல சொல்லிட்டேன்ப்பா... அன்னைக்கு போட்டோல காமிச்சேனே அந்த பொண்ணு..." கோமதி முழுதாக சொல்லி முடிக்கவில்லை... அதற்குள் துஷ்யந்தோ...

"அம்மா... இப்போ நீங்க பேசற எதையும் கேக்க, எனக்கு நேரமில்லை... நான் இன்னும் அரைமணி நேரத்துல டெல்லி ஃப்ளைட்ட பிடிச்சாகனும்... அதனால நான் திரும்பி வந்ததும் எல்லாம் பேசிக்கலாம்... நான் 2,3 நாளில் வந்துடுவேன்... பத்திரமா இருங்க...

அத்தை... அம்மாவை பத்திரமா பார்த்துக்கோங்க..." என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

துஷ்யந்த் வெளியே சென்று காரை எடுத்துக் கொண்டு புறப்படும் வரை வாசலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் கோமதி.

"பார்த்தீங்களா அண்ணி.. கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சதும் அவன் கிளம்பிட்டத..." என்று கோமதியிடம் குறைப்பட்டுக் கொண்டார் விஜயலஷ்மி...

"இல்ல விஜி.. உண்மையிலேயே அவசரமா இருக்கும்... இல்லன்னா நின்னு கேட்டுட்டு போயிருப்பான்..."

"இல்ல அண்ணி... கல்யாணப் பேச்சை எடுத்ததால தான் உடனே கிளம்பிட்டான்... இல்லன்னா பொறுமையா பேசிட்டு போயிருப்பான்... இவனை நம்பி, நாம கல்யாணத்தை முடிவுப் பண்ணிட்டோம்...

எனக்கு இந்த கல்யாணம் நடக்குமான்னே பயமாயிருக்கு அண்ணி..."

"ஏன் விஜி இப்படி சொல்ற... ராஜா கல்யாணம் நல்லபடியா நடக்கும்... எனக்கு அந்த நம்பிக்கையிருக்கு..."

"இல்ல அண்ணி... அந்த குடியை கெடுத்தவ ஏதாவது செஞ்சு கல்யாணத்தை நிறுத்திடுவாளோன்னு பயமா இருக்கு அண்ணி.."

"என்ன பேசுற விஜி... அந்த பொண்ணு சொல்லி தான் ராஜா கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான்னு தெரியுமில்ல... அப்புறம் ஏன் பயப்பட்ற..."

"ஏன் தெரியாம அண்ணி... நீங்க அந்த பொண்ணுக்கிட்ட கெஞ்சினதும் அதுக்கப்புறம் அவ ராஜாவை கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சதும் தான் எனக்கு தெரியுமே... ஆனா அந்த கேடுகெட்டவ, இப்போ ராஜாவை சம்மதிக்க வச்சிட்டு... அப்புறம் ஏதாவது சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுவாளோன்னு எனக்கு பயமா இருக்கு அண்ணி..."

"நம்ம சொல்லி ஒத்துக்காதவன் அந்த பொண்ணு சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான்... அப்படி சம்மதிக்க வச்சவ, திரும்ப அவன் மனசை மாத்துவான்னு எனக்கு தோனல... அவ எப்படியோ எனக்கு தெரியாது..

ஆனா என்னோட ராஜாவை பத்தி எனக்கு தெரியும்... யாருக்கும் அவன் பொய்யான நம்பிக்கையை கொடுக்க மாட்டான்... என்னத்தான் அந்த பொண்ணுக்காக சம்மதிச்சாலும், யோசிக்காம முடிவெடுத்திருக்க மாட்டான்... அதனால நீ அநாவசியமா பயப்படாத...

ராஜாவும்,செல்வாவும் வர வரைக்கும் கல்யாண வேலையை நிறுத்தி வைக்க முடியாது... அதுக்கு நமக்கு நேரமுமில்ல... அதனால மேனேஜர்க்கு போன் பண்ணி கல்யாண பத்திரிகை அடிக்கிற விஷயமா நான் பேசனும்னு வர சொன்னேன்னு சொல்லு... நானும் செல்வாவுக்கு போன் பண்ணி, எத்தனை பத்திரிகை அடிக்கனும்னு கேட்டு வைக்கிறேன்..." என்று சொல்லிவிட்டு கோமதி அவர் அறைக்குப் போய்விட்டார்.

ஒருவேளை கோமதி போல் எதுவும் விஷயம் தெரியாமல் இருந்திருந்தாள் இவரும் இவ்வளவு பயப்பட்டிருக்க மாட்டார்... ஆனால் ஜோசியர் இவரிடம் தானே எல்லாம் சொல்லியிருந்தார்... எங்கே அவர் சொன்னது நடந்திடுமோ என்ற பயமே இவரை அப்படி யோசிக்க வைக்கிறது...

ஜோசியரிடம் இவர் சென்ற போது அவர் கூறியதை கேட்ட விஜி... கோமதிக்கு எதுவும் தெரியக் கூடாது என்று நினைத்தார்... அந்த ஜோசியரிடம் வேறு மாதிரியாக சொல்ல சொன்னார்... அந்த ஜோசியரோ, என்னால எதையும் மறைச்சு சொல்ல முடியாது... வேணும்னா என்னோட அஸிஸ்டென்ட்டை அனுப்புறேன்... அவன் வந்து எல்லாம் சொல்லுவான் என்று அனுப்பி வைத்தார்... அவரும் நல்லவிதமாக எல்லாம் சொல்லி கல்யாண தேதியையும் குறித்துக் கொடுத்தார்...

இவ்வளவும் தைரியமாக, தனியாக நின்று கோமதிக்கு தெரியாமல் எல்லாம் முடிவையும் எடுத்தார் விஜி... இருந்தும் துஷ்யந்தின் வாழ்க்கையில் அந்த ஜோசியர் சொன்னது போல் நடந்திடுமோ என்று அவருக்கு பயமாக தான் இருந்தது...

"அம்மா... இந்த கல்யாணம் நல்லபடியா நடந்தா... செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து உனக்கு விளக்கேத்துறேன்..." என்று ஜோசியர் சொன்னதிலிருந்து மூன்றாவது கடவுளாக துர்க்கையம்மனுக்கும் ஒரு வேண்டுதலை வைத்தார் விஜயலஷ்மி.

சென்னையிலிருந்து கிளம்பிய விமானம் டெல்லியில் தரையிறங்கியது... அந்த விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த துஷ்யந்த், தன்னை அழைத்துப் போக வந்த காரில் ஏறிக் கொண்டான்... அந்த கார் அவன் தங்கப் போகும் ஹோட்டலுக்கு விரைந்தது... அப்போது தான் ஞாபகம் வந்தவனாக.. தன்னுடைய மொபைலை ஃப்ளைட் மோடிலிருந்து நார்மலுக்கு மோடுக்கு மாற்றினான்... அதற்காக காத்திருந்தது போல் அவன் மொபைலிலிருந்து அழைப்பு வந்தது...

உயிரே.. உயிரே.. வந்து..

என்னோடு கலந்து விடு..

உயிரே.. உயிரே.. என்னை..

உன்னோடு கலந்து விடு..

நினைவே.. நினைவே.. வந்து..

நெஞ்சோடு கலந்து விடு..

நிலவே.. நிலவே.. உன்..

விண்ணோடு கலந்து விடு..

என்ற பாடல் ஒலிக்கும் போதே, யார் அவனை அழைக்கிறார் என்று துஷ்யந்திற்கு தெரிந்திருக்கும்... ஏனென்றால் அவர் அழைத்தால் மட்டுமே அந்த பாடல் கேட்கும் படி அவன் மொபைலில் அமைத்து வைத்திருந்தான்... இருந்தாலும்  தன்னுடைய மொபைலின் திரையை பார்த்தான்... அதில் அழைப்பவரின் பெயர் தெரிந்தது... அதைப்பார்த்ததும் இரண்டு நாட்கள் வேலைப் பளுவில் ஏற்பட்ட டென்ஷன், அசதி எல்லாம் காணாமல் போனது போல் இருந்தது... தன் அன்னை கூறிய விஷயத்தால் ஏற்பட்ட இறுக்கமும் காணாமல் போனது, அந்த இறுக்கத்தால் தொலைந்துப் போயிருந்த புன்னகை தானாக உதட்டில் வந்து ஒட்டிக் கொண்டது.

உன் நேசமதே என் சுவாசமாய்...!!

மாறிப் போன விந்தையை...

நானே அறியாத போது...!!

நீ மட்டும் எப்படி அறிந்திருக்க முடியும்...

நீ அதை அறியாததால் தானோ...

என்னவோ...!!

என் சுவாசம்... (உன் நேசம்)

அடிக்கடி தடைபடுகிறதோ...!!

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 02

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.