(Reading time: 8 - 15 minutes)

01. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

தயம்….

பொழுது புலரும் அதிகாலை வேளை, யார் கண்களுக்கும் நான் தெரிந்திட மாட்டேன் என மறுத்து இருளோடு கலந்திருந்தவள், தன்னவனின் வருகைக்காக மட்டுமே காத்திருக்க, அவனும் அவளை காத்திருக்க விடாது, தன் வருகையை தெரிவிக்க முயல, அவளின் மறைந்திருந்த அழகு முகம், உலகிற்கு வெளிச்சமாகிறது நீல நிறமாக….

தன்னவளின் வண்ண நிறம், அவனைக் கவர்ந்திழுக்க, இரவின் பிரிவில், அவளைத் தழுவி கொள்ளும் பொருட்டு, அவன் அவளின் அருகில் செல்ல, அவனின் ஒளி பட்டு, அவள் மேனி எங்கும் மின்னியது பொன்னாக….

பார்க்க பார்க்க தெவிட்டாத அந்த பொலிவினை அவன் தன்னவளிடம் கண்டு, அவளையே இமைக்காமல் பார்த்திட, அவளின் முகமோ வெட்கி சிவக்க, அவனோ அதைக் கண்டு மெய் சிலிர்த்தான்….

தன்னவனின் பார்வை தன் முகத்திலேயே இருப்பதைக் கண்டவளுக்கு மேலும் நாணம் ஏற்பட, வெட்கம் கொண்டு மேகத்தினுள் தஞ்சம் புகுந்து கொள்கிறாள் அவனின் காதலி…

மேகத்தினுள் சென்றவள், எட்டி எட்டி அவனைப் பார்த்திட, அவளது நீல நிறமும், அவனால் ஏற்பட்ட பொலிவும் சேர்ந்து அவளுக்கு புது அழகினை கொடுத்திட…

புது பொன் எழில் ஒன்று பூத்து தன் முன் வாசம் பரப்புகிறதோ என்றெண்ணி வியந்து போனான் அவன்….

அவனின் மெய் மறந்த நிலையைக் கண்டவள், அவனுக்கு பழிப்பு காட்டிக்கொண்டே மேகத்தினுள் புகுந்து புகுந்து ஒட, அவனோ அவளைப் பிடித்து தன் கைச்சிறைக்குள் அடைத்துக்கொள்ளும் வண்ணம், அவளின் பின்னேயே தன் கதிர்களால் தொடர, அங்கே உதயமானது அவனின் பிரவேசம் மட்டுமல்ல… ஓர் இனிய காதலின் எழில் வண்ண துவக்கமும் தான்…

ஆதவன் வானில் தோன்றும் அந்த தருணம் உலகிற்கு ஒளியை மட்டும் அள்ளித்தருவதில்லை… அந்த நாளின் இனிய துவக்கத்தினையும் அவனே தருகின்றான்….

அதோடு அவனின் ஆருயிர்க்காதலி நீலத்திறத்தவளுக்கும், தன் வருகையை செந்நிறக்கதிரின் மூலம் வெளிப்படுத்த, அவளின் முகத்திலோ புத்தம் புது பொலிவு தோன்றுகிறது….

அது அந்த வான மங்கைக்கு புத்தம் புதியதோர் எழிலையும் கொடுத்திட, அதில் மயங்கி தான் போகிறான் அவனும் தினமும்….

அணுதினமும் நிகழும் இவ்வுதயம் அவனுக்கும் அவளுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று… அந்த ஓர் நொடிக்காகவே இருவரும் தவமிருக்கின்றனர்….

பகல் முழுவதும் நிகழும் அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம், மாலை வேளையில் நிறைவுக்கு வர, இருவரும் ஒருவரில் ஒருவர் தங்களைத் தொலைத்து ஒன்றோடொன்று கலந்து போகின்றனர்….

தன் காதலனை ஆரத் தழுவிக்கொள்பவள், அவனை விட்டு பிரிய நேரும் போது, தன்னையே இருளில் மறைத்துக்கொள்கிறாள்…

அவள் மட்டும் தான் தன்னை மறைத்துக்கொள்கிறாளோ, அவனும் தன்னையே மறைய செய்து விடுகிறானே…

எனில் இருவரில் யார் காதல் அழகு?... தன்னவனே அங்கு இல்லை என்னும் போது, வேறு யார் கண்களுக்கும் நான் ஏன் தெரிந்திட வேண்டும் என இருளோடு கலக்கும் அவள் காதல் அழகா?...

இல்லை இருளோடு மறைந்திருப்பவளுக்கு, துணையாக, அவளுக்கே தெரியாமல் தன்னையும், தன் மீதுள்ள ஒளியினையும் மறைத்து, இரவு முழுவதும் அவளுக்கு அருகிலேயே இருந்து அவளை பாதுகாத்திடும் அவன் காதல் அழகா?...

இனம் பிரித்து சொல்லிட முடிந்திடுமா இவர்களின் காதல் அழகினை?...

சில நொடி பிரிவில் கூட காதலை மிக அழகாக இவர்களை விட யார் சொல்லிடக்கூடும்?...

ஆதவன் அவனது வட்ட முகமும், அது கொண்ட பொலிவும், வர்ணித்திட முடியுமா என்ன ஓரிரு வார்த்தைகளில்….

ஆதவனை ஆயிரம் பேர் நேசித்தாலும், அவன் தனது நீலத்திறத்தவளின் கண்களுக்கு மட்டுமே குளிர்ச்சியை தருகிறான்…

அவள் மட்டும் என்ன?... அள்ளி கொஞ்சிட தோன்றிடும் அவளின் அழகினை ரசிக்காதவர் யாரேனும் உண்டா இங்கே?...

எனினும் அவள் முகத்தில் உண்டாகும் பொலிவு அவனுக்கே சொந்தம்…. அவனால் மட்டுமே அப்பொலிவினை கொடுத்திட முடியும்…. வேறு யாரேனும் அவளை நெருங்கிட கூட அவள் அனுமதித்திட மாட்டாள்….. அது சாத்தியமுமன்று….

சூழ்ச்சி செய்து ஆதவனை அவளிடமிருந்து பிரித்திட எண்ணுகையில், அவள் தன்னை நெருங்க நினைப்பவர்களை எச்சரிக்கிறாள் தனது இடி முழக்கங்களால்…

அதோடு மின்னல் என்னும் ஒளிக்கற்றையைக்கொண்டு தன்னை நெருங்க நினைப்பவர்களை எரித்து பஸ்பமாக்கி விடுகிறாள் உடனேயே…

ஆயிரமே இருந்தாலும் அவள் அந்த ஆதவனின் உயிர் அல்லவா…. அவனுக்கு இருக்கும் சக்தி அவளிடத்திலும் இருக்கும் அல்லவா… அதில் விந்தை ஏதும் இல்லையே…..

மேலும் அது இரவாக இருந்தால், அவளின் மின்னல் கீற்று பார்ப்பவர் கண்களை கூட பறித்துவிடும் வல்லமை கொண்டதாக மாறி விடுகிறது… தன்னவன் அருகில் இல்லாத அத்தருணத்தில் அவள் தனது கண்ணீரை வெளிப்படுத்த, அது மழையாக ஜனித்து நிலத்தில் விழுந்து உயிர்களை தழைக்க செய்கிறது…

அவளது கண்ணீர் கூட பல உயிர்களை வாழவே வைக்கிறது… பல உயிர்களை வாழ வைக்க அவளது கண்ணீர் துணை புரிகின்றதென்று அவள் உணர்ந்து கொண்ட நாளிலிருந்து, தன்னவன் தன் அருகே இல்லாத சமயத்தில் தன் விழி நீரை அவள் உதிர்ப்பாள்…

ஏனெனில் அவன் அவள் எதிரே இருக்கும் சமயத்தில், அவள் விழி நீர் வழிந்திட அவன் அனுமதி தருவானா என்ன?... இல்லைப் பார்த்துக்கொண்டு தான் பேசாமல் இருப்பானா?...

ஆதவனுக்கும் வானமங்கைக்கும் உள்ள காதலைப் பற்றி சொன்னால் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்… வார்த்தைகளுக்கும் பஞ்சமில்லை… அவர்களின் காதலும் கொஞ்சமில்லை…

ம்ம்… இனிதே அவர்களின் உதயம் தொடரட்டும்… இதயங்களையும் வென்றிடட்டும்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.