(Reading time: 28 - 56 minutes)

"ன்ன வாணிம்மா..?? நான் முழிச்சிக்கிட்டது தெரியுமா..?? கையில் காபியோடு  வர்றீங்க..."

"ஆமாம் நாம இருப்பது மாளிகையா..?? வீட்டு கேட்ல இருந்து 2 அடி எடுத்து வச்சா வீடு... ஹால் ல இருந்து இந்தப்பக்கம் 2 அடி வச்சா பெட்ரூம்... அந்த பக்கம் 2 அடி வச்சா கிச்சன்... ரெண்டுக்கும் நடுவுல பாத்ரூம்... இதுல நீ இங்க புரண்டு புரண்டு படுக்கறது எனக்கு தெரியாதா..?? எழுந்து உக்கார்ந்திருந்ததை பார்த்தேன்... அதான் காபியோட வந்தேன்..."

அவர் கையில் இருந்த காபியை கையில் வாங்கிக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தாள்... வாணியும் அவளின் பின்னாலேயே வந்தார்... ஹாலில் போடப்பட்டிருந்த  அந்த மர சோஃபாவிற்கு முன்னால் இருந்த சிறிய மேசையில் காபியை வைத்தவள், பாத்ரூமிற்குள் நுழைந்தாள்...

இரண்டு வருடங்களுக்கு முன்னால், தன் சொந்த உழைப்பில் வாங்கியது தான் இந்த வீடு... பத்துக்கு பத்து  என்ற அளவில் பெட்ரூமும், அதைவிட குறைவான அளவுக் கொண்ட கிச்சனும்... நடுவில் டாய்லட்டோடு சேர்ந்தாற் போல் பாத்ரூமும்.. இந்த மூன்றையும் சேர்த்த நீளமும் கொஞ்சமே குறுகிய அகலத்தோடும் கொண்ட ஹால், இந்த நான்கறையும் சேர்த்தாற்போல் மேல்தளம் மொட்டை மாடியாக இருந்தது... இந்த இரு பெண்களும் வசிக்க, இதுவே போதுமான ஒன்றாக இருந்தது...

பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள் காபியை கையில் எடுத்துக் கொண்டு சோஃபாவில் அமர... வாணி அவளிடம் பேச்சுக் கொடுத்தார்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"ரெண்டுதடவை அலாரம் அடிச்சும் எழுந்திரிக்காம படுத்துக்கிட்டு இருந்த... ஏதாச்சும் உடம்பு சரியில்லையா கங்கா... அப்படி ஏதாவதுன்னா இன்னைக்கு இன்ஸ்டியூட்க்கு போகாம வீட்லயே இருந்திடேன்... ரம்யா தான் இருக்காளே அவ பார்த்துக்கப் போறா..??"

"எனக்கு ஒன்னுமில்ல வாணிம்மா... நான் நல்லா தான் இருக்கேன்... சும்மா எந்திரிக்க மனசில்லாம படுத்திருந்தேன்..."

"ஒன்னுமில்லன்னு சொல்லாத... எனக்கு தெரியாதா..?? நீ துஷ்யந்த் தம்பிக்கிட்ட பேசிட்டு வந்ததுல இருந்து உன்னை நான் கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன்... உன் மனசுலேயும் வருத்தம் இருக்குமே... அதை நீ மத்தவங்களுக்கு தெரியாம வேணா மறைக்கலாம்... ஆனா என்கிட்ட மறைக்க முடியாது...

ஆனா இந்த வேதனையெல்லாம் எதுக்காக...?? கொஞ்சம் உன்னோட மனசை மாத்திக்கக் கூடாதா..?? "

"இந்த முடிவு தான் வாணிம்மா,  எல்லோருக்கும் நல்லது..."

"என்ன நல்லது..?? இதுக்கே நீ இப்படி இருக்க.. உனக்கு தெரியுமா..?? தம்பி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுமே.. கோமதியம்மா ஒரு பெண்ணை பார்த்து, நிச்சயமும் பண்ணி, கல்யாணத்துக்கு தேதியும் குறிச்சிட்டாங்க... ஒரு மாசம் கூட இல்ல, அதுக்கு முன்னாடியே கல்யாணமாம்.. நேத்து அவங்க வீட்ல வேலை செய்யும் பொண்ணை பார்த்தேன்... அவ தான் சொன்னா...

உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன்... ஆனா இது உனக்கு தெரியாமலும் போகாதே... அவ சொன்னதும் எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா..?? இப்போக் கூட ஒன்னும் கெட்டுப் போகல கங்கா... தம்பிக்கிட்ட உன்னோட மனசுல இருக்கறத சொன்னா.. கண்டிப்பா அது சந்தோஷப்படும்... அவங்க அம்மாக்கிட்ட சொல்லி இந்த கல்யாணத்தையும் நிறுத்திடும்... என்ன சொல்ற...??"

"இப்போ தான் அவர் நல்ல முடிவா எடுத்திருக்காரு வாணிம்மா.. இதை தான் நானும் எதிர்பார்த்தேன்...  இந்த முடிவால எனக்கு எந்த வருத்தமும் இல்ல... கல்யாண தேதியை குறிச்சாச்சுன்னு கேக்கவே சந்தோஷமா இருக்கு..."

"இப்படியெல்லாம் நீ பேசுனா நான் நம்பிடுவேனா..?? இந்த 6 வருஷத்துல நான் உன்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்... முகத்துல உன்னோட வருத்தத்தை காட்டாட்டியும் மனசுக்குள்ள நீ எவ்வளவு வருத்தப்படுவன்னு எனக்கு தெரியும் கங்கா... நீ இப்படி இருக்கறதால யாருக்கு நன்மைன்னு சொல்லு...

பாவம் துஷ்யந்த் தம்பி உன்கிட்டேயும் அதோட அம்மாக்கிட்டேயும் மாட்டிக்கிட்டு முழிக்குது... நீ நினைச்சா எல்லாத்தையும் சரிப் பண்ணலாம்... நீ வாழ வேண்டியப் பொண்ணு கங்கா.. உனக்கு ஒன்னும் வயசாகிடல.. 26 வயசு தான் ஆகுது.."

"உங்க வீட்டுக்காரர் இறந்து போகும்போது உங்களுக்கு என்ன வயசு வாணிம்மா..??"

"அப்போ எனக்கு 23.."

"அப்போ உங்களுக்கும் சின்ன வயசு தானே..?? அந்த நேரம் உங்களுக்கு துணை வேணும்னு நீங்க யோசிச்சீங்களா..?? அவரையே நினைச்சிக்கிட்டு தனியா இருந்திடல..."

"நான் அவர் கூட 4 வருஷம் சந்தோஷமா வாழ்ந்திருக்கேன்... அதுவே என்னோட மனசுக்கு நிறைவா இருக்கு... என்னோட கதை மாதிரி உன்னோடது இல்ல கங்கா.."

"கதை வேணா வேற வேறயா இருக்கலாம்... ஆனா எனக்கு இப்படி இருக்கறது தான் பிடிச்சிருக்கு... எனக்கும் அந்த 3 மாசம் மனசுக்கு நிறைவான ஒன்னா தான் இருக்கு வாணிம்மா... அந்த வாழ்க்கையே போதும்..."

"இங்கப்பாரு எனக்கு அவர் போனதும் அடுத்து என்ன வேணும்னு தெரியாம 46 வயசை தாண்டிட்டேன்... எனக்குன்னு யோசிக்க அப்பா, அம்மாவும் அப்போ இல்ல.... மத்த உறவுகளுக்கு எனக்காக யோசிக்க நேரமுமில்ல... இனிமே என்ன இருக்கு... இப்படியே சாவை எதிர்பார்த்து காலத்தை ஓட்டிடுவேன்... ஆனா உனக்கு இரத்த சம்பந்தப்பட்ட உறவா நான் இல்லன்னாலும், உனக்கு நல்லது நடக்கனும்னு நான் ஆசைப்பட்றேன்.. உனக்குன்னு கண்டிப்பா ஒரு துணை வேணும் கங்கா.."

"நீங்க இப்படி சொல்றதே எனக்கு சந்தோஷமா இருக்கு வாணிம்மா.. நீங்க தான் எனக்காக இருக்கீங்களே... இந்த 6 வருஷத்துல எனக்கு அம்மா இல்லாத குறையை நீங்க தான் தீர்த்து வச்சிருக்கீங்க.. அதேபோல நீங்களும் என்னை பொண்ணா தான் நினைக்கிறீங்க... நீங்க என்கூட இருக்கும்போது எனக்கென்ன வாணிம்மா... நாம ரெண்டுப்பேரும் இப்படியே இருந்திடலாம்..."

"நான் உனக்காக எப்பவும் இருப்பேன் கங்கா... எனக்கு ஒரு பொண்ணோ, பையனோ இருந்திருந்தா உன்னோட வயசு தான் அவங்களுக்கும் இருந்திருக்கும்... நீதான் அந்தக் குறையை தீர்த்து வச்சிருக்க... நான் சொன்னது உனக்குன்னு ஒரு வாழ்க்கை துணை... அதனால..." முழுதாக சொல்லி முடிப்பதற்குள் கிச்சனில் இருந்து குக்கர் சத்தம் கேட்டதும்...

" உங்களை குக்கர் கூப்பிடுது... போய் என்னன்னு கேளுங்க... நம்ம வாக்கு வாதத்தை இதோட முடிச்சுக்கலாம்..." என்று கங்கா சொன்னதும், ஏதோ முனகிக் கொண்டே கிச்சனுக்குள் சென்றார் வாணி.

அவர் அப்படி சென்றதும், அன்றைய செய்தித்தாளை கையில் எடுத்தாள்... ஒரு விமானம் மாயமாய் மறைந்ததும், அதை தேடும் முயற்சியில் இருப்பதாகவும் முக்கிய செய்தியாக பதிவிட்டிருந்தனர்...

இப்போதெல்லாம் அடிக்கடி அப்படிப்பட்ட செய்திதள் வருகிறது... அப்போதெல்லாம் இவள் துஷ்யந்தை தான் நினைத்துக் கொள்வாள்... அவன் தான் அடிக்கடி விமானப் பயணம் செல்கிறான்... இந்தியாவிற்குள்ளே தான் அவனது பயணம் என்றாலும், அவன் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொள்வாள்... இவளின் பயத்தைக் கூட அவனிடம் வெளிப்படையாக சொல்லமுடியாத ஒரு நிலையில் தான் இவள் இருக்கிறாள்... அதை நினைத்து  ஒரு பெருமூச்சை வெளியிட்டாள்... (இங்கு இவள் இப்படி பயப்படுவது தான் அங்கே அவனுக்கு கனவில் வெளிப்படுகிறதே..)

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.