(Reading time: 12 - 23 minutes)

தான் மயக்கமான வேளையில் தன்னைச் சுற்றி மூன்று பேர் பேசிக்கொண்டிருந்தது அவளுக்குப் புரிந்தது. பின்னர் ஏன் காலையில் அவர்களைக் காணவில்லை என குழம்பினாள்.

தன்னைச் சுற்றி நின்று என்ன பேசிக்கொண்டிருந்தார்கள்? ஒருவேளை போலீசிடம் தன்னை ஒப்படைத்துவிடுவார்களோ? என அவள் பயந்தாள். மீண்டும் அவள் கையில் வலியெடுக்க, அந்த இடத்தை மெதுவாக தேய்த்துக்கொண்டாள்.

அதைப் பார்த்த வசந்தின் முகம் கலவரமானது. அவள் நேற்று நடந்தவைகளை எண்ணிப் பார்க்கிறாள் என்பதை அவன் தெரிந்து கொண்டான். அவள் எதையோ புரிந்துகொண்டாள் என ஊகித்த அவன், மேற்கொண்டு அவள் சிந்திப்பதைத் தடுத்து நிறுத்த, எதையோ எடுப்பது போல் சமயலறைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்ததும், சமையல் செய்துகொண்டிருந்த அமேலியா சிறிது ஒதுங்கி நின்றாள்.

என்ன சமையல் செய்கிறாள் என்று நோட்டமிட்டுவிட்டு அவளை ஒருமுறை நோக்கிய வசந்த், அவளை நெருங்கி கடந்து சென்றான். அவனது கைவிரல் எதேச்சையாக அவள் கைகளை உரசியது . சட்டென அமேலியாவின் உணர்வுகள், இரவில் வசந்தின் கையைப் பற்றியதை நினைவுபடுத்தின.

அமேலியாவின் முகம் அதிர்ச்சியால் சிவந்தது. இதயம் படபடத்தது. மூச்சை இழுத்து இழுத்து விட்டாள். அவள் நெஞ்சம் விம்மி விம்மி எழுந்தது. தவறு செய்துவிட்டதைப்போல் உணர்ந்த அவள், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயற்சித்தாள்.

"சாப்பாடு தயாரா?" என்று நிலா ஓடி வந்தாள்.

நிலாவின் முன் சோக முகத்தைக் காட்ட விரும்பாத அமேலியா,  பொய் சிரிப்போடு, "எல்லாம் தயார்" என்பது போல் சைகையில் கூறினாள்.

"சீக்கிரம் கொண்டு வாங்க. பசிக்குது. வாங்க வாங்க" என்றபடி டைனிங் டேபிளில் அமர்ந்தாள் நிலா.

செய்தித்தாளை படித்து வெறுப்பாய் மடித்து வைத்த வசந்த்,  "ஹே நிலா அதிசயமா குளிச்சிருக்க போல" என்று பெரிய நகைச்சுவையைக் கூறிவிட்டதைப் போல சிரித்தான்.

"உன்னை போல நினைச்சியா மாமா. நீ ஆறாவது படிக்குற வரைக்கும் பீடிங் பாட்டில்ல பால் குடிச்சதான?"

"ஹே யாரடி சொன்னது உனக்கு?"

"தாத்தா தான் சொன்னாரு. அறிவே இல்ல மாமா உனக்கு"

"அவரு விளையாட்டுக்கு சொல்லிருப்பாரு நிலா. நீ பெரியவங்கள இப்படி எல்லாம் கேள்வி கேக்கக்கூடாது"

சமைத்த உணவைக் கொண்டு வந்தாள் அமேலியா. அவளது கண்கள் வசந்தை முறைத்தன. அவளின் பார்வையைச் சமாளிக்க முடியாமல் தலையைத் தாழ்த்திக்கொண்டான் வசந்த்.

சமைத்த உணவை நிலாவிற்கு பரிமாறிவிட்டு, 'நீயே தட்டில் போட்டு சாப்பிடு' என்ற தொனியில் வசந்தின் அருகே உணவை நகர்த்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

"அக்கா நில்லுங்க"

அமேலியா நின்றாள்.

"மாமாவுக்கு சாப்பாடு போடுங்க. இல்லன்னா அதுக்கு கோவம் வரும்" என்று அமேலியாவிற்கு புரியும்படி ஊமை மொழியில் கூறினாள் நிலா.

வேறு வழி இல்லாமல் நிலா சொன்னதை அமேலியா செய்ய முடிவெடுத்து .வசந்திற்கு பரிமாறினாள். அவள் கைகள் லேசாக நடுங்கின. அதை வசந்தும் கவனித்தான். அவள் அசௌகரியமாக உணர்வதைக் கண்ட வசந்த், அவனே உணவை தட்டில் போட்டுக்கொண்டு உண்ண ஆரம்பித்தான்.

இரண்டு வாய் உண்டதும் அவன் கண்கள் கலவரத்தை கக்கின. மிரட்சியோடு நிலாவை நோக்கினான்  நிலாவும் அவ்வாறே நோக்கினாள்.

"நிலா சாப்பாட்டுல ஏதாச்சும் குறையுதா?"

"ஆமா மாமா. உப்பு, காரம், சாம்பார் சாதம் இப்படி எல்லாமே குறையுது. உண்மையிலயே இது என்னது மாமா?"

"இது உன் தாத்தா குடிக்க வேண்டிய கஞ்சினு நினைக்கிறேன். டம்ளர்ல குடுக்குறதுக்கு பதிலா தட்டுல கொடுத்திருக்கா"

"நான் ஸ்கூல்க்கு போகணும் மாமா. ப்ளீஸ்"

"என்னடி அதிசயமா இருக்கு. இன்னைக்கு நீ லீவு போடுற பிளான் தான வச்சிருந்த?"

"மூணு வேளையும் அக்கா சமையலை சாப்பிட முடியாது மாமா. தயவு செஞ்சி என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போ. கெஞ்சி கேட்டுக்கிறேன்"

"சரி சரி. அவ நம்மளையே பாக்குறா. சாப்பிடுறது போல பாவலா பண்ணு. வருத்தப்படபோறா"

அமேலியா நிலாவைப் பார்த்து, "சாப்பாடு எப்படி?" என சைகையில் கேட்க, நிலா மிரட்சியான முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, "நல்லா இருக்கு" என சைகையில் கூறி வசந்த்தை நோக்கினாள்.

வசந்த் இரண்டு மூன்று வாய் உண்ண முயற்சித்து அதில் தோற்றுப்போனவனாய் ஃபைலை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்து காரை நோக்கி ஓடினான்

நிலாவும் பள்ளிச் சீருடையை அவசரமாக உடுத்தி, "அக்கா, நான் போயிட்டு வரேன்" என அவளும் வெளியே ஓடினாள்.

எதற்காக அவர்கள் விசித்திரமாய் நடந்துகொள்கிறார்கள் என புரியாத அமேலியா, நிலாவின் தட்டில் இருந்த உணவை எடுத்து வாயில் வைத்து, உண்ண முடியாமல் கீழே துப்பினாள்.

அவர்கள் ஏன் அப்படி ஓடினார்கள் என்ற காரணம் அவளுக்குப் புரிந்தது. ஓவியம் தெரிந்த அளவுக்கு சமையல் தெரியாதது அவளுக்கே எரிச்சலைத் தந்தது.

"மாமா மாமா சீக்கிரம் வண்டி எடு. சாப்பாடு வாங்கித் தா".

"இருடி. வண்டி சாவியை காணோம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.