(Reading time: 16 - 32 minutes)

லையில் கால் நனைக்கும்போது அந்த சமுத்திரம் தன் சோகங்களையும் கவலைகளையும் வாங்கிக்கொண்டு சந்தோசத்தைத் தருவதாக ஒரு எண்ணம். அங்கு சிதறிக்கிடக்கும் கிளிஞ்சல்களை சேகரித்து கணக்கிடுகையில் தனக்கு வரப்போகும் அதிர்ஷ்டங்களின் எண்ணிக்கையாகவே நினைத்து மகிழ்வான். அந்தக் கடலோசை தன்னிடம் ஏதோ நவிலவிரும்புவது போல ஒரு உணர்வு அவனுள் எப்போதும் எழும். சுருங்கக்கூறின், இவன் கடலின் காதலன்.

ப்ரனிஷ் சந்தோசமாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும் அதனைக் கூறுவது கடலிடமே. மூன்று வயதில் தந்தை இங்கு அழைத்துவந்து காட்டியபோது இதன் நீளத்தையும், நீரையும் வானையும் பிரித்துக்கூற முடியாதபடி நீல நிறத்தில் இருந்த பரந்து விரிந்த ஆழியையும் கண்டு குதூகலித்துக் குதித்தது அந்த குழந்தை மனம். அதன்பிறகு, வாரம்தோறும் அழுது புரண்டாவது தந்தையைக் கூட்டி வந்துவிடுவான் தன் கடல் நண்பனிடம் கதை பேச. கொஞ்சம் பெரியவனாகி யாதவின் தோழமை கிட்டியபின் இருவருமே இங்கு வந்துவிடுவர்.

யாதவிற்கும் கடலில் விளையாடுவது பிடிக்கும். தனது விருப்பம் தன் நண்பனுக்கும் பிடித்தது என்று ப்ரனிஷிற்கு அவ்வளவு பெருமை அப்போது. இந்தக் காரணத்தாலேயே அந்த சிறுவனான ப்ரனிஷுக்கு உற்றதோழனாகிப் போனான் யாதவ்.

இன்றும் எப்போதும்போல கடலிடம் மனதோடு பேசிக்கொண்டிருந்தான். அவனது அருகில் அதே நட்புணர்வுடன் வீற்றிருந்தான் யாதவ். ஆனால், ப்ரனவின் மனதில் குடிகொண்டிருந்த அமைதியானது யாதவை சீண்டக்கூட இல்லை. அவனது உள்ளம் அடுத்து செய்யவேண்டியதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தது.

என்னதான் வர்ஷினியிடம் இனி அவளைத் தொல்லை செய்யமாட்டேன் என்று கூறி வந்தாலும், இந்த ஒரு வார காலத்தில் வர்ஷினியை பார்க்க முடியாமல் தவித்தது யாதவ் மட்டுமே அறிந்தது. இன்று கடற்கரைக்கு வருவாளா இல்லையா என்று யோசித்துக் குழம்பியது மனம்.

இவையெல்லாம் யோசித்துக்கொண்டே வலப்புறம் திரும்பினான். உடனே அவனது முகமும் அகமும் ஒருங்கே மலர்ந்தது. அவன் பார்த்த திசையில் சற்று தொலைவில் தெரிந்தாள் வர்ஷினி. வர்ஷினியுடன் ப்ரியாவும் இருந்தாள். ப்ரியா வர்ஷினியிடம் பேச, வர்ஷினி அதனை எந்த சுவாரசியமும் இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் விழிகளோ, ஓயாமல் அங்கும் இங்கும் அலைபாய்ந்தபடியே இருந்தது.

வர்ஷினியின் கண்கள் தன் தேடலை முடிவுக்குக் கொண்டுவந்தன, தொலைவில் தன்னை நோக்கிக் கொண்டிருந்த யாதவை கண்டுப்பிடித்ததால். கண்கள் சங்கமித்த அந்த நொடி இருவருக்குள்ளும் ஒரு மின்னல் வெட்டியது; அவள் முகம் முழுமதியாக பிரகாசமானது. வர்ஷினியின் முகத்தில் தெரிந்த இந்த மாற்றங்களைக் கண்டு யாதவின் மனதில் சந்தோச ஊற்று பெருக்கெடுத்தது.

தன்னைக் கண்டு மலர்கிறாள் என்றால், அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறதோ என்று நினைத்து மீண்டும் வர்ஷினியின் முகத்தை ஆராய்ந்தான். ஆனால் அதற்குள் வர்ஷினி பார்வையை விலக்கி ப்ரியாவுடன் பேசிக்கொண்டே யாதவையும் ப்ரனிஷையும் கடந்து சென்றாள். கடலோடு மனதில் உரையாடிக்கொண்டிருந்த ப்ரனிஷும், வர்ஷினியுடன் பேசிக்கொண்டிருந்த ப்ரியாவும் இவ்விருவரின் மௌனப் பேச்சுவார்த்தையைப் பார்க்கவில்லை.

ப்ரியாவும் வர்ஷினியும் சென்று சேர்ந்தது, யாதவிடம் இருந்து சிறு தொலைவில் இருந்த குழந்தைகள் பட்டாளத்திடம். அந்த சிறுவர் கூட்டம், இந்த இரு நங்கைகளையும் கண்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தது. அவர்கள் அனைவரும் ப்ரியாவிடமும் வர்ஷினியிடமும் ஏதோ கேட்பதும், ப்ரியா சரி என்று தலையசைத்து வர்ஷினியிடம் கேட்க, அவள் என்னவோ கூறுவதும், ப்ரியா சிறுவர்களை அழைத்துக்கொண்டு கடைகளை நோக்கிச் செல்ல்வதும் யாதவிற்குத் தெரிந்தது.

தனியே இருந்த வர்ஷினியோ, சில மணித்துளிகள் யாதவை நோக்கினாள். வர்ஷினியின் கண்களில் ஏக்கம். தவிப்பு, எதிர்பார்ப்பு, சந்தோசம் என பல கலவைகளைக் கண்டான் யாதவ். “என்னிடம் வா” என அழைத்து காந்தமென இழுத்தன அவனை அந்நயனங்கள். அந்தப் பார்வையை ஒதுக்க முடியாமல், வர்ஷினி தனியே மணலில் அமர்வது கண்டு தன் நண்பனிடம் “இதோ வர்றேன் மச்சான்” என்றுரைத்துவிட்டு அவனது பதிலுக்குக் காத்திருக்காமல் நடந்தான் வர்ஷினியை நோக்கி.

ப்ரியா தன்னை விட்டு வெகு தூரம் செல்லும் வரை பார்த்திருந்த வர்ஷினி, அவர்கள் எங்கிருந்து வந்தாலும் பார்க்குமாறு ஒரு இடத்தில் அமர்ந்தாள். அவர்கள் அனைவரும் திரும்ப வெகு நேரமாகும் என்பது அவள் அறிந்த ஒன்றே. இன்று இங்கு வந்ததிலிருந்து அவள் தேடிய முகம் அருகேயே இருக்கும்போது அவனை விட்டு வேறெங்கோ செல்ல வர்ஷினிக்கு விருப்பமில்லை. எனவேதான் ப்ரியாவுடன் செல்ல மறுத்து அமர்ந்திருந்தாள்.

யாதவைப் பார்த்தால் தான் படும் இந்த இன்பமான அவஸ்தை முடிவுக்கு வந்துவிடும் என்று எண்ணியது எவ்வளவு பெரிய பிணக்கு? அவனைக் கண்டதிலிருந்து அவனுடன் பேசவேண்டும் என்ற ஆவல் ஊற்றிலிருந்து ஆறாக மாறியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.