(Reading time: 13 - 25 minutes)

அமேலியா - 08 - சிவாஜிதாசன்

Ameliya

ல்ல முரட்டு தேகமும் எதிரியை அஞ்ச வைக்கும் பார்வையும் கொண்டு தன்னை விழிகளால் துளைத்துக்கொண்டிருந்த போலீஸ்காரரைக் கண்டு அமேலியாவின்  உடலில் நடுக்கம் உண்டானது. உடையில் வேற்றுமை இருந்தாலும் ஈராக்கில் தங்களை நடுங்க வைக்கும் அமெரிக்க ராணுவ வீரனைப் போலவே இருந்தது அவருடைய  தோற்றம். 

அமேலியாவை நோக்கி மெல்ல நகர்ந்து வந்தார் போலீஸ். அவரது கண்கள் இமைக்காமல் அமேலியாவையே பார்த்துக்கொண்டிருந்தன. அமேலியா மெல்ல அந்த இடத்தை விட்டு அகன்றாள்  போலீஸ்காரர் முன்னேறினார்.  அமேலியா பின்னால் திரும்பிப் பார்த்தவாறு தன் நடையின் வேகத்தைக் கூட்டினாள். போலீஸ்காரருக்கு சந்தேகம் அதிகமானது  அவரது நடையில் வேகம் தொனித்தது. அமேலியா பயந்து மெல்ல ஓடினாள். 

"ஹலோ மேடம்! நில்லுங்க!"

அமேலியா நிற்கவில்லை

போலீஸ்காரர் துரத்தினார் " நில்லுங்கள்! நில்லுங்கள் !"

அமேலியா வேகமாக ஓடினாள். அவளது இதயத்துடிப்பு எகிறியது. ஆனால், போலீஸ்காரரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அமேலியா வசமாக அவரிடம் சிக்கிக்கொண்டாள்.

ஒரு கையில் பர்ஸும் மறு கையில் பிளாஸ்டிக் பை மற்றும் ரொட்டிப் பொட்டலத்துடனும் நின்றுகொண்டிருந்த  அமேலியாவை பார்வையாலேயே துளைத்தெடுத்த அவர், " யார் நீங்கள்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? உங்களின் முகவரி என்ன? எதற்காக நான் நிற்க சொல்லியும் நீங்கள் ஓடி வந்தீர்கள்?"  என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

அமேலியா நடுங்கினாள். அவர் கேட்டது,  பேசியது எதுவும் புரியாமல், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திரு திரு வென்று முழித்துக்கொண்டு நின்றாள்.

அப்போது சாலையில்  இரண்டு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. உடனே, போலீஸ்காரரின் கவனம் அந்தப் பக்கம் திரும்பியது. அவர் அமேலியாவிடம்,  "இங்கயே நில்" என்று சொல்லிவிட்டு விபத்து நடந்த இடத்துக்கு சென்றார்.  இதுதான் சமயம் என்பதை உணர்ந்த அமேலியா அவ்விடத்தை விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினாள். வெகு தூரம் ஓடி வந்தவளுக்கு மூச்சு வாங்கியது. களைப்பு மேலிட ஓரிடத்தில் நின்றாள்.

வானில் விண் பூக்கள் மலர்ந்துகொண்டே இருந்தன. வெடிகள் வெடித்தபடியே இருந்தன. அதை வேடிக்கை பார்ப்பவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் தங்கள் வேலையை செய்துகொண்டிருந்தார்கள். அமேலியா விண் பூக்களை ஆச்சர்யத்தோடு நோக்கிக்கொண்டிருந்தாள்.

அப்போது, அமேலியாவின் பின்புறம் ஓர் உருவம் வந்து நின்றதைக்  கூட அவள் கவனிக்கவில்லை. அமேலியாவின் தோள்களில் மெல்ல கை வைத்தது அந்த உருவம். மிரட்சியோடு திரும்பிப் பார்த்தாள் அமேலியா. பேய் போன்று மிகவும் கொடூரமாக இருந்த அந்த உருவத்தைப் பார்த்து பயந்து அலறினாள். அந்த முகத்தை மீண்டும் பார்க்க விரும்பாமல் தன் கண்களை இறுக மூடி அழுதாள்.

" ஹேய்! எதற்கு அழுகிறாய்? ஹாப்பி ஹாலோவீன் " என அந்த உருவம் ஆறுதல்படுத்தியது. அதற்குள் அமேலியாவை சூழ்ந்து கொண்ட சிறு பிள்ளைகள், " ஹாப்பி ஹாலோவீன்!" என கத்தினர்.

அமேலியா மெல்ல கண்களைத் திறந்தாள். அழகான  சிறு பிள்ளைகள் அவளைச்  சுற்றி  மகிழ்ச்சியாக ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர். சிலரோ பேய், பிசாசு போல மிரளவைக்கும் வேஷங்களில் சென்றுகொண்டிருந்தார்கள்.

 அமேலியாவைப் பயமுறுத்திய பெண் தன் வேஷத்தைக் கலைத்து, " ரொம்ப பயமுறுத்திட்டேனா? உன்னை வேதனைப்படுத்தியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்"  என்று  அமேலியாவை சாந்தப்படுத்தினாள்.

அமேலியாவிற்கு ஒன்றும் புரியவில்லை; அங்கிருந்து செல்ல விரும்பினாள். அப்பொழுது ஒரு சிறுமி அமேலியாவின் கையைப் பிடித்து தன்னருகே இழுத்து .தன்னிடம் இருந்த மேக்கப் பாக்ஸில் சில பொருள்களை எடுத்து அமேலியாவின் முகத்தில் ஏதோ வரைந்தாள். பின்பு எல்லோரும் அங்கிருந்து குதூகலமாக ஓடினர்.

அமேலியா நடந்தவற்றை நினைத்து மிகுந்த குழப்பம் அடைந்தாள். எதற்காக இவர்கள் விசித்திரமாக வேஷமிட்டு வேடிக்கையாக நடந்துகொள்கிறார்கள். இவர்களின் பண்டிகைகள் இப்படித்தான் இருக்குமோ? என்று எண்ணிக்கொண்டாள். 

 இனி எங்கே போவது என்றறியாமல் தன் கையில் இருந்த பர்ஸைத் திறந்து பார்த்தாள். அதில் சில நூறு டாலர்களும் சில  விசிட்டிங் கார்டுகளும் இருந்தன. அதில் ஒன்றை எடுத்து பார்த்தவள், அதில் என்ன எழுதியிருக்கிறது என்று புரியாமல் சாலையில் செல்வோரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, அவ்வழியாக நடந்து வந்த டாக்ஸி டிரைவர் ஒருவர்,  அமேலியா நின்றிருந்த இடத்தில்,  சாலையின் ஓரமாய் நிறுத்தப்பட்டிருந்த தன் டாக்ஸியில் ஏறினார். அவர் அங்கிருந்து செல்ல எத்தனிக்கையில் அமேலியா கையில் விசிட்டிங் கார்டை வைத்துக்கொண்டு திரு திருவென முழித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவளை அணுகினார்.

அமேலியாவிடம், " எங்கே போகணும்?"  என்று கேட்டார். அமேலியா பதிலேதும் சொல்லவில்லை. அவள் கையிலிருந்த கார்டை வாங்கிப் பார்த்த அவர், " ஓ, இந்த இடத்துக்குப் போகணுமா? இது கொஞ்சம் தூரம் அதிகம்.  100 டாலர் ஆகும், பரவாயில்லையா ?"  என்று தன்மையாகக் கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.