(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 01 - ஜெய்

மஸ்தேஸ்த்து மஹாமாயே..... ஸ்ரீ பீடே சுர பூஜிதே

சங்க சக்ர கதா ஹஸ்தே..... மஹாலக்ஷ்மி நமோஸ்த்துதே....

என்று ஆரம்பித்து மஹாலக்ஷ்மி அஷ்டகம் ஸ்தோத்ரம் என்று முடிக்கும்போது சரியாக அவர்கள் வீட்டு காலிங் பெல் அடிக்க, கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து சிரித்தபடியே சென்று கதவைத் திறந்தார் சுகுணா.

“என்னமா உங்களோட  ஃபிரெண்ட்கிட்ட பேசியாச்சா.....  அப்பறம் ஆசைக் கணவர்க்கிட்ட இன்னைக்கு நடந்ததெல்லாம் ஒப்பிச்சாச்சா”

“வந்தவுடனே என்னை வம்பிக்கிழுக்கணுமாடா ராஜா.... என்ன இன்னைக்கு பத்து நிமிஷம் லேட்..... கடிகாரம்கூட சமயத்துல மணி தப்பாக் காட்டும்.... ஆனா டான்னு ஆறு மணி அடிக்கும்போது நீ நம்ம வீட்டு காலிங்பெல் அடிக்கறது தப்பாதே....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“இருங்க போய் refresh பண்ணிட்டு வந்து சொல்றேன்.......  அது சரி.... நீங்க வெளிய எங்கயாவது போறீங்களா என்ன......”

“ஏண்டா கேக்கற......”

“சாதாரணமா நான் வரும்போது உங்க காதல் கணவர்க்கிட்டயோ இல்லை உங்க அன்புத் தோழிக்கிட்டயோ அதி தீவிரமா பேசிட்டு இருப்பீங்க.... எனக்கே சைகை மொழிலதானே பதில் வரும்....  ஆனா இன்னைக்கு நான் வர்றதுக்குன்னே காத்துட்டு இருந்தா மாதிரி கதவைத் தொறந்துட்டு நிக்கறீங்க”

“பெரியத் துப்பறியும் சிங்கம் போடா.... போய் கை, கால் கழுவிட்டு வா.... உனக்கு coffee எடுத்துட்டு வரேன்.....”, என்று சமையலறைக்குள் சுகுணா செல்ல... அவரின் மகன் ராஜா தன் அறை நோக்கி சென்றான். 

கேந்திரன், சுகுணா தம்பதியினருக்கு ராஜா ஒரே மகன்.... மகேந்திரன் வக்கீலாக இருந்தவர்..... மக்களுக்காக போராடுகிறேன்  என்று அதிகார வர்க்கத்தின் அராஜகத்திற்கு பலியானவர்..... அவர் பலியானபொழுது ராஜாவின் வயது ஆறு..... நல்ல வேளை சுகுணா பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலையில் இருந்தார்..... சொந்த வீடும் இருந்ததால் அவரால் தன் மகனை பணப் பிரச்சனை இல்லாமல் வளர்க்க முடிந்தது.... ராஜா கணிதத்தில் Phd முடித்து புகழ்பெற்ற கல்லூரியில் பேராசிரியராக உள்ளான்..... பயங்கர படிப்பாளி..... ஆரம்ப வகுப்புகளில்  Double promotion வாங்கி மடமடவென்று உயர் வகுப்புகளுக்குச் சென்று அவனின் இருபத்து ஆறாவது வயதிலேயே ஆய்வறிக்கையை சமர்ப்பித்தவன்.....  மாஸ்டர்ஸ் முடித்து பேராசியராக சேர்ந்தான்....  வேலை செய்து கொண்டே Phd முடித்தான்.... தன் அன்னைக்கு ஓய்வு கொடுக்க நினைக்க அவர்,  தான் செய்யும் ஆசிரியர் தொழிலை மிக நேசிப்பதாகவும் தன்னால் முடியும்வரை பணிப்புரிய போவதாகவும் கூறித் தன் பணியைத் தொடர்கிறார்.... இருவரும் தங்கள் வருமானத்தில் கிட்டத்தட்ட இருவது குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.....

சுகுணா மிக பக்தி ஸ்ரத்தையான பெண்மணி..... அம்பாளை அடுத்த வீட்டுப் பெண்ணாக நினைத்து தினம் ஒரு மணி நேரம் பேசுவார்.... வெள்ளி, செவ்வாய் தவறாமல் ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்குப் போய்விடுவார்.... அதேப் போல் பள்ளி விட்டு வந்ததும் தன் கணவரின் புகைப்படம் முன் நின்று அன்று காலையிலிருந்து நடந்தது முழுவதும் சொல்லி முடித்த பின்புதான் அறைக்கு உள்ளேயே செல்வார்.....

ராஜா மிக மிக மிக அக்மார்க் நல்லவன் கேட்டகிரியில் வரும் பையன்..... அம்மா அளவிற்கு இல்லாவிட்டாலும் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.... தனக்கும் மேல் ஒரு சக்தி உள்ளது, தவறு செய்தால் அது தண்டிக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவன்....

ராஜா தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு  வந்தவுடன் சுகுணா அவன் கையில் சிற்றுண்டித் தட்டையும், காப்பியையும் தந்துவிட்டு வெளியில் செல்ல ஆயத்தமானார்.

“இப்போவாவது சொல்லுங்கம்மா.... எங்கப் போறீங்க.... காய் ஏதானும் வாங்கிட்டு வரணும்னா சொல்லுங்க.... நான் போய் வாங்கிட்டு வரேன்.... ஸ்கூல் போயிட்டு வந்து நீங்க டயர்டா இருப்பீங்க....”

“இன்னைக்கு வெள்ளிக்கிழமைடா.... மறந்துட்டியா.... கோவிலுக்கு போவேனே....  ராஜேஸ்வரி கோவிலுக்கு போயிட்டு வரலாம்ன்னு இருக்கேன்.... நீயும் வர்றியா.... இல்லை வேலை இருக்குதா......”

“எனக்கு கொஞ்சம் நோட்ஸ் எடுக்கணும்மா..... நீங்க போயிட்டு வாங்க....”

“சரிப்பா நான் கிளம்பறேன்......”, வாயிலுக்கு சென்று அவர் செருப்பைப் போடும் நேரம் அவசர அவசரமாக ஓடி வந்த ராஜா தன் அம்மாவை நிறுத்தி.....

“அம்மா கோவிலுக்கு எப்படி போறீங்க......”

“ஏண்டா வழக்கம்போல நடந்துதான் போகப்போறேன்..... இப்படியே நேரு நகர் வழியா நடந்தா பத்து நிமிஷத்துல போய்டலாம்...”

“அம்மா நேரு நகர்ல ஏதோ கலாட்டாவாம்..... அதனால நீங்க ராஜேஸ்வரி கோவிலுக்கு போக வேண்டாம்..... அடுத்த தெருவுல இருக்கற பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்க.....”

“ஓ அப்படியா .... அப்ப சரி.... நான் நேரு நகர் வழியாப் போகலை...... இப்படியே பிள்ளையார் கோவில் தெரு வழியாப் போய்டறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.