(Reading time: 13 - 25 minutes)

02. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

யிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோவிலில் இருந்து வெளியே வந்த நர்மதாவும், யமுனாவும் அருகில் உள்ள மாதவ பெருமாள் கோவிலுக்கும் சென்று பெருமாளை தரிசித்துவிட்டு சிறிது நேரம் அங்கேயும் உட்கார்ந்தனர்...

அப்போது நர்மதா அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசைக் கேட்டது, யாரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருக்கிறது என்று நர்மதா எடுத்துப் பார்த்தாள்...

"யாரு மெசேஜ் பண்ணியிருக்கா நர்மதா..??"

"இளங்கோ அண்ணா தான் மெசேஜ் பண்ணியிருக்காரு... நம்ம ஃபேவரட் ரைட்டரோட அடுத்த புக் பப்ளிஷ் ஆயிடுச்சாம்.... அதான் நம்மல வர சொல்லியிருக்காரு..."

"ஓ... சரி அதனால என்ன..?? புக் ஷாப்ல போய் நாம வாங்கிக்கலாம், சும்மா உன்னோட அண்ணன் புக் ஃப்ரியா கொடுக்கறார்னு அதை நாம வாங்கிக்கிறதா..??"

"ஹே நான் என்ன ஓசியல கிடைக்கிறதுக்கு அலையறவளா...?? இளங்கோ அண்ணா சொல்றதை நீயும் கேக்கற இல்ல... அப்புறம் என்னை என்ன பண்ண சொல்ற...??"

"சரி நர்மதா... நம்ம ரெண்டுப்பேருக்கும் சேர்த்து ஒரு புக் கொடுத்தா பரவாயில்ல, எதுக்கு தனி தனியா கொடுக்கனும்..??"

"சரி டி... இந்த தடவை நான் இளங்கோ அண்ணாக்கிட்ட  அதைப் பத்தி பேசறேன்.. சரி நாம போலாமா..??"

"இன்னிக்கு ஸ்கூல் சீக்கிரம் முடிஞ்சிடும், ஹாஸ்டல்க்கு போனா கொஞ்சம் துணி துவைக்கலாம், ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீயா இருக்கலாம்னு நினைச்சேன்... அது பொறுக்காதே உனக்கும், உங்க அண்ணனுக்கும்..." என்று யமுனா சலித்துக் கொண்டாள்.

"சரி டி... நான் உன்னை இன்னிக்கு ஆட்டோல கூட்டிட்டுப் போறேன் வா..." என்று அவளை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாள்... இருவரும் கோவிலில் இருந்து வெளியே வந்து ஒரு ஆட்டோப் பிடித்து சென்றனர்.

ன்னும் சிறிது நேரத்தில் ஒரு முக்கியமான மீட்டிங்கிற்கு செல்ல வேண்டியிருந்ததால் அவசரமாக அந்த ஹோட்டல் அறையில் கிளம்பிக் கொண்டிருந்தான் செல்வா... அப்போது அவன் அலைபேசியின் அழைப்பு மணி அடிக்க... யாரென்று எடுத்துப் பார்த்தான்... அவன் அன்னை தான் அழைக்கிறார் என்றதும் அந்த அழைப்பை ஏற்றான்...

"ஹலோ அம்மா... எப்படியிருக்கீங்க..?? ஐ மிஸ் யூ ம்மா.."

"ஏண்டா நான் போன் பண்ணா தான் மிஸ் யூ ம்மான்னு சொல்லுவ, இல்லன்னா ஒரு போன் பேசறது கிடையாது... ஏண்டா அண்ணனும், தம்பியும் என்னடா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க... எப்பப் பார்த்தாலும் வேலை, வெளியூர்ன்னே இருக்கீங்க... இங்க வயசான ரெண்டுப்பேர் இருக்கோம்னு உங்களுக்கு கவலை இருக்கா... காலாகாலத்துல ரெண்டுப்பேருக்கும் ஒரு கால்கட்டைப் போடுவோம்னு பார்த்தா... ரெண்டுப்பேரும் ஆஃபிஸையே கட்டிக்கிட்டு அழறீங்க..." என்று புலம்பி தள்ளினார் கோமதி.

"அம்மா கொஞ்சம் நிறுத்தி பேசுங்கம்மா... உடம்பு என்னத்துக்கு ஆகறது... அம்மா நான் என்ன பூனாக்கு ஜாலி ட்ரிப்பா வந்திருக்கேன்... புது ஆஃபிஸ் தொடங்குற விஷயமா வந்திருக்கேன்ம்மா... இந்த ஒரு மாசமா நல்ல சாப்பாடு கூட சாப்பிட்றதில்ல தெரியுமா..?? எப்ப வந்து அத்தையோட சமையலை ஒரு பிடி பிடிப்போமோன்னு காத்திருக்கேன்ம்மா... நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க..??"

"அப்படி சரியா சாப்பிடக் கூட நேரமில்லாம, இப்படி கஷ்ட்ப்படனும்னு என்ன இருக்கு செல்வா..?? இப்போ நம்மக்கிட்ட இருக்கறதே போதாதாப்பா..??"

"அம்மா இது இன்னும் பணம் சம்பாதிக்கிறதுக்கான முயற்சி இல்ல... நம்ம DR க்ரூப்ஸை இந்த நிலைமைக்கு கொண்டு வர அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டுச்சு... அந்த நிலைமையை நம்ம தக்க வச்சுக்க இப்படி உழைக்க வேண்டியிருக்கும்மா..."

"என்னவோ சொல்றீங்க... எனக்கு இதெல்லாம் என்ன புரியுது... எனக்கு என்னோட ரெண்டு பசங்களும் நல்லா இருக்கனும்.... அது எனக்கு போதும்...

செல்வா... நான் எதுக்கு போன் பண்ணேன்னா... உன்னோட அண்ணாக்கு கல்யாணம் முடிவாயிடுச்சுடா.. இன்னும் 25 நாளில் கல்யாணத்துக்கு தேதி குறிச்சாச்சு.."

"என்னம்மா சொல்றீங்க, நான் ஒரு மாசமா வீட்ல இல்ல தான்... ஆனா அதுக்குள்ள அதிசயம் எல்லாம் நடந்திருக்கு... அண்ணன் எப்படிம்மா கல்யாணத்துக்கு சம்மதிச்சுது... நேத்து டெல்லிக்குப் போறதைப் பத்தி எனக்கு போன் பண்ணி சொல்லுச்சே... அப்பக்கூட இதப்பத்தி என்கிட்ட சொல்லலையே..??"

"எப்படியோ அவனை ஒத்துக்க வச்சிட்டேண்டா.. அவனைப் பத்தி தெரியாதா..?? இந்த கல்யாணத்துக்கு அவன் ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்... இதுல அவன் உன்கிட்ட அதைப்பத்தி பேசுவான்னெல்லாம் எதிர்பார்க்க முடியாது... இங்கப் பாரு செல்வா, கல்யாணத்தை சிம்பிளா தான் பண்ணப் போறோம்.... இருந்தாலும் வேலையெல்லாம் நிறைய இருக்கு... நீங்க ரெண்டுப்பேருமே வீட்ல இல்ல...

அப்படியே ராஜா இருந்தாலும் இந்த கல்யாண வேலையெல்லாம் கவனிப்பான்னு எதிர்பார்க்க முடியாது... அதனால சீக்கிரமா நீ கிளம்பி வாடா.. அப்புறம் கல்யாணப் பத்திரிகை அடிக்கனும்... எத்தனைப் பேருக்குன்னு நீ சொன்னா, நம்ம மேனேஜர்க்கிட்ட சொல்லி பத்திரிகை அடிக்க சொல்லிடுவேண்டா..."

"அம்மா... நான் இன்னும் ரெண்டு நாளில் வந்திடுவேன்ம்மா... அண்ணாக் கூட ரெண்டு நாளில் வந்திடும்... ரெண்டு நாள் வெய்ட் பண்ணுங்க...  நானே வந்து கல்யாண வேலையெல்லாம் முன்ன இருந்து கவனிக்கிறேன்... பத்திரிகை எவ்வளவு அடிக்கனும்னு அண்ணன் கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்... அதனால நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க ம்மா... இந்த கல்யாணத்தை நாம சூப்பரா பண்ணிடலாம்..."

"ம்ம் சரிப்பா... நீ வந்ததுமே கல்யாண வேலையை ஆரம்பிக்கலாம்..."

"அம்மா இன்னொரு விஷயம்.. பொண்ணு வீட்ல அண்ணனைப் பத்தி எல்லா விஷயமும் சொல்லிட்டீங்கல்ல.." செல்வா அப்படி கேட்டதும் முதலில் கோமதி அதிர்ச்சியானார்... பின் கொஞ்சம் சுதாரித்து...

"என்னப்பா விஷயம்.." என்றுக் கேட்டார்.

"அதான்ம்மா அந்த சாரு விஷயம்... அந்த சாருக்கூட அண்ணனுக்கு கல்யாணம் பேசினது, அந்த கல்யாணம் நின்னுப் போனது... அதுக்கப்புறம் நடந்தது.. எல்லாம் சொல்ல வேண்டாமா..??" செல்வா சொல்லிக் கொண்டிருக்க, கோமதி அமைதியாக இருந்தார்.

"நீங்க அமைதியா இருக்கறதிலேயே தெரியுது ம்மா, நீங்க எதுவும் சொல்லலன்னு... இதையெல்லாம் மறைக்கக் கூடாதும்மா... பின்னாடி இதெல்லாம் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா, அவங்க மேரேஜ் லைஃப் பாதிக்கப்படும்... ஏற்கனவே அண்ணன் கஷ்ட்ப்பட்டதெல்லாம் போதாதாம்மா... அண்ணன் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்க வேண்டாமா..??"

"உன்னோட அண்ணன் சந்தோஷமா வாழுவான்... எனக்கு நம்பிக்கை இருக்குடா..  நீ எதுவும் கவலைப்படாத... நான் அவங்க வீட்ல அந்த சாருவைப் பத்தி சொல்லிட்றேன் சரியா..??"

"சரிம்மா... எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு... நான் வீட்டுக்கு வந்ததும் எல்லாம் பேசிக்கலாம்... அத்தையையும் கேட்டதா சொல்லுங்க..." என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.