(Reading time: 9 - 18 minutes)

19. நிர்பயா - சகி

Nirbhaya

பார்வதியின் மடியில் சிரத்தை சமர்ப்பித்துவிட்டு விழிகளை மூடிக்கொண்டு ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் நிர்பயா.அழுதழுது அவள் கண்கள் ஓய்ந்து போய் இருந்தன.அவளுக்கு எந்த வகையில் ஆறுதல் கூறுவது என்பது ஒருவருக்கும் புலப்படவில்லை.எல்லாம் பூர்த்தியான சமயம் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றே எண்ணம் கொள்ள தூண்டியது.

பார்வதியின் கண்களும் கசிந்திருந்தன.நிலையை சரிசெய்ய வைத்தியநாதனும் ஊரில் இல்லை.

"கண்ணா!எழுந்து கொஞ்சமாவது சாப்பிடும்மா!"-அவரது குரல் அடைத்தது.

அவள் மௌனமாக எழுந்து அமர்ந்தாள்.அவளது முகத்தில் அப்படி ஒரு இறுக்கம்!!கண்கள் நன்றாக சிவந்திருந்தன...ஒரு வார்த்தையும் உதிக்காமல் மனம் போன போக்கில் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள்.

"நிர்பயா!"

"............."

"நில்லும்மா!"-அவள் பார்வதியின் வேண்டுதலுக்கு செவிமடுக்கவில்லை.

மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள்!மழை பெரும் மனதோடு அவளுக்கு பாதுகாப்பாய் உடன் வந்தது.ஒரு நடைப்பிணம் நடப்பதாக தான் தோன்றும் அச்சமயம் அவளை பார்ப்பதற்கு!!

மனம் முழுதும் அவ்வளவு வேதனை உயிரை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது!!அவள் நடந்துக் கொண்டிருந்த அந்தப் பாதை முடிவடையும் இடம் ஆழமான பள்ளத்தாக்கு என்பதை அவள் அறிய தவறி இருந்தாள்!!

சாய்வு நாற்காலியில் சாய்ந்துக் கொண்டு ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தார் சங்கரன்.

"என்னண்ணா நான் பேசிட்டு இருக்கேன்.நீங்க அமைதியா இருக்கீங்க?"

".............."-சங்கரன் தன் தொண்டையை செறுமினார்.

"இப்போ என்ன செய்ய சொல்ற?"

"அண்ணா!அம்மா சொத்தெல்லாம் நிர்பயா பெயருக்கு மாற்றி எழுதிட்டாங்கண்ணா!அது ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் சொத்தில்லை.300 கோடின்னா!"

".............."

"அவ இதையே சாதகமாக்கி நம்மளை பழிவாங்குவா!"-அவர் நாற்காலியை விட்டு எழுந்தார்.

"அவ கோழை இல்லை!ஒருத்தன் பலவீனமா இருக்கும்போது தோற்கடிக்கிறது அவளுக்கு தெரியாது!"-என்றவர் வெளியே கிளம்பினார்.லட்சுமி ஆடிப்போனார்.சில தினங்களாக சங்கரனிடம் காணப்படும் மாற்றங்கள் அது அவருக்கு அச்சமூட்டின.

"என்னங்க!சாப்பிட வாங்க!"-பல்லவியின் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

மௌனமாக பதில் ஒன்றும் கூறாமல் வெளியே சென்றார்.

"நீங்க செய்த தப்புக்கு ஒருநாள் நிச்சயம் தண்டனை அனுபவிப்பீங்க!நான் அந்த தண்டனையை உங்களுக்கு தருவேன்.அந்த நியாய தீர்ப்பு நாளில் நிர்பயாவோட விஸ்வரூப தரிசனத்தை நீங்க பார்ப்பீங்க!"-என்றோ ஒருநாள் அவள் கூறிவிட்டு சென்றது இதயத்தை கிழித்தது.

"என் அப்பான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா அவருக்கு அப்படி இல்லை!"-இந்த வாக்கியமும் மனதினை தைத்தது.

அப்படியென்றால் அவளது உயர்ந்த அன்பினை கொச்சைப்படுத்திய பாவி நான் தானா??

மனம் ஒடுங்கிப்போய் கொட்டும் அந்த மழையில் அப்படியே மண்டியிட்டார் சங்கரன்.கண்களை உடைத்துக்கொண்டு கண்ணீர் உருப்பெடுத்தது.

அவள் தண்டனை அளிக்கவில்லை..ஆனால்,அவளது மன்னிப்பு அவருக்கு மரணத்தை விட கொடூரத்தை காட்டிக் கொண்டிருந்தது.

உணர்வு ரீதியாக ஒருவனது பலத்தை பலவீனமாக்க மன்னிப்பை தவற சிறந்த ஆயுதம் இல்லை.தவறிழைத்தவர்கள் தலைகுனியும் நிலையில் நிற்க அவர்கள் ஆற்றிய தவறை மன்னித்து விடுவதே சிறந்த உபாயம்!

வானம் தனது எச்சரிக்கை மணியை பலமாக அடித்தது.மின்னலின் உதவியால் மட்டுமே எதிர்படும் பொருட்களை பார்க்கும் அளவிற்கு கும்மிருட்டு!!

ஏதோ உணர்ந்தவராய் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தார் சங்கரன்.மழை ஓய்ந்தப்பாடாய் இல்லை.திரும்பி நடக்க முயன்றவரின் கண்களில் பட்டது சற்று தூரத்தில் நடந்து வரும் ஒரு பெண்ணின் உருவம்!!சில நொடிகள் அந்த இருட்டு அவளை அடையாளம் கண்டுப்பிடிக்க இயலாதப்படி செய்தது.அடுத்த நொடி ஆண்டவன் ஆணையாக ஏற்று மின்னல் தன் வெளிச்சத்தை உலகிற்கு தர,பள்ளத்தாக்கை நோக்கி செல்பவள் தான் ஈன்ற புதல்வி என்ற உண்மை அவருக்கு புரிந்தது.

"நிர்பயா!"-அவள் தானா என்ற சந்தேகத்துடன் பார்த்தார் அவர்.அவள் கண்கள் நேர் பார்வையிலே இருக்க,பள்ளத்தாக்கின் நுனியில் கால் வைத்தவள் தடுமாறினாள்.

"நிர்பயா!"-கத்தியப்படி வேகமாக ஓடிச்சென்றார்.அவள் கீழே விழுவதற்கும் அவரது கரம் அவளை தாங்கி பிடிப்பதற்கும் சரியாக இருந்தது.அப்போது தான் சுயநினைவு வந்தவள் முகம் அச்சத்தில் வெளிறிப்போனது.அவள் அச்சத்தோடு நிமிர்ந்துப் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.