(Reading time: 8 - 16 minutes)

32. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ழக்கத்திற்கு மாறாக, அன்று சீக்கிரமே எழுந்து கொண்டான் திலீப்…

அதிகாலை வெளிச்சம் அறையினுள் பரவ ஆரம்பித்த வேளை, லேசாய் முழிப்பு ஏற்பட, மணி 6.30 தாண்டியிருந்தது…

“கடவுளே… இவ்வளவு நேரம் ஆச்சே…” என பதறியபடி எழுந்தவள், ஓரடி எடுத்து வைக்க முற்படும்போது,

“நான் சீக்கிரம் எழுந்து தான் ஆகப் போவது என்ன?... எப்படியும் சமையலறையில் ஒரு துரும்பை கூட நான் கிள்ளிப் போட முடியாது… மீறி நினைத்தாலும் அது நடந்திடாது… பிறகு எதற்கு நான் பதட்டப்படுகிறேன்?...”

விரக்தியோடு மன உளைச்சலும் சேர்ந்து கொள்ள, மெல்ல எழுந்து குளித்து, உடைமாற்றிவிட்டு அறையை விட்டு வெளியேறி கீழே வந்தாள் சரயூ…

சமையலறையில் சத்தம் கேட்க, விசாலம் தன் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் போலும் என்றெண்ணிக்கொண்டவள், வாசல் தெளித்திருத்திறதா என்று பார்க்கச் சென்றாள்…

வாசல் தெளித்து கோலமும் ஏதோ கிறுக்கலாக இருக்க, பூஜிதாவையும் பிரேமிதாவையும் எழுப்பச் சென்றாள்….

இரு மகள்களையும் எழுப்பி குளிக்க வைத்து, உடைமாற்றி, ஹாலுக்கு அழைத்து வந்தவள், அவர்களை அங்கே அமர சொல்லிவிட்டு, சமையலறைக்குள் நுழைந்தவள், அப்படியே நின்றாள் அசையாமல்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“காபி ரெடி சரயூ… இந்தா குடி….” என சரயூவிடத்தில் காபியை திலீப் நீட்ட, அவள் விழித்தாள்..

“நீ குடிச்சிட்டிரு… நான் போய் குட்டீஸ்களுக்கு பாலை கொடுத்துட்டு வரேன்…” என்றவன் புன்னகையுடனே ஹாலுக்குச் செல்ல, அதை ஏதோ பிரமிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள் சரயூ…

திருமணம் முடிந்த புதிதிலும், அவள் கர்ப்பமாய் இருந்த பொழுதிலும், அவன் இவ்வாறு அவளுக்கு காபி போட்டு கொடுத்ததுண்டு… அதன் பிறகு தான் அனைத்தும் மாறிப்போனதே… ஆனால் இன்று மீண்டும் அவனின் மாற்றம் அவளை திகைக்க வைத்தது…

காலையில் அவள் படுக்கையை விட்டு எழுந்த போதும், அவள் குளித்துமுடித்து, அறையை விட்டு வெளியே வரும்போதும், அவன் அறையில் இல்லாதது அவளுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்து போனது…

சரயூ யோசனையில் இருக்கும்போதே, “என்ன காபி நல்லா இல்லையா?...” என அவளின் காதோரம் அவன் குரல் கேட்க, சட்டென்று திரும்பினாள் அவள்…

திரும்பியவளின் கையிலிருந்து நழுவப்பார்த்த காபி கோப்பையை பிடித்துக்கொண்டவன்,

“ஹேய்… பார்த்து….” என்றான் பதட்டத்துடன்…

அவள் முகத்தில் பரவியிருந்த யோசனை ரேகைகள், அவனுக்குப் புரிய,

“என்னடா இன்னைக்கு இவன் நமக்கு காபி போட்டு தரானேன்னு பார்க்குறீயா?...”

புன்னகை மாறாமலே அவன் கேட்க,

“இல்ல… விசாலம் அக்கா எங்கன்னு யோசிச்சேன்… வேற எதுவுமில்லை…”

“ஓ… அப்படியா?...”

“ஆமா… சரி.. நகருங்க… டிபன் செஞ்சிடுறேன்…”

சொல்லிக்கொண்டே வேகமாக பாத்திரத்தை எடுத்தவளின் கரம், அவன் சொன்ன பதிலில் அப்படியே பாத்திரத்தை வைத்த இடத்திலேயே வைத்தது சத்தம் இல்லாமல்…

“நான் டிபன் செஞ்சிட்டேன்… வா சாப்பிடலாம்…”

“நீங்க எதுக்கு செஞ்சீங்க?...”

“இதுல என்ன இருக்கு?... இன்னைக்கு செய்யணும்னு தோணுச்சு… செஞ்சேன்…”

“அதென்ன இன்னைக்கு?... விசாலம் அக்கா கிட்ட சொல்லியிருந்தா செஞ்சி கொடுத்திருப்பாங்க… இல்ல நான் செஞ்சிருப்பேன்… உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்?...”

“அவங்களை மதியத்துக்கு மேல வந்தா போதும்னு சொல்லிட்டேன்… முடிஞ்சா லீவ் கூட எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டேன் நேத்தே…”

“லீவா?...!!!!”

விசாலத்திற்கு திலீப் லீவ் கொடுத்தது கூட அதிர்ச்சியில்லை… ஆனால் அவள் எப்படி வராமல் போனாள் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனாள் சரயூ…

“இதுக்கு ஏன் ஷாக் ஆகுற?... நான் தான் வரவேண்டாம்னு சொல்லி அனுப்பினேன் இன்னைக்கு…”

“ஷாக் எல்லாம் இல்ல… அவங்க வராம இருக்க மாட்டாங்களே அதான்… கேட்டேன்…”

“இன்னைக்கு வரவேண்டாம்னு ஸ்டிரிக்டா சொல்லி தான் அனுப்பினேன்….”

“ஸ்டிரிக்டாவா?... அது ஏன்?... அதும் இன்னைக்கு மட்டும் ஏன்?... அப்படி என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?...”

கேள்வி கேட்டு வளைந்த அவளின் இதழ்கள், அவன் சொன்ன பதிலில் சட்டென உறைந்து போனது அக்கணமே…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.