(Reading time: 16 - 32 minutes)

 04. தவமின்றி கிடைத்த வரமே - லேகா

Thavamindri kidaitha varame 

வ்வொரு நாளும் புதியதோர் எதிர்பார்ப்பை அனைவர் மனதிலும் புகுத்தியே துவங்குகிறது. அவ்வாறே இன்றைய நாளும் தொடங்கியது. இன்று விடுமுறை தினமாதலால் பலரது எண்ணம் மாறுபட்டாலும், அதன் அடிப்படை ஒன்று தான் – ‘இன்று ஓய்வெடுக்க வேண்டும்’. சிலருக்கு ஓய்வு என்பது தொலைக்காட்சி, சிலருக்கு நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் வெளியில் செல்வது, சிலருக்கு புத்தகம், சிலருக்கு ஓய்வென்பது வீட்டு வேலைகளிலிருந்து விடுதலை, இன்னும் சிலருக்கு அது தூக்கம். இவ்வாறு செயல்கள் மாறுபட்டாலும் அவை ஒன்றையே குறிக்கின்றன. ஆனால், இன்றும் கூட ஒருவர் பரபரப்புடன் காணப்பட்டார். அவர், நமது வர்ஷினி.

வர்ஷினியின் பரபரப்பிற்கான காரணம், இன்று ஞாயிற்றுக்கிழமை. இன்றோடு யாதவை சந்தித்து ஒரு வாரமாகிற்று. தன்னையே புதியதாய் அவள் கண்டறிந்த நாட்கள் அவை.

எங்கே சென்றாலும் யாதவ் இருக்கின்றானா என்று எதிர்பார்ப்புடன் ப்ரியா அறியாமல் தேடுவது, அவனைக் காண மாட்டோமா என்ற தன் ஏக்கத்தைப் யாரும் அறியாமல் மறைப்பது எனத் தனக்குள்ளேயே திண்டாடினாள். ‘காதல் வந்துவிட்டால் உள்ளத்தில் கள்ளம் புகுந்துவிடும்’ என்று அவளுக்கு உணர்த்தியது காலம்.

ஒரு வாரத்திற்கு முன், அதாவது, யாதவ் வந்து காதல் பகர்வதற்குமுன், யாரேனும் இவள் இப்படியெல்லாம் இருப்பாள் என்று கூறியிருந்தால் நம்பியிருக்கமாட்டாள் வர்ஷினி. ‘நானாவது, காதலில் விழுவதாவது’ என்று சொல்லிச் சிரித்திருப்பாள். ஆனால் இன்றோ, நிலைமையே தலைகீழாக மாறிவிட்டதே!

காதல் வருவதற்கு ஏற்ற இடம், நேரம் என்பதெல்லாம் இல்லை. அந்த அழகிய விபத்து இதயத் துடிப்பைப் போல, மின்னல் வெட்டுவதைப் போல, எப்போது நம்மைத் தாக்கும் என்றே வரையருக்க முடியாது. வர்ஷினியுள்ளும் காதல் வந்துவிட்டது. இந்தக் காதலானது எங்கே, எப்படி அவளுள் புகுந்தது என்று அவளே அறியவில்லை.

ஒரு முறை மட்டுமே யாதவை பார்த்திருக்கிறாள். ஆனால், இவ்வாறெல்லாம் உணர முடியுமா? குழம்பிப்போனாள் வர்ஷினி. இதுவரை எதையுமே மறைக்காமல் ப்ரியாவிடம் உரைத்த மனம் இதைப் பற்றி பேச நினைக்கும்போது மட்டும் நாக்குக்கு பூட்டு போட்டு விடுகின்றது. தன்னுள் இருந்து துடிக்கும் நெஞ்சம் தனக்காக இல்லாமல் யாதவுக்காக துடிப்பது கண்டு விக்கித்து நின்றாள் அந்த மாது.

காதல் தான் எவ்வளவு விந்தையானது? மலையைக் கூட பெயர்த்தெடுக்கும் பலம் கொடுக்கும் இந்தக் காதல் இப்போது இந்தப் பேதையின் மனத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

இது சரியா தவறா என்று ஒரு மனம் சண்டையிட, மறுமனமோ, அவனைக் காண்போமா மாட்டோமா என ஏங்கித் தவித்தது.

ஒரு வழியாக, தன் எண்ணத்தின் நாயகனைக் காணும் இனிய நாளும் விடிந்திட, சற்று நிம்மதியாக உணர்ந்தாள் வர்ஷினி. எப்பொழுதுமே ஞாயிரன்று ப்ரியா தன் ஊருக்கு செல்லவில்லையென்றால் இருவரும் ஒன்றாகவே இருப்பர். பகல் முழுவதும் அனைவரும் ஒன்றாக பேசி மகிழ்ந்துவிட்டு, மாலை நான்கு மணியளவில் வர்ஷினியின் வீட்டிற்கு சிறிது தொலைவில் இருக்கும் கடற்கரைக்கு இரு தோழிகளும் சென்று ஒரு கூட்டம் போடுவது வழக்கம். இருவரும் இந்த வழக்கத்தை ஒரு பொழுதும் மாற்றியதில்லை. காரணம், அவர்களது நண்பர்க்குழாம்.

இவ்விருவருக்கும் அங்கே ஒரு பெரிய பட்டாளமே நண்பர்களாக உள்ளது. அவர்கள் யாரென்றால், இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவர் சிறுமியர். அனைவரும் சேர்ந்து விளையாடுவது, மணல் வீடு கட்டுவது என்று கலகலப்பாக நேரம் செலவளிப்பர். இந்த நேரத்திற்காக சில சமயம் இருவரும் ஏங்குவதும் உண்டு.

ன்றும் வழக்கம்போல ப்ரியா காலை பத்தரை மணிக்கே வந்துவிட்டாள். வழக்கமான பேச்சுக்கள், கிண்டல்கள் என்று பெரியவர்கள் இருவருடனும் கலந்து கொண்டிருந்தாலும், வர்ஷினியின் மனம் அவ்விடத்தில் இல்லை என்று ப்ரியாவிற்கு நன்கு புரிந்துபோனது. ஆனால், அவளுக்கு வர்ஷினியின் இந்நிலைக்கான காரணம் புரியவில்லை.

யாதவ் வர்ஷினியிடம் என்ன பேசினான் என்று தெரிந்தால் தானே ப்ரியாவிற்கு இது புரிந்திருக்க வாய்ப்புண்டு? யாதவ் அன்று ப்ரியாவிடம் பேசிக்கொண்டிருந்த ப்ரனிஷை அழைத்துச் சென்ற பிறகு, வர்ஷினியிடம் கேட்டுப்பார்த்தாள். வர்ஷினியின் பதில் ‘ஒன்றுமில்லை’. அதன்பின் ப்ரியாவும் அதனை முழுவதும் மறந்தேபோனாள். ஆனால் இப்போது பார்க்கையில், அது ஒன்றுமில்லாத விஷயம் இல்லை என்று தோன்றியது அவளுக்கு. கடந்த ஒரு வாரமாகத்தான் வர்ஷினி இவ்வாறு இருக்கிறாள் என்று அவளுடனேயே இருக்கும் ப்ரியாவிற்குத் தெரியாதா? வர்ஷினியின் இந்த ஒதுக்கத்திற்கு யாதவ் எந்த வகையிலோ காரணம் என்பது மட்டும் புரிந்தது ப்ரியாவிற்கு.

மாலை மூன்றரை அடிக்கவே தயாராகி வந்து நின்ற வர்ஷினியை ப்ரியா அதிசயித்துப் பார்த்தாள். எப்பொழுதும் ப்ரியாவே வர்ஷினியை கிளம்ப நச்சரிக்க வேண்டும். இன்றோ, சரியான நேரத்திற்கு கிளம்பவேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். வர்ஷினியின் இந்த புதிய மாற்றத்தை எண்ணி வியந்த ப்ரியா, வர்ஷினியின் தாய் தந்தையிடம் விடை பெற்று கடற்கரையை நோக்கிப் பயணப்பட்டாள்.

கடல் – எத்தனை எத்தனை ஜீவராசிகளுக்குத் தன்னை வசிப்பிடமாக வழங்கியுள்ளது? அழகாக, எக்கச்சக்க மர்மத்தைத் தன்னுள் கொண்டு சுதந்திரமாக இருக்கும் இந்தக் கடலும், ஒன்றன்பின் ஒன்றாக பூமியிடம் வந்து ரகசியம் பேசிச் செல்லும் அந்தக் கடலலைகளையும் அதன் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கரையையும் காணும்பொழுது தெவிட்டாத இன்பம் வந்து சேரும் ப்ரனிஷிற்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.