(Reading time: 21 - 41 minutes)

06. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

"ண்ணி இப்படி நேரம் தவறி சாப்பிட்டா.. உடம்புக்கு நல்லதில்ல... வாங்க வந்து சாப்பிடுங்க.." என்று கோமதியை வற்புறுத்தி டைனிங் டேபிளுக்கு அழைத்து வந்தார் விஜயலஷ்மி..

"ஆமாம் டைம்க்கு சாப்ட்டு நான் என்ன பண்ணப் போறேன் விஜி... நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்ட்றேன்.." என்று மறுத்துப் பார்த்தார்...

ஆனால் விஜி அவர் பேச்சைக் கேட்காமல் அவருக்கு சாப்பாடு பரிமாறினார்...

"நீயும் உக்கார்ந்து சாப்பிடு விஜி... என்று விஜியையும் உட்கார வைத்தார் கோமதி... இருவரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்...

"கல்யாணத்துக்கு இன்னும் ஒருமாசம் கூட இல்ல... ஆனா நம்ம வீடு எப்படி இருக்குப் பாரு... வீடே கல்யாண களை கட்ட வேண்டாமா..?? ஆனா இந்த ரெண்டுப் பசங்களும் எப்போப் பாரு வேலை வேலைன்னு சுத்திக்கிட்டு இருக்காங்க..." என்று நொந்துக் கொண்டார் கோமதி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

"அதான் ராஜாவும், செல்வாவும் இன்னைக்கு ஊர்ல இருந்து வராங்களே அண்ணி... அப்புறம் என்ன..?? அதுவும் செல்வா வந்ததும் கல்யாண வேலையெல்லாம் அவனே பார்த்துக்கிறதா சொன்னானே... அதனால கவலைப்படாதீங்க அண்ணி..." என்று கோமதியை விஜி தேற்றினார்.

"செல்வா இன்னைக்கே வந்திடுவேன்னு சொன்னான்.. இன்னும் காணோமே..??" என்று கோமதி கவலை பட்டுக் கொண்டிருக்கும் போதே.. வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது... வருவது துஷ்யந்தா.. இல்லை செல்வாவா.. என்று இருவரும் வாசலில் பார்க்க... "அம்மா.." என்று அழைத்தப்படியே வந்த செல்வாவைப் பார்த்ததும் இருவருக்கும் முகம் மலர்ந்தது...

துஷ்யந்த், செல்வா இரண்டு பேரின் வருகையையும் பெரியவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், செல்வா இருவருக்கும் செல்லப்பிள்ளை என்பதாலும், அவனைப் பார்த்து ஒரு மாதத்திற்கு மேலாக ஆகிறது என்பதாலேயும் இருவரின் முகமும் மலர்ந்திருந்தது...

துஷ்யந்த் தன் குடும்பத்தாரிடம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படையாக காண்பிக்கமாட்டான்... ஆனால் செல்வா அப்படியில்லை, கோமதி, விஜி இருவருக்கும் தேவையானதை பார்த்து பார்த்து செய்வான்... அவர்களோடும் சிறிதுநேரம் செலவழிப்பான்... அப்படிப்பட்டவன் ஒருமாத காலம் வீட்டில் இல்லையெனும் போது, அது அவர்களுக்கு கஷ்டமாக தானே இருக்கும்... அதனால் தான் இருவருக்கும் முகம் மலர்ச்சியானது...

"என்னடா... இப்படி இளச்சிப்போய்ட்ட.." என்று கோமதி செல்வாவிடம் சொல்ல...

"அம்மா... பெத்தவங்களுக்கு பிள்ளைங்கள ரெண்டு நாள் கழிச்சுப் பார்த்தாலே அப்படி தான் இருக்கும்... நீங்க ஒரு மாசம் கழிச்சுப் பார்க்கறீங்க... அதான் அப்படி தெரியுது..." என்றான்...

"நீ நிஜமாவே இளைச்சு தான் இருக்க செல்வா... அங்க சரியான சாப்பாடு இருந்திருக்காது... அதான் அன்னைக்கு போன்ல அண்ணிக்கிட்ட சொன்னியாமே.. நல்ல சாப்பாடு கிடைக்கறதில்லன்னு... அதான் இப்படியிருக்க... போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்..."

"ஆமாம் அத்தை... வீட்ல வந்து லன்ச் சாப்பிட்டுக்கலாம்னு வெளிய எதுவும் சாப்பிடல... நான் ப்ரஷ் ஆகிட்டு வரேன்... நீங்க சாப்பாடு எடுத்து வைங்க..." என்றவன் மேலே உள்ள தன் அறைக்குச் சென்றான்...

விஜி பரிமாற சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், "அம்மா.. அண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டத என்னால நம்பவே முடியலம்மா... கேட்டப்போ எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா...

யாரும்மா அந்த சாரு... அவளெல்லாம் ஒரு ஆளுன்னு, அண்ணா அவ ஏமாத்துனத நினைச்சிக்கிட்டு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டிருந்தேச்சுன்னு எனக்கு எரிச்சலா வரும் தெரியுமா..??" என்று சொன்னதும்... விஜியும், கோமதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்...

செல்வாவை பொறுத்தவரை அந்த சாருவின் ஏமாற்றத்தை நினைத்து தான், அவளுடன் நடக்க வேண்டிய கல்யாணம் நின்றதால் தான்... தன் அண்ணன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறான்... என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்... ஆனால் துஷ்யந்த் திருமணம் வேண்டாமென்று சொல்வதற்கு காரணம் சாரு இல்லை என்பதை இருவருமே அறிவர்... ஆனாலும் செல்வாவிற்கு எதுவும் தெரியாது இருப்பதே நல்லது என்று நினைத்தனர்...

"அப்புறம் அண்ணனுக்கே போன் பண்ணி, அவனுக்கு வாழ்த்து சொல்லனும்னு நினைச்சேன்ம்மா... ஆனா அண்ணன் போயிருக்கிறது ஒரு முக்கியமான பிஸ்னஸ் டீல்க்காக... அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்...

அம்மா அப்புறம் உங்களுக்கு விஷயம் தெரியுமா..?? இந்த தடவையும் இந்த டீல் நமக்கே கிடைச்சிருக்கும்மா... தொடர்ந்து இந்த டீல் நமக்கே கிடைச்சதுல, மத்த கம்பெனிஸ் ல்லாம் ஆடிப் போயிருக்காங்க... அண்ணா அந்த மீட்டிங்ல பேசினத, அவனோட பி.ஏ எப்படி புகழ்ந்து தள்றான் தெரியுமா...??

ஆறு வருஷத்துக்கு முன்னாடி நம்ம கம்பெனி இருந்த நிலைமைக்கும், இப்போ அது DR group of company's ன்னு இவ்வளவு பெரிய நிலைமைக்கு வந்ததுக்கும் அண்ணனோட உழைப்பு தான்ம்மா காரணம்..." என்று தன் அண்ணனை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தான்...

"அது எங்களுக்கு தெரியாதா டா... நாங்க அப்போ உங்கக் கூட தானே இருந்தோம்... நடுத்தெருவுக்கு போகற நிலைமைல இருந்தோம்... இப்போ இந்த நிலைமைல இருக்க, ராஜா எவ்வளவு கஷ்டப்பட்டான்னு தெரியாதா..?? அவன் மட்டுமா..?? நீயும் தான் அந்த வயசுலயும் பொறுப்பா இருந்து உங்க அண்ணனுக்கு துணையா இருந்த... அப்புறம் உங்க மாமாவும் உங்களுக்கு உதவியா இருந்தான்...

இதெல்லாம் பார்க்க உங்கப்பா இப்போ நம்மக் கூட இல்லையே... அவர் மட்டும் இருந்திருந்தா... என்னோட ரெண்டுப் பிள்ளைங்களும் எவ்வளவு பொறுப்பா இருக்காங்க பாருன்னு பெருமை பட்ருப்பாரு..." என்று தன் கணவனின் நினைவில் கோமதி மூழ்க...

"அம்மா... அண்ணன் கல்யாணம் செஞ்சுக்கப் போற பொண்ணோட போட்டோ காட்டுங்கம்மா... பொண்ணு அண்ணனுக்கு ஏத்தவளா இருக்காளான்னு பார்க்கலாம்.." என்று பேச்சை வேறு திசைக்கு திருப்பினான்...

"உன்னோட அத்தை போட்டோவ எங்கேயோ வச்சிட்டா டா... இப்போ போட்டோ இல்லண்ணா என்ன..?? நேர்ல போய் பார்த்துட்டு வந்துடலாம்..."

"என்னம்மா சொல்றீங்க...??"

"அவங்களுக்கும் சேர்த்து தான் நாம கல்யாணப் பத்திரிக்கை அடிக்கப் போறோம்... அது சம்பந்தமான விவரம் கேக்க, நானும் விஜியும் இன்னைக்கு சாயந்தரம் அவங்க வீட்டுக்கு போலாம்னு இருக்கோம்... நீயும் எங்கக் கூட வா செல்வா... பொண்ணை அப்படியே நேர்ல பார்த்துட்டு வந்துடலாம்...."

"ம்ம் சரிம்மா... அப்புறம் அண்ணனும் இன்னும் பொண்ணை நேர்ல பார்க்கல இல்ல... அண்ணனும் இன்னைக்கு ஊர்ல இருந்து வர்றான் இல்ல... அவனையும் கூட்டிட்டுப் போவோமே.." என்றதும், கோமதிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை...

"சரி ராஜா வரட்டும், அவனும் வர்றதா சொன்னா கூட்டிட்டுப் போகலாம்... இப்போ நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..." என்று அவனை அறைக்கு அனுப்பி வைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.