(Reading time: 12 - 23 minutes)

அமேலியா - 18 - சிவாஜிதாசன்

Ameliya

மேலியாவின் இமைகள் லேசாக அசைந்து மெல்ல கண்களைத் திறக்க முற்பட்டாள். அவளால் முழுமையாகத் திறக்க முடியவில்லை. அவள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தாள். அவள் உடல் லேசாக அசைந்தது. வசந்தின் கைகள் இறுகப் பற்றி இருந்தமையால் அவள் அசௌகரியமாக உணர்ந்தாள்.

அமேலியா விழிக்கப் போகிறாள் என்று வசந்தும் புரிந்து கொண்டான். அவள் கண் விழித்து தன்னைப் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்த வசந்த், பிரச்சனையை எவ்வாறு கையாள்வது என குழம்பினான். அமேலியாவை அவசரமாக தூக்கிக் கொண்டு தன் வாசலில் படுக்க வைத்துவிட்டு, தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு படபடப்போடு மூச்சை விட்டான். அவனது இதயத்துடிப்பு எகிறியது.

சில நிமிடங்களில் அமேலியா வலியால் முனங்கிக்கொண்டே கண்களைத் திறந்தாள். அவள் விழிகள் படபடத்தன. எங்கு இருக்கிறோம் என்று அவள் சுயநினைவு கொள்ள இரண்டு மூன்று நிமிடங்கள் கழிந்தன. மெல்ல எழுந்த அவளின் தலை பாரமாகத் தெரிந்தது. அவள் மனதில் பயம் சூழ ஆரம்பித்தது.

எதற்காக தான் மயக்கமடைந்தோம் என்பதை அவள் புரிந்துகொண்டாள். வசந்தின் அறையில் இருந்து வந்த துப்பாக்கி சப்தம் அவளை நிலைகுலைய வைத்து மயக்க நிலையில் தள்ளியது. அவளது நினைவுகள் ஈராக்கை நோக்கி சென்றன. துப்பாக்கி குண்டு அவள் காதோரம் கடந்து சென்ற நிகழ்வு அவளுள் நிழலாடியது.

வசந்தின் அறையில் இருந்து எதற்கு துப்பாக்கி சப்தம் கேட்டது? யார் சுட்டார்கள்? எதற்காக சுட்டார்கள்? என்று அவள் மலையளவு கேள்விகளை மனதினுள் எழுப்பிக்கொண்டிருந்த வேளையில் கதவு திறக்கப்பட்டு வசந்த் அவள் முன் தோன்றினான்.

அமேலியா மெல்ல திடுக்கிட்டாள். வசந்தைக் கடந்து அவள் கண்கள் அறையைத் துளாவின. எதற்காக அப்படி பார்க்கிறாள் என்று வசந்திற்கு புரியவில்லை. அவள் குழம்பி இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

தொண்டையை மெதுவாக செருமி அமேலியாவின் கவனத்தை தன் மேல் திருப்பினான் வசந்த். வசந்தை நோக்கினாள் அமேலியா. வசந்தின் கண்கள் சுவற்றிலிருந்த கடிகாரத்தை நோக்கின. கடிகார முள் சரியாக ஒன்பதைக் காட்டியது

தான் நீண்ட நேரம் இதே இடத்தில மயக்கநிலையில் கிடந்துள்ளோம் என்று நினைத்த அமேலியா, அருகில் கிடந்த உடைந்த தேனீர் குவளையை எடுத்துக்கொண்டு குழப்பத்துடன் மாடிப்படியில் இறங்கிச் சென்றாள். வசந்த்திற்கு நிம்மதி மூச்சு வெளிவந்தது. 'நம்ம மேலே எந்த சந்தேகமும் வரலை' என்று எண்ணியபடி புன்னகை சிந்தினான்.

மாடிப்படியில் இறங்கிக்கொண்டிருந்த அமேலியா, திடீரென நின்று கண நேரத்தில் திரும்பி வசந்தை நோக்கினாள். புன்னகை புரிந்துகொண்டிருந்த வசந்த், அவள் அவ்வாறு நோக்கியதைக் கண்டு திடுக்கிட்டான்.

விளங்கமுடியா குழப்பம் அமேலியாவிற்குள் தோன்றியது. அவள் மயக்கநிலையில் இருந்தபோது காதுகளில் ஒலித்த சில பேச்சுக் குரல்கள் நினைவில் வந்தது. அதில் ஒரு குரல் வசந்தினுடையது என சில நிமிடங்களில் புரிந்துகொண்டாள். மற்றொரு குரல் யாருடையது என தெரிந்து கொள்ள அவள் மிகவும் சிரமப்பட்டாள். ஆனால், அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சோபாவில் படுத்துக்கொண்டிருந்த நிலா கண்விழித்து அமேலியாவை நோக்கினாள்.

"அக்கா"

சிந்தனை தடைபட்டு நிலாவை நோக்கினாள் அமேலியா.

"நான் இவ்வளவு நேரமான தூங்கி இருக்கேன்? ராத்திரி வேற ஒண்ணுமே சாப்பிடல, ரொம்ப பசிக்குது" என்று கூறிக்கொண்டே சைகை மொழியில் அமேலியாவிற்கு புரியவைத்தாள் நிலா.

"முதல்ல பல் துலக்கிட்டு குளிக்கலாம். அப்புறம் சாப்பிடலாம்" என்று அமேலியாவும் நிலாவிற்கு புரியும்படி சைகை மொழியில் கூறினாள்.

"தாத்தா தான் இல்லையே. பல் விளக்கி தான் ஆகணுமா?" என்று புலம்பிய நிலாவை குளிக்க வைக்க குளியலறைக்கு அழைத்துச் சென்றாள் அமேலியா.

நிலாவை குளிக்க வைத்துக்கொண்டிருந்தபோது மீண்டும் வசந்தின் முகமும் அவன் சிரிப்பும் அமேலியாவின் மனக்கண் முன்னால் நிழலாடியது. எதற்காக அவன் சிரித்தான்? எப்பொழுதும் தன்னைக் கண்டால் அவன் முகம் வெறுப்பை தானே காக்கும்?

குழாயில் வழிந்தோடிய தண்ணீரை பிடித்து அமேலியாவின் முகத்தில் அடித்தாள் நிலா. "என்ன யோசனை? எனக்கு குளிருது" என நடுங்கினாள் நிலா.

நிலாவின் உதறலைக் கண்டு புன்னகைத்த அமேலியா, அவள் தலையை துவட்டியபடி வெளியே அழைத்து வந்தாள்.

"நான் டிரஸ் போட்டுக்கிறேன். நீங்க சீக்கிரம் சமையல் செய்யுங்க. எனக்கு ரொம்ப பசிக்குது" என்றபடி அறையை நோக்கி ஓடினாள்.

நிலாவின் சைகையைப் புரிந்துகொண்ட அமேலியா  சமையலறையை நோக்கிச் சென்றாள். ஹாலில் வசந்த் அமர்ந்திருந்ததைக் கண்டு அவளது நடையின் வேகம் குறைந்து அவனை ஓரக் கண்ணால் நோக்கியபடி மெல்ல சென்றாள்.

செய்தித்தாளை படிப்பது போல் பாவலா காட்டியபடி  அமேலியாவின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தான் வசந்த். கடமைக்காக சமையல் செய்துகொண்டிருந்த அமேலியா, வசந்தை அவ்வப்போது நோக்கியபடி இருந்தாள். வசந்தும் அதை உணராமல் இல்லை.

திடீரென அமேலியாவின் வலது கை சுருக்கென்றது. அவளது நினைவு மீண்டும் பின்னோக்கி ஓடியது. சுயநினைவு அற்ற நிலையில் இருந்தபோது வலது கையில் யாரோ குண்டூசியால் குத்தியதுபோல் இருந்ததை அவள் எண்ணிப் பார்த்தாள். குண்டூசியால் குத்தி முடித்த பின் பெண்ணொருத்தி அவளருகில் இருந்து எதையோ கூறிக்கொண்டிருந்தது அவள் நினைவுக்கு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.