(Reading time: 13 - 25 minutes)

கோமதி கடைசி வார்த்தை பேசிக் கொண்டிருக்கும் போதே கோமதியின் அறைக்கு வந்தார் விஜயலஷ்மி... அப்போது தான் போன் பேசிவிட்டு அலைபேசியை அணைத்தார் கோமதி...

"என்ன அண்ணி... செல்வா என்ன சொல்றான்...?? எப்போ வரானாம்...?? "

"ரெண்டு நாளில் வந்துடுவானாம் விஜி... வந்ததுக்குப் பிறகே பத்திரிகை அடிக்க கொடுக்கலாம்னு சொல்றான்... அதனால் மேனேஜரை வரவேண்டாம்னு சொல்லிடும்மா..."

"சரி அண்ணி சொல்றேன்... அப்புறம் இந்த கல்யாண விஷயத்தை சொன்னதும் செல்வா என்ன சொன்னான் அண்ணி... ??"

"அவனோட அண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதுல செல்வாக்கு சந்தோஷம் தான்... ஆனா எல்லா விஷயத்தையும் பொண்ணு வீட்ல சொல்லிட்டீங்களான்னு கேட்டான்..." என்று கோமதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே விஜியும் அதிர்ந்தார்...

"ஹே... ஏன் இப்படி அதிர்ச்சியாகற...?? திடிர்னு செல்வா சொன்னப்பவும் நானும் இப்படி தான் அதிர்ச்சியானேன்... அவன் சொன்னது அந்த சாருவைப் பத்தி... கங்கா விஷயம் எதுவும் செல்வாவுக்கு தெரியாதுன்னு உனக்கு தெரியுமில்ல... இனி எப்பவும் தெரியவும் கூடாது... செல்வாவுக்கு அவனோட அண்ணன் மேல நிறைய மரியாதை இருக்கு.... அதுக்கு தான் சொல்றேன்... நீயும் அந்த கங்காவைப் பத்தி அவன் முன்னாடி எதுவும் பேசாதே.. சரியா..??"

"நான் ஏன் அண்ணி அந்த கேடு கெட்டவள பத்தி பேசப் போறேன்... அதெல்லாம் பேச மாட்டேன்... சரி நீங்க அந்த சாரு விஷயத்தை பொண்ணு வீட்ல சொல்லப் போறீங்களா..??"

"கல்யாணம் பேசியிருந்ததையும், அது நின்னுப் போனதையும் பத்தி மட்டும் சொல்லுவோம்... வேறெதும் சொல்ல வேண்டாம்... என்ன..??"

"ம்ம் சரி..." என்ற விஜி பின் ஏதோ சொல்ல வந்து தயங்கி நின்றார்.

"என்ன விஜி... வேற ஏதாவது சொல்லனுமா..??"

"அண்ணி அந்த சாரு விஷயத்தையே சொல்லாம இருக்கறது தப்புன்னு செல்வா சொல்றான்... இதுல நம்ம இந்த கங்கா விஷயத்தை மறைக்கிறது எனக்கு என்னமோ சரியாப்படல அண்ணி... அதால கல்யாணம் நின்னுடுமோன்னு பயமாவும் இருக்கு..." விஜி முழுதாக சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் கோமதி குறுக்கிட்டு...

"அதுக்காக அந்த விஷயத்தை பொண்ணு வீட்ல சொல்லலாம்னு சொல்றியா..?? அப்போ தான் நீ பயப்பட்ற மாதிரி கல்யாணம் நிக்கும்... இங்கப்பாரு விஜி... நான் முன்ன சொன்னது தான்... என் பையனைப் பத்தி எனக்கு தெரியும்... அவன் நல்லா யோசிச்சு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பான்... எனக்கு நம்பிக்கை இருக்கு, அவனுக்கு நல்லப் படியா கல்யாணம் நடக்கும்...

ஆமாம் உனக்கு திடிர்னு என்னாச்சு... நான் ஏதாவது குழப்பத்துல இருந்தாலே, நீ தான் அதை தீத்து வைக்கிற மாதிரி பேசுவ... இப்போ என்னன்னா நீயே இப்படி கவலைப்பட்ற..  மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம, கல்யாண வேலையை கவனி..." என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார் கோமதி...

விஜியும் இயல்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்... ஆனால் அந்த ஜோசியர் சொன்னது மனதை அரித்துக் கொண்டே இருந்தது... இந்த திருமணம் நல்லப்படியாக நடந்து முடியும் வரை அந்த விஷயம் அவர் மனதை அழுத்திக் கொண்டு தான் இருக்கும்... இதை கோமதியிடமும் சொல்ல முடியாது... தன் மகனுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்பது அவரின் நெடுநாள் ஆசை... இதைப்பற்றி கூறினாள் கோமதியும் இந்த விஷயத்தால் கவலைக் கொள்வார்... அது அவரின் உடல்நிலைக்கு நல்லதில்லை....

செல்வாவிடமும் கூற முடியாது..  அப்படி கூறினாள், "அட போங்க அத்தை... இந்த காலத்துல ஜோசியத்தெல்லாம் நம்பிக்கிட்டு..." என்று அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வான், அதனால் இந்த விஷயத்தை மனதிலேயே போட்டு புழுங்கி கொண்டிருந்தார் விஜி...

எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ விஜியின் வயிற்றில் ஒரு குழந்தை என்பது பிறக்காமலே போய்விட்டது... திருமணமான நான்கு வருடம் குழந்தைக்காக எதிர்பார்த்தே போய்விட்டது... பின் மருத்துவரை பார்க்கலாம் என்று கணவரிடம் கேட்ட போது, அதெல்லாம நம்ம ரெண்டுப்பேருக்கும் எந்த குறையும் இருக்காது விஜி.. இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போம் என்று சமாதானப்படுத்திவிடுவார்...

அப்போது தான் கோமதிக்கு செல்வா பிறந்தான்... "அக்காவுக்கு ரொம்ப உடம்பு முடியல, அதனால மாமா நம்மல அங்கேயே வந்து இருக்க சொல்றார்.." என்று விஜியை அவர் கணவர் அழைத்து வந்தார்... அன்றிலிருந்து கைக்குழந்தையான செல்வாவைப் பார்க்கவும், கோமதியை கவனித்துக் கொள்ளவும் என்று அந்த குடும்பத்தில் ஒன்றிப் போனார் விஜி...

அவ்வப்போது தனக்கென்று ஒரு குழந்தையில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும்.... செல்வாவைப் பார்க்கும் போது அந்த ஏக்கம் மறைந்துவிடும்... விஜி இந்த வீட்டிற்கு வரும்போது துஷ்யந்திற்கு ஐந்து வயது... செல்வா அளவிற்கு துஷ்யந்தோடு விஜி ஒன்றிப் போகவில்லையென்றாலும், துஷ்யந்தின் தேவைகளையும் அவ்வப்போது கவனித்துக் கொண்டதால் துஷ்யந்த் மீதும் அவருக்கு பாசம் இருக்கிறது...

அதேபோல் இந்த குடும்பத்தில் ஒருத்தியாகத் தான் இவரை எல்லோரும் நினைக்கிறார்கள்... அதுவும் இவரின் கணவர் இறந்து மூன்று வருடங்களாகிறது... இப்போதும் இவரை முக்கியமானவளாக தான் பார்க்கிறார்கள்... இவருக்கென்று இந்த குடும்பத்தைத் தவிர வேறு ஆறுதலும் இல்லை... அதனால் கடவுளிடம் இவரின் வேண்டுதல் எப்போதும் இந்த குடும்பத்திற்காக தான் இருக்கும்...

இந்தக் குடும்பத்தில் சில வருடங்களாகவே சில பிரச்சனைகளால் எல்லோர் மனதிலும் சஞ்சலம் தான்... துஷ்யந்தின் திருமணம் தான் நெடுநாள் கழித்து இந்த வீட்டில் சந்தோஷத்தைக் கொண்டு வரப்போகிறது... ஆனால் ஜோசியர் சொன்னது பலித்துவிட்டால், திரும்பவும் எல்லோர் மனதிலும் சஞ்சலம் தான்... அதிலும் கோமதி இடிந்தே போய்விடுவார்... இதெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது விஜியால் இயல்பாக இருக்க முடியவில்லை... அவரால் இப்போது செய்ய முடிந்த ஒரே காரியம், கடவுளிடம் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வது மட்டும் தான்... அதை அவர் செய்துக் கொண்டிருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.