(Reading time: 28 - 56 minutes)

குளித்துவிட்டு வந்து தயாராகி கொண்டிருந்தவளை அடிக்கடி பார்த்துக் கொண்டே வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் வாணி... எத்தனையோ வயசானவங்களே பளிச்சென்று மேக்அப் போட்டுக்கொண்டு தன்னை அழகுப்படுத்திக் கொள்வதை அவர் பார்த்திருக்கிறார்...

ஆனால் இந்த 26 வயதில் கங்கா ஏன் இப்படி இருக்கிறாள்...?? என்ற கோபமும், இப்படியும் இருக்க முடியுமா..?? என்ற கேள்வியும் அவருக்கு அடிக்கடி எழும்...

டல் கலரில் ஒரு காட்டன் அல்லது சின்தடிக் புடவை... அதற்கு ஓரளவுக்கு மேட்ச் ஆகும் காட்டன் ப்ள்வுஸும் அணிந்திருப்பாள்... அவளின் நீண்டக் கூந்தலை சாதாரணமாக வாரி நுனி வரை தளரப் பின்னியிருப்பாள்... கழுத்தில் மஞ்சள் கயிறோடு, தன் அன்னையின் மெல்லிய சங்கிலி இருக்கும்... நெற்றியில் சாதாரண ஒரு வட்ட பொட்டு, அதன் கீழே குங்குமம் வைத்திருப்பாள்... கழுத்தில் தாலி இருந்தாலும் நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்க மாட்டாள்... காதில் முத்து வடிவிலான ஒரு சிறிய தங்கத்தோடு இருக்கும்.... கையில் உடையாத கனமான ப்ளாஸ்டிக் வளையல் அணிந்திருப்பாள்...

வழக்கமாக அவளின் தினசரி அலங்காரமே இப்படி தான் இருக்கும்... இப்போதெல்லாம் ஒரு ப்ள்வுஸ்க்கே ஆயிரம், ரெண்டாயிரம் செலவிடுபவர்கள் மத்தியில், அதெல்லாம் அவள் கைவண்ணத்திலேயே அழகாக தைத்துவிடும் திறமையிருந்தும் அவள் அப்படி உடுத்தமாட்டாள்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ஏதாவது விசேஷத்திற்கு செல்லும் போது கூட மேற்படி அலங்காரம் செய்ய விரும்பமாட்டாள்... தலையில் பூ கூட சூடிக் கொள்ள மாட்டாள்... முதலில் அவளை விசேஷத்திற்கு யாரும் அழைக்கமாட்டார்கள், அப்படியே அழைத்தாலும் இவள் செல்லவும் மாட்டாள்... நாசூக்காக வர முடியாது என்று ஏதாவது காரணத்தை சொல்லி நழுவி விடுவாள்...

அப்படியும் அவளை அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு கட்டாயமாக அழைக்கும் ஒரு ஜீவனும் இருக்கிறது... இவள் எப்படிப்பட்டவள் என்ற ஆராய்ச்சியோ... இல்லை எப்படி விசேஷத்திற்கு தயாராகி வருகிறாள் என்றோ நினைக்காமல், அவள் முக்கியமாக வரவேண்டும் என்று நினைக்கும் ஜீவன் அது... அந்த அன்புக் கட்டளையை கங்காவால் மறுக்கவும் முடியாது...

அதேபோல் இவள் எப்படியிருந்தாலும் அவளின் அன்பை மட்டும் எதிர்பார்க்கும் இன்னொரு ஜீவன் துஷ்யந்த்... துஷ்யந்த் வீட்டிற்கும், இவளுக்கும் எந்த விதத்திலும் இதுவரையிலும் தொடர்பு இருந்ததில்லை... இரண்டு, மூன்று முறை அவனின் அன்னை மற்றும் அத்தையை பார்த்திருக்கிறாள்... அதுவும் இனிய சந்திப்புகளாக அமையவில்லை... துஷ்யந்த் வீட்டில் விசேஷம் என்றால், அவனுக்கு தான் இப்போது திருமணம் நடக்கப் போகிறது... ஆனால் அந்த திருமணத்திற்கு இவளால் செல்ல முடியுமா..?? இவளை முன்னிறுத்தி அவன் இன்னொரு பெண்ணை மணம் முடிப்பானா..?? இல்லை இவளால் தான் அந்தக் காட்சியை பார்க்க முடியுமா..?? இந்த இரண்டுமே நடக்காத ஒன்று... அதனால் துஷ்யந்தின் திருமணத்திற்கும் இவளால் செல்ல முடியாது...

ஏனோ துஷ்யந்த் பற்றி பேச்சு வந்ததும், திரும்பவும் அவனுக்கு போன் செய்யலாமா..?? வேண்டாமா..?? என்ற சிந்தனைக்கு சென்றுவிட்டாள்... இப்போது மணி எட்டாகிறது... 11 மணிக்கு தானே அவனுக்கு மீட்டிங் இருக்கிறது... அதற்குள் ஒரு முடிவெடுப்போம் என்று அப்போதைக்கு அந்த சிந்தனையை ஒதுக்கி.. வாணி தந்த இரண்டு இட்லியை சாப்பிட்டு விட்டு இன்ஸ்ட்யூட்டிற்கு சென்றாள்...

இவள் செல்வதற்கு முன்னரே ரம்யா இன்ஸ்ட்டியூட்டை திறந்து வைத்திருந்தாள்... ரம்யா இவளிடம் தையல் கலை கற்றுக் கொண்ட மாணவி.. கங்கா வெறும் இன்ஸ்ட்டியூட் மட்டும் நடத்தாமல் கூடவே துணியும் தைத்துக் கொடுக்கிறாள்... அதனால் ரம்யாவையும், கலா என்ற இன்னொரு பெண்ணையும் இங்கேயே இவளுக்கு உதவியாக வேலைக்கும் அமர்த்திவிட்டாள்... அதிலும் ரம்யா இவளிடம் நெருக்கமாகவே இருப்பாள்... அதனால் கங்கா இல்லாத நேரங்களில் ரம்யாவே இன்ஸ்ட்டியூட்டை கவனித்துக் கொள்வாள்...

இவள் வரும் வேலை ரம்யாவும், கலாவும் சுடிதார் தைத்துக் கொண்டிருந்தனர்... இவளிடம் தையல் கலை கற்றுக் கொள்ளும் மாணவிகள் சிலபேரும் வந்திருந்தனர்... உள்ளே நுழைந்ததும் ரம்யா, கலாவிற்கு ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, தன் இருப்பிடத்திற்கு சென்றாள்... இவளின் அன்னை, தந்தை படத்திற்கு ரம்யா ஏற்கனவே பூ போட்டு விளக்கேற்றிவிட்டதால், கைகூப்பி அவர்களை வணங்கிவிட்டு இருக்கையில் உட்கார்ந்தாள்...

கங்காவின் அன்னைக்கு, கங்கா ஒரு ஆசிரியையாக ஆக வேண்டும் என்பது ஆசை... கங்காவுமே அந்த ஆசையை மனதில் நிறுத்தி தான் படித்தாள்... ஆனால் ஒருக்கட்டத்தில் அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்...  ஒன்றுக்கு இரண்டு டிகிரி வாங்கியிருந்தும், ஆசிரியை தகுதிக்கான படிப்பை அவள் தேர்ந்தெடுக்கவில்லை...

பொதுவாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும்... ஆனால் இவள் முன்னால் போக, பின்னால் இவளைப் பற்றி புறம் பேசும்படியான வாழ்க்கை இவளுக்கு அமைந்துவிட்டதால், அவள் மேற்கொண்டு அந்த ஆசையை கைவிட்டுவிட்டாள்... படித்த படிப்பிற்கான வேலையை செய்யவும் விரும்பவில்லை...

தன் அன்னையிடம் ஆர்வமாக கற்ற அந்த தையல் கலையையே  மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க விரும்பினாள்... கல்வியை கற்றுக் கொடுப்பவர் மட்டும் தான் ஆசானா..?? இப்படி கைத்தொழிலை கற்றுக் கொடுப்பதன் மூலமாகவும் அம்மா ஆசையை நிறைவேற்றுவோமே..?? என்று இந்த தையற்பள்ளியை ஆரம்பித்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.