(Reading time: 12 - 23 minutes)

34. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

விடிந்துவிட்ட பொழுதினை இமைக்காமல் ஜன்னலோரமாய் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் ஜானவி…

அவளின் முகத்தில் ஒரு வித இறுக்கமும், சற்றே உவகையும் நிறைந்திருக்க, கண்கள் மட்டும் அந்த ஆதவனின் மீதே நிலைத்திருந்தது தீவிரமாய்….

பொழுது புலர ஆரம்பிக்கும் நேரத்தில், துவங்கும் அந்த ஆதவனின் உதயம், மாலையாகி விட்டால் போதும், வானிலிருந்து மறைய துவங்கும்….

ஆனால் பாவை இவளின் நெஞ்சில் வீற்றிருக்கும் ஆதவனுக்கோ அத்தகு எண்ணமே இல்லை…. அவளின் மனதை மட்டுமே ஆக்கிரமித்திருந்தான் அவன் முழுமையாய்….

அவள் இமைத்தால் கூட விழிகளுக்குள் தோன்றிடுவான் ஒளியாய் அவளுக்குத் துணை என….

அப்படி இருக்கும் தனது ஆதவன், இன்று எங்கோ செல்ல போகிறான்…

ஆம் உணர்வால் உயிரால் அவனையேத் தொடர்ந்திருக்கும் அவளின் கதி இனி என்ன?...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

தந்தையின் சொற்படி இன்னொருவனுக்கு மாலையிடப்போகிறாளா?... இல்லை எங்கோ கண் காணாத தூரத்தில் சென்று வாழ இருப்பவனை தடுத்து நிறுத்தப்போகிறாளா?...

என்ன செய்யப்போகிறாள் அவள்?.... கேள்விகள் மட்டுமே மனதை வியாபித்திருக்க, அதனை ஒதுக்கி தூர தள்ளிவிட்டு, அந்த ரம்யமான காலைப்பொழுதினை கண் குளிர காண ஆரம்பித்தாள் அவள் மீண்டும் அந்த ஆதவனில் பார்வையை செலுத்தி….

எத்தனை மணி நேரம் அப்படியே நின்றாளோ, கதவு தட்டும் ஓசை கேட்டு திரும்பியவள், கடிகாரத்தை பார்த்த பொழுது, மணி 9.30 தாண்டி இருந்தது…

ஒரு விரக்தி புன்னகை எட்டிப்பார்க்க, விரைந்து சென்று கதவைத் திறந்தாள்….

“என்னம்மா… தூங்கிட்டியா?... சரி… குளிச்சிட்டு வா… சாப்பிடலாம்…”

அவளின் அன்னை அக்கறையாய் வினவ, அவளுக்கு கண்கள் கலங்கியது…

“நீங்க போங்கம்மா… நான் வரேன்…”

அவள் மெதுவாக சொல்ல,

“சரிம்மா சீக்கிரம் வா…” என நகர்ந்த அன்னையிடம்,

“அம்மா… அப்பா சாப்பிட்டாங்களா?...” என்று கேட்டாள் அவள்…

“அவர் என்னைக்கு நீ சாப்பிடாம சாப்பிட்டிருக்குறார்?...”

சொல்லிவிட்டு வெள்ளந்தியாய் சிரித்த அன்னையினை ஓடிவந்து கட்டிக்கொண்டாள் அவள் வேகமாக….

“என்னம்மா?... என்னாச்சு?....” அவர் சற்றே பதறியபடி கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லம்மா.. சும்மா தோணுச்சு… அதான்...” என்றாள் அவள் புன்னகையை வரவழைத்துக்கொண்டு…

“நல்லா தோணுச்சு…” என சிரித்தபடி சொல்லியவர், அவளை சாப்பிட வர சொல்லிவிட்டு செல்ல, அவளோ அவர் சென்ற திசையையேப் பார்த்துக்கொண்டிருந்தாள் அமைதியாக….

மூவரும் சாப்பிட்டு முடித்த பின்னர், தனதறைக்குச் செல்ல இருந்த மகளிடம்,

“மாப்பிள்ளை வீட்டிலிருந்து 11 மணிக்கு வரேன்னு சொல்லியிருக்காங்கம்மா… நீ ரெடியாகி இரும்மா… சரியா?..” என்றார் அவளின் தந்தை…

வார்த்தைகளே வராது, சரி என்பதற்கு ஆதாரமாய் தலை மட்டும் அசைத்துவிட்டு தனதறைக்கு வந்தவள், சத்தமில்லாமல் கதவை சாத்திவிட்டு இமை மூடிக்கொண்டாள் இறுக்கமாக….

பின்னர் மெல்ல இமைகளை அவள் பிரித்தபோது, காலண்டரில் காட்டிய தேதியில் பதிந்தது அவளின் கண்கள்…

மனம் மேலும் சோர்வடைய, எழுந்து உடை மாற்றிக்கொண்டாள்…

அலங்காரம் ஏதும் செய்து கொள்ளவில்லை…. சாதாரண காட்டன் புடவை, நெற்றியில் எப்போதும் வைக்கும் சிறிய பொட்டு, தினமும் பின்னிக்கொள்வது போல் தலைமுடியை தளர பின்னிக்கொண்டிருக்கையில் அவளின் அன்னை வந்து, அவளிடம் மல்லிகைச் சரத்தினை கொடுத்துவிட்டு செல்ல, அவள் கைகள் பின்னலை விட்டுவிட்டு மல்லிகையை கையில் எடுத்தது…

“மல்லிகைப்பூ வாசம் நல்லா இருக்கும்ல…. அப்படியே அதை கையில அள்ளி வாசம் பிடிக்கும் போது சூப்பரா இருக்கும்ல…. அம்மா வாங்கும்போது நான் அப்படித்தான் செய்வேன்… டேய் சாமிக்கு போடுற பூவை இப்படி எல்லாம் வாசம் பிடிக்கக்கூடாதுன்னு திட்டுவாங்க… நான் கேட்கமாட்டேன்… எப்பவும் அப்படித்தான் செய்வேன்…. நீயும் அப்படி செய்திருக்கியா எப்பவாச்சும்?...”

“ஹ்ம்ம்… கையில எடுத்து பார்க்குறது பிடிக்கும்… தலையில வைக்கவும் பிடிக்கும்… அப்படி தலையில வைக்கும்போது தானாவே அந்த வாசம் எனக்கு கிடைச்சிடும்… அதனால நான் தனியா ஸ்மெல் பண்ணி பார்த்தது இல்லை….”

“ஹ்ம்ம்… ஆமால்ல… நீ தலையில வைக்கும்போது உனக்கே அந்த ஸ்மெல் உணரமுடியும்ல…”

“ஹ்ம்ம்.. ஆமா….”

“என்ன சிரிக்குற மாதிரி இருக்கு?...”

“அதெல்லாம் ஒன்னுமில்லையே….”

“இல்ல நீ சிரிச்ச… எதுக்கு சிரிச்சன்னு சொல்லு…”

“அவ்வளவு ஆசையா?? மல்லிகைப்பூவை வாசம் பிடிக்குறதுல?...”

“ஹ்ம்ம்… அப்படியும் சொல்லிக்கலாம்… ஆனா அது தலையில இருக்கும்போது வாசம் பிடிக்கணும்னு தான் ரொம்ப நாளா ஆசை…”

அவன் சொன்னதும், சட்டென சிரித்துவிட்டாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.