(Reading time: 17 - 33 minutes)

அமேலியா - 14 - சிவாஜிதாசன்

Ameliya

ரவு முழுவதும் வசந்த்திற்கு உறக்கமே வரவில்லை. உறங்கிய நேரத்திலும், ஏகப்பட்ட கனவுகள், தொடர்பில்லாத காட்சிகள் என நிஜத்தை விட கனவுகள் அவனை பாடாய்ப்படுத்தின. திடீரென விழித்தான் வசந்த். 'ஓ! இதெல்லாம் கனவா! என்ன மோசமான கனவு இது, கடவுளே!' என்று மனதை மெல்ல தேற்றினான்.

படுக்கையின் அருகே இருந்த விளக்கிற்கு உயிரூட்டி, நேரம் என்னவென்று பார்த்தான். மணி நாலரையைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் பொழுது விடியவில்லையா என சலித்துக் கொண்டவன், உறக்கம் வராத காரணத்தால் என்ன செய்வதென்று சிந்தித்தான்.

காலை பத்து மணிக்கு தனது எதிர்கால கனவு நனவாவதற்கு வாய்ப்பு ஒன்று கிடைக்கப்போவதை எண்ணினான், தான் சந்திக்கப் போகும் அந்த ஸ்பான்சர் தன் திறமையைப் புரிந்துகொண்டு வாய்ப்பு வழங்குவாரா அல்லது சம்பிரதாய முறைப்படி, பிறகு பார்க்கலாம் என்று தட்டிக் கழிப்பாரா என்று யோசித்தான். காரணம், அத்துறையில் தட்டிக் கழிப்பவர்கள் தான் ஏராளம்.

அவமானங்களும் காயங்களும் நிறைந்ததுதான் சினிமா வாழ்க்கை. மற்ற துறைகளில் தோற்றால் கூட ஆறுதல் கூறுவதற்கு சிலராவது இருக்கலாம். அவர்கள் நண்பர்களாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களாகவோ இருக்க வாய்ப்புண்டு. ஆனால், சினிமாவில் வாய்ப்பு தேடி தோற்றால், தேற்றுவதற்கு நாதி இருக்காது. குருடன் அடர்ந்த காட்டிற்குள் சிக்கிக்கொண்ட கதையாகிவிடும். அப்படியே காயங்களுக்கு மருந்து போடுகிறேன் என்று சிலர் ஆறுதல் உரைத்தாலும் அவர்கள் கூறுவதென்னவோ வேறு பிழைப்பைப் பார்த்துக்கொள் என்பது போல் தான் இருக்கும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

சினிமாவைப் பொறுத்தவரை ஜெயித்தவர்களை விட தோற்றவர்களே அதிகம். ஜெயித்தவர்கள் ஆயிரத்தில் இருந்தால் தோற்றவர்கள் கோடிகளில் இருப்பார்கள். எத்தனையோ ஆசைகளைக் கொன்றுவிட்டு வேறு வேலையைப் பார்ப்பவர்கள் ஏராளம். ஒரு நாள் நிச்சயம் நாம் வென்றே தீருவோம்  என போராடிக்கொண்டிருப்பவர்களும் எண்ணற்ற பேர். என்ன தான் இந்த சினிமா வாழ்க்கையோ! என கோப மூச்சை வெளியேற்றினான் வசந்த்.

கடிகார முள் ஐந்தைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. மெதுவாக படுக்கையை விட்டு எழுந்தவன், தூக்கம் கலையாத கண்களோடு மாடிப்படியின் வழியே கீழிறங்கினான். ஹாலில் நிலா மட்டுமே தனியாக படுத்திருந்தாள். அமேலியாவைக் காணவில்லை. படுக்கையின் அருகே தான் வைத்த உணவு அப்படியே இருப்பதைக் கண்டான்.

'அவளுக்கு எவ்வளவு திமிரு இருக்கணும். சாப்பிடாம தூங்கி இருக்கிறாளே' என்று அவனுக்கு கோபம் வந்தது. 'அது சரி, அவ சாப்பிட்டா என்ன, சாப்பிடலைனா என்ன, அதுவா நம்ம பிரச்சனை' என்ற எண்ணமும் அவனுள் எழுந்தது.

நேராக சமயலறைக்குச் சென்ற அவன், தனக்குத் தேவையான தேநீரை தயார் செய்தான். தினமும் அவன் இவ்வாறு செய்வதில்லை. என்றாவது அவனுக்கு அதிகாலையில் தேநீர் பருகவேண்டும் போல் தோன்றும். அந்நேரத்தில் மேகலாவை எழுப்ப மனமில்லாமல், தானே தேநீர் தயார் செய்வான். அந்த தேநீர் அப்படி ஒன்றும் சுவையாக இருக்காது, ஏதோ பரவாயில்லை என்பது போல் தான் இருக்கும்.

தேநீரைப் பருகியபடியே சமையலறையை விட்டு வெளியே வந்த வசந்த், அமேலியா படுத்திருந்த இடத்தை நோக்கினான். 'எங்கே போயிருப்பா இவ. ஒரு வேளை, சொல்லாம கொள்ளாம எங்கயாச்சும் போய்ட்டாளா?' என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான்.

'அப்படி நடந்தா சந்தோசம்தான்' என்று எண்ணிக்கொண்டே மாடிப்படியில் ஏறி, தன்னுடைய அறையைக் கடந்து வேறொரு அறைக்குச் சென்றான். அந்த அறை, இரண்டு அறைகளை ஒன்றாக இணைத்தது போல் விசாலமான அறை. வசந்த்திற்கு தன் வீட்டிலேயே மிகவும் பிடித்த இடம் அந்த அறை தான். நிசப்தம், நிம்மதி, தனிமை, கற்பனை என எண்ணற்ற எண்ணப்  பிணைப்புகளைக் கொண்ட அறை அது.

அந்த அறையின் கதவைத் திறந்தால் பால்கனி ஒன்று வரவேற்கும். அந்த பால்கனியில் இருந்து பார்த்தால் அந்த ஊரின் இயற்கை எழில் கொஞ்சும் அழகு தெள்ளத் தெளிவாக தெரியும். மனதிற்கு இதம் தரும் காட்சிகள் அவை.

வசந்த், பனித்திரை மூடிக்கொண்டிருக்கும் எழில் மிகு காட்சிகளை தேநீரை அருந்தியபடியே ரசித்துக்கொண்டிருந்தான். அவனது எண்ண அலைகள் தணியத் தொடக்கி மனம் லேசானது. மீண்டும் தேநீரை ருசி பார்த்தபடி கண்களை சுழற்றினான்.

பால்கனியில் அவன் மட்டுமில்லாமல் அமேலியாவும் இருப்பதைக் கண்டான். பால்கனியின் இன்னொரு ஓரத்தில் நின்றிருந்த அமேலியா, வசந்த் வந்ததை கவனிக்கவில்லை. அவள் அங்கு வந்து நீண்ட நேரமாகி இருக்கலாம் என வசந்த்திற்கு தோன்றியது.

அமேலியாவின் கண்கள் சாலையையே வெறித்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது வானை நோக்கினாள். குளிர் தாளாமல் தன் ஆடையை இறுகப் பற்றிக்கொண்டாள். அமைதியான காலையை நீண்ட நாட்களுக்குப் பின் அனுபவிக்கிறாள். இதற்கு முன் சிறுவயதில் இது போன்ற அமைதியை உணர்ந்திருக்கிறாள். எப்போதென்று அவளுக்கு நினைவில்லை. அதன் பின், இப்பொழுது தான் மனதிற்கு குளிர்ச்சி தரும் காலைப் பொழுதை காண்கிறாள்.

காலை எழுந்ததும், அமெரிக்க ராணுவத்தினரின் வண்டிகள் சர்சர் என செல்லும். மக்கள் அவர்களை எதிர்த்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என கூச்சல்களுடன் வாழ்ந்து பழக்கப்பட்டவளுக்கு நிசப்தமான தனிமை சொர்க்கமாய் தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.