(Reading time: 12 - 23 minutes)

"யோ! எனக்கு ரொம்ப பசிக்குது"

"என் ரூம்ல தான் சாவி இருக்கும். இரு வரேன்" என வீட்டின் வாசற் கதவைத் திறந்து, மாடிப்படியில் ஏறி தன் அறையை நோக்கி சென்று கதவினைத் திறந்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவன் அறையில் அமேலியா நின்றுகொண்டு இரவில் அவள்  படுத்திருந்த படுக்கையினைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.  வசந்த் திடீரென வந்ததும் பயந்து நடுங்கினாள்.

வசந்த் சாந்தமாய் அமேலியாவை நோக்கினான்.

"பயப்படாத" என்று சைகை மொழியில் கூறினான். ஆனால், அமேலியாவின் பயம் கூடிக்கொண்டே போனது.

"நேத்து என்ன நடந்ததுன்னு நீ தெரிஞ்சிக்கணும், அவ்வளவு தானே" என அவன் கூறிக்கொண்டே, பேப்பரும் பென்சிலும் எடுத்து, 'அவள் மயக்கமடைந்ததது, பின்னர் அவன் காரில் சென்று ஜானை அழைத்து கொண்டு மருத்துவம் படிக்கும் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்து வைத்தியம் பார்த்தது' என ஓவியமாய் வரைந்து அவளுக்கு புரியவைக்க முயற்சி செய்தான்.

"இப்போ புரிஞ்சிதா நேத்து என்ன நடந்ததுன்னு?" என்று வசந்த் அமேலியாவைப் பார்த்து கேட்டான்.

அமேலியாவிற்கு, 'அது ஓவியமா, இல்லை தன் ஓவியத் திறமையை கிண்டல் செய்கிறானா' என்று புரியவில்லை.

"உனக்கு புரியலனு தெரியுது. ஆனா என்னால இவ்வளவு தான் வரைய முடியும். நீ மயக்கமடைஞ்சிட்ட. எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல"

அமேலியா திரு திருவென விழித்தாள்.

"ஐயோ! இவளுக்கு எப்படி புரிய வைக்குறதுனே தெரியலையே. ப்ளீஸ்! எனக்கு நேரம் ஆகுது. இந்த படத்தை பார்த்து எப்படியாவது புரிஞ்சிக்க. நான் வரேன்" என்று கூறி அங்கிருந்து வேகமாய் ஓடினான் வசந்த்.

வசந்த் வரைந்த ஓவியத்தை அமேலியா நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளால் முழுவதும் புரிந்துகொள்ள முடியவில்லையென்றாலும் ஓரளவு புரிந்துகொண்டாள். அவள் இதழில் புன்னகை இழைந்தோடியது.

காரணம், நேற்று நடந்த விஷயம் அல்ல. இதுவரை நிலா வரைந்த ஓவியம் தான் தன் வாழ்நாளில் கண்ட மிக மோசமான ஓவியம் என நினைத்திருந்த அமேலியாவிற்கு, வசந்த் வரைந்த ஓவியத்தை ஒப்பிட்டு பார்க்கையில் இனி இது போன்ற மோசமான ஓவியத்தை தன் வாழ்நாளில் காணவே முடியாது என சிரித்தாள்.

ரியாக பத்து மணி அளவில் வசந்த் தன் அலுவலகத்தை அடைந்து பார்க்கிங்கில் தனது காரை நிறுத்திவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான். தனது சட்டைப் பையில் இருந்த ராஜினாமா கடிதத்தை எடுத்து மீண்டும் ஒரு முறை வாசித்து விட்டு வேண்டாவெறுப்பாக காரை விட்டு கீழிறங்கி அலுவலகத்திற்குள் சென்றான்.

இந்த அலுவலகத்திற்குள் நுழைவது இன்று தான் கடைசி. தன் கனவின் கடைசி அத்தியாயத்தை எழுதி முடித்து விட்டதாக அவன் எண்ணினான். லிப்ட்டில் ஏறி நான்காவது மாடிக்கு சென்றான்.

அந்த இடமே பரபரப்போடு இருந்தது. ஏராளமானவர்கள் குழுமி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். கூட்டத்தில் ஜெஸிகாவும் நின்றுகொண்டிருந்தாள். அவள் அருகில் சென்றான் வசந்த்.

"என்ன ஆச்சு ஜெஸ்ஸி?"

"வசந்த் இவ்வளவு நேரம் நீ எங்கே  போன?"

"ஓ, எனக்காக தான் காத்துட்டு இருக்கீங்களா? சாரி ஜெஸ்ஸி என்னால ஓவியத்தை கொண்டுவர முடியல"

"நீ கொண்டு வந்திருந்தாலும் பிரயோஜனப்பட்டிருக்காது வசந்த்"

"என்ன சொல்லுற?"

"விளம்பரத்துல நடிக்கிற கதாநாயகி காலைல பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாளாம். எழுந்து நடக்க ஒரு வாரம் ஆகுமாம். அதான் இங்கே ஒரே டென்ஷன்"

"கடவுள் என்னை காப்பாத்திட்டாரு" என்று சந்தோஷத்தில் குதித்த வசந்த், "தேங்க் யு ஜெஸ்ஸி" என்று ஜெசிக்காவின் கன்னத்தை கிள்ளிவிட்டு வேகமாய் ஓடினான்.

"ஹே எங்கே போற?"

"ஹீரோயின் தான் வரலையே. இன்னைக்கு நான் லீவு" என்றபடி வேகமாய் சென்றான் வசந்த்.

அவன் மனது சந்தோஷத்தில் திக்குமுக்காடியது. தனது லட்சியம் முடிந்து விட்டதென எண்ணியவனுக்கு கடவுள் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டதாகவே அவன் நினைத்தான்.

சந்தோஷத்தில் அவனுக்கு தலைகால் புரியவில்லை. காரை எடுத்துக்கொண்டு வேகமாய் சென்றான். நிம்மதிப் பெருமூச்சில் மனம் லேசாக ஆனது.

அமேலியாவின் முகம் அவன் மனக்கண் முன்னால் தோன்றியது. மயக்கத்தில் இருந்தவள் திடீரென தனது கையைப் பிடித்ததும் அவளை மடியில் படுக்க வைத்ததும் அவன் மனதில் ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியது.

காலையில் அவள் பார்வையும் அதில் இருந்த கோபமும் கூட ரசிக்கும்படியாய் இருந்தது. தான் கூற வந்ததை அவள் புரிந்துகொண்டிருப்பாளா இல்லை தன்னை தவறாக எண்ணி இருப்பாளா என அமேலியாவை நினைத்தவாறே பயணம் செய்தான்.

ரெஸ்டாரண்ட் ஒன்றில் அவன் கார் நின்றது, மதியம் சாப்பிட உணவை வாங்கியவன், அமேலியா அந்த மோசமான உணவை மீண்டும் உண்ண வேண்டாம் என அவளுக்கும் சேர்த்து உணவை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

வீட்டின் கதவைத் திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி, மேகலா கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவள் முன் அமேலியா சமைத்த உணவு இருந்தது.

தொடரும்...

Episode # 17

Episode # 19

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.